Mansoor Ali Khan: நியாயமா பாத்தா த்ரிஷா தான் உங்க மேல கேஸ் போடணும்.. மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!
Mansoor Ali Khan: நடிகை த்ரிஷாவை அவதூறாகப் பேசியது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் மன்சூர் அலிகானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மன்சூர் அலி கான்
நடிகை த்ரிஷா பற்றி அவதூறாக பேசியதைத் தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. லியோ படத்தில் த்ரிஷாவுடன் பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகள் இல்லை என்று மன்சூர் அலிகான் பேசியதற்கு நடிகை த்ரிஷா கடுமையாக எதிர்வினையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்னை படுவேகமாக இணையத்தில் சூடுபிடித்தது. திரையுலகினரைச் சேர்ந்த பலர் த்ரிஷாவுக்கு தங்களது ஆதரவையும் மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பையும் தெரிவித்தார்கள். மேலும் இது தொடர்பாக மன்சூர் அலிகான் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்தன. மேலும் நடிகர் சங்கமும் நடிகர் மன்சூர் அலிகானுக்கு கண்டனங்கள் தெரிவித்தது.
முட்டுக் கொடுத்த மன்சூர்
இதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் பேசியது இந்தப் பிரச்னையை மேலும் தீவிரமாக்கியது. தான் பேசியது எந்த விதத்திலும் தவறில்லை என்றும், தனக்கு எதிரான எந்தவிதமான சட்ட நடவடிக்கையை எதிர்த்தும் தான் மோதத் தயாராக இருப்பதாக மன்சூர் அலிகான் கூறினார். இதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது ஐ பி சி பிரிவு 509 பி மற்றும் இதனுடன் தொடர்புடைய பிற பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.
மேலும் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும், அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டது. மன்சூர் அலிகான் தன் சார்பில் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து த்ரிஷாவிடம் மன்னிப்புக் கேட்டார் மன்சூர் அலிகான்.
மான நஷ்ட வழக்கு
மன்சூர் அலிகான் மீது எந்த விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நடிகை த்ரிஷா விளக்கமளித்த நிலையில், நடிகை த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகிய மூவரின் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர்தார் மன்சூர் அலிகான்.
மூவரும் தனக்கு தலா ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொது இடத்தில் அவமரியாதையாக மன்சூர் அலிகான் பேசியதற்காக நடிகை த்ரிஷா தான் அவர் மீது மான நஷ்ட வழக்கு போட வேண்டும் என்று கூறினார். மேலும் இப்படியான அநாகரிகமான செயல்களில் தொடர்ச்சியாக மன்சூர் அலிகான் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும், தான் எந்த வித தவறும் செய்யவில்லை என்றால் பொதுவாக ஏன் மன்சூர் அலிகான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் டிசம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.