Surya Sethupathi : பெரிய நடிகர்களையே ட்ரோல் பண்றாங்க.. சாமர்த்தியமாக பதிலளித்த விஜய் சேதுபதி மகன்
சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது குறித்து நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி பதிலளித்துள்ளார்.
சூர்யா சேதுபதி
மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப் படும் விஜய் சேதுபதி தனது 50-வது படத்தை எட்டியுள்ளார். தந்தை ஒரு பக்கம் தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருக்க தற்போது விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஒரு கை பார்த்துவிடலாம் என நடிகராக களமிறங்கியுள்ளார். பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ஃபீனிக்ஸ் வீழான்'. ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் ட்ராமாவாக உருவாகியுள்ள இப்படத்தின் அனல் தெறிக்கும் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய மகன் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார்.
என்ன பண்ணனும்? எப்படி பண்ணனும்? என்ன நடக்கணும் என எதுவுமே திட்டம் போடல.
மகனை நினைத்து பெருமைப்பட்ட விஜய் சேதுபதி
"அவன் சினிமாவுல வருவான்னு நான் துளியும் நினச்சு பார்க்கவே இல்லை. ஏன்னா இந்த இண்டஸ்ட்ரில சர்வைவ் பண்றது ரொம்ப கஷ்டம். இங்க தாக்கு பிடிக்குறது ரொம்ப கஷ்டம் என நான் பல தடவை அவன்கிட்ட பேசி இருக்கேன். இங்க பிரஷர் ஹேண்டில் பண்றது ரொம்ப கஷ்டம். அது என்னோட குழந்தைக்கு எவ்வளவு பாரமா இருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனா அவனுக்கு இதுதான் பிடிச்சு இருந்துது. அனல் அரசு மாதிரி அற்புதமான ஒரு மனிதரோட படத்துல அவன் அறிமுகமாவது எனக்கு ரொம்ப சந்தோஷம். இந்த படத்தோட டீசர் பார்த்து நான் மிகவும் அகமகிழ்ந்தேன்.
இதுவரைக்கும் நான் அவனோட 19 ஃபாதர்ஸ் டே கொண்டாடி இருக்கேன். ஆனா இந்த முறை இது ஒரு அற்புதமான ஃபாதர்ஸ் டே. வாழ்க்கை பல அற்புதங்களை என்னுடைய வாழ்க்கையில் நிகழ்த்தி இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று. இதை நிகழ்த்தி காட்டிய அனல் அரசு மாஸ்டருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என விஜய் சேதுபதி பேசினார்.
நம்ம எல்லாம் ஒன்னுமே இல்ல
இந்த டீசர் வெளியீட்டின்போது நடிகர் சூர்யா சேதுபதி பத்திரிகையாளர்களை சந்தித்தார். "தந்தையர் தினத்திற்கு என் அப்பாவுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் என் குடும்பத்தினர் அனைவரையும் வரவழைத்து இந்த டீசரை பார்க்க சொன்னேன்" என்று கூறினார்.
ஃபீனிக்ஸ் படத்தின் அறிவிப்பின்போது 'நான் வேற அப்பா வேற ' என்று சொன்னது சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது "நான் அப்போது மீடியாவில் பேச வேண்டும் என்பதற்காக பேசவில்லை. நான் ரொம்ப பதற்றமாக இருந்தேன். ரொம்ப விளையாட்டா சொன்னது சீரியஸாக மாறிவிட்டது. மற்றபடி நான் ரொம்ப ஜாலியான நபர். என்னை ட்ரோல் செய்தது எல்லாம் பார்த்தேன். இங்கு இருக்கும் பெரிய பெரிய நடிகர்களையே ட்ரோல் செய்கிறார்கள். நம்ம எல்லாம் ஒன்னுமே இல்ல." என்று சூர்யா பதிலளித்துள்ளார்.