Manivannan Death Anniversary : அரசியல் படங்களின் இலக்கணம்.. அபார நடிகன்.. ரசிகர்கள் மறக்காத மணிவண்ணன் நினைவு நாள்
தமிழ் சினிமாவில் இதுவரையில் வெளியான அரசியல் சார்ந்த படங்களுக்கு எல்லாம் புது இலக்கணம் படைக்க ஆணிவேராக இருந்தவர் மணிவண்ணன்
தமிழ் சினிமா கண்ட மாபெரும் கலைஞர்களில் ஒருவர் இயக்குநர், நடிகர், வசனகர்த்தா என பன்முகம் கொண்டவராக திகழ்ந்த மணிவண்ணன். அவ்வளவு எளிதில் அவரை தமிழ் சினிமா ரசிகர்களால் மறந்து விட முடியாது.
கணவனால் கைவிடப்பட்ட ஒரு கிராமத்து அபலைப் பெண்ணின் மனநிலையை ஆச்சு அசலாக சித்தரித்த ஒரு 'கோபுரங்கள் சாய்வதில்லை' என்ற படத்தின் மூலம் 1982-ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் மணிவண்ணன். அன்று தொங்கிய அவரின் பயணம் தொடர் வெற்றிகளை பெற்றுத்தந்தது. சுமார் 15 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட கருத்துள்ள கலவையான படங்களை கொடுத்தார். காதல், சென்டிமென்ட், ஆக்ஷன், அரசியல், திரில்லர், சாதி என அவர் கை படாத ஜானர்களே கிடையாது.
இந்தியாவில் வேரூன்றியிருக்கும் இன்றைய அரசியல் நிலையை 29 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 'அமைதிப்படை' என்ற ஒற்றை படத்திலேயே வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். தமிழ் சினிமாவில் இதுவரையில் வெளியான அரசியல் சார்ந்த படங்களுக்கு எல்லாம் புது இலக்கணம் படைக்க ஆணிவேராக இருந்தவர் மணிவண்ணன் எனலாம். அசைக்க முடியாத அந்த படத்தின் வெற்றியை இன்று வரையில் ரீமேக் செய்யக்கூட யாரும் துணியவில்லை என்பதிலேயே அவரின் அசாத்திய துணிச்சல் தெரிகிறது. அமாவாசையாக இருந்த சத்யராஜ் பின்னர் ஒட்டுமொத்த தமிழகத்தையே ஆட்டிவைக்கும் எம்.எல்.ஏ. நாகராஜா சோழனாக மாறிய பிறகு அவரின் ட்ரான்ஸ்பர்மேஷன்தான் இன்று பல அரசியல்வாதிகளின் நிலையாக இருக்கிறது.
அரசியலை நேரடியாக தைரியமாக படமாக்க கூடிய துணிச்சல் கொண்ட மணிவண்ணன் அமைதிப்படை படத்தை தொடர்ந்து தோழர் பாண்டியன், ஆண்டாள் அடிமை, தாய்மாமன் போன்ற படங்களின் மூலம் அரசியல் பேசினார். திரை வாழ்க்கையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு போன்ற முற்போக்கு மற்றும் பகுத்தறிவு கொண்ட கருத்துக்களுக்கு ஆதரவாகவும் அரசியல் இயக்கங்களுக்கு தன்னால் முடிந்த அளவு உறுதுணையாக இருந்து வந்தார்.
ஒரு இயக்குநராக மணிவண்ணனை எந்த அளவு தமிழ் திரையுலகமும், ரசிகர்களும் கொண்டாடினார்களோ அதே அளவு அவரை நடிகராகவும் கௌரவிக்கப்பட்டார். காதலுக்கு மரியாதை, உள்ளதை அள்ளித்தா, காதல் கோட்டை, அவ்வை சண்முகி, கோகுலத்தில் சீதை, சங்கமம் என ஏராளமான வெற்றிப்படங்களில் ஒரு பங்காளனாக இருந்துள்ளார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போனாலும் மனதில் நடிக்கும் ஒவ்வொரு காட்சியிலும் அனைவரின் மனங்களையும் கவர்ந்து அப்ளாஸ் அள்ளினார். நகைச்சுவை, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் அதை அசால்ட்டாக நடிக்க கூடியவர். 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மணிவண்ணன்.
சங்கமம் படத்தில் கூத்து கலைஞராக கலைக்காக உயிரையே கொடுத்த மணிவண்ணன் நடிப்பு கல்லையும் கரைத்து கண்களை குளமாக்கியது. ஒவ்வொரு கலைஞனின் பிரதிநிதியாக அவரின் வசனங்களும், கொள்கையையும் அவரின் யதார்த்தமான அபார நடிப்பும் அத்தனை பொருத்தமாக வெளிப்பட்டது.
இயக்குநராக, நடிகராக அயராது உழைத்த மணிவண்ணன் 2013ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரின் 10-ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று அவர் தமிழ் சினிமாவில் விதைத்த கருத்துக்கள், சிந்தனைகள் மூலமும் தமிழ் சினிமாவில் செதுக்கிய கதாபாத்திரங்களின் மூலம் ஆலவிருட்சமாக வேரூன்றியுள்ளார்.