போதைப் பொருட்களுக்கு தனி பட்ஜெட் ஒதுக்கப்படும்...இடியை தூக்கி போட்ட பிரபல மலையாள நடிகை
சினிமாவில் போதைப் பொருட்களுக்கு என தனியாக பட்ஜெட் மற்றும் அறைகள் ஒதுக்கப்படும் என பிரபல மலையாள நடிகை மற்றும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர் சர்ச்சையில் மலையாள திரைத்துறை
ஒருபக்கம் கேரள சினிமாக்களை மக்கள் பாராட்டினாலும் இன்னொரு பக்கம் கேரளம் சினிமாத் துறை தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கடந்த ஆண்டு ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து பல நடிகர்கள் , தயாரிப்பாளர் ,மற்றும் இயக்குநர்களின் பெயர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் இடம்பெற்றன. கேரள திரைத்துறையில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதை சமீபத்திய நிகழ்வுகளே உதாரணம். மலையாள நடிகை வின்ஸி அலொஷியஸ் அளித்த புகாரில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை போதைப் பயன்பாட்டிற்காக காவல்துறை அவரை விசாரணை செய்தது. இயக்குநர் கலித் ரஹ்மான் ஆகியோர் கஞ்சா மற்றும் பிற போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்காக கைது செய்யப்பட்டார்கள். அந்த வகையில் தற்போது பிரபல மலையாள நடிகை மற்றும் தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் அதிர்ச்சிகரமான தகவல் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருட்களுக்கு என தனி பட்ஜெட் சாண்ட்ரா தாமஸ் அதிர்ச்சி
மனோரமா பத்திரிகை நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சாண்ட்ரா தாமஸ் இப்படி கூறியுள்ளார் " 10 ஆண்டுகளுக்கு முன்பே போதைப் பொருட்களின் பயன்பாட்டிற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை திரைத்துறை அமைப்புகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் இன்று போதைப் பொருட்கள் செட்டில் வெளிப்படையாக பயன்படுத்தப் படுகின்றன. இதை சரி செய்ய யாரும் முன்வரவில்லை. ஏனால் தயாரிப்பாளர்களுக்கு இவர்கள் தேவைப் படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இன்று இதற்கு என்று தனியாக பட்ஜெட் ஒதுக்குகிறார்கள். தனியாக அறைகளை ஒதுக்குகிறார்கள். ஆண் பெண் என்கிற எந்த பேதமும் இல்லாமல் எல்லாரும் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.
ஒரு சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த திரைத்துறையையும் குறை சொல்லிவிட முடியாது என்கிற பிரபல தயாரிப்பாளர் லிஸ்டின் கருத்திற்கு எதிராக சாண்ட்ரா பேசினார். " எல்லா தரப்பினருக்கும் செட்டில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன என்பது அந்த தயாரிப்பாளர்களுக்கு தெரியவில்லையா. உண்மை என்னவென்றால் அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களது படம் பாதியில் நின்றுவிடும் என்கிற பயத்தால் அவர்கள் இதை எல்லாம் கண்டுகொள்வதில்லை. ஒரு நடிகருக்கு கெட்ட் பெயர் ஏற்பட்டால் அது அந்த மொத்த படத்திற்கு கெட்டது என்பதால் இதுகுறித்து எந்த வித முடிவும் எடுக்காமல் இருக்கிறார்கள். "





















