Madhampatty Rangaraj: குழந்தைக்கு நான் தான் அப்பா.. ஒருவழியாக ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்
ஜாய் கிரிசில்டா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தனது மனைவி ஸ்ருதியுடன் மாதம்பட்டி ரங்கராஜ் வந்தது பேசுபொருளாக மாறியது.

பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு தான் தான் தந்தை என்பதை பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டுள்ளார். இதன்மூலம் இந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் மெகந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராகவும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்படியான நிலையில் விஐபி வீட்டு நிகழ்ச்சி என்றாலே அதில் சமையல் மாதம்பட்டி ரங்கராஜ் என்னும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை அடைந்தார். அப்படியான தொழில் வாழ்க்கை வளர்ச்சி, தனிப்பட்ட வாழ்க்கையால் தலைகீழானது என சொல்லலாம்.
திருமணம் செய்து ஏமாற்றியதாக புகார்
மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்படியான நிலையில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். இருவருக்கும் இடையே உறவு இருந்து வருவதாக தகவல் வெளியாகி புகைப்படங்களும் வைரலான நிலையில் சில மாதங்களுக்கு முன் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த புகைப்படத்தை ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். அதற்கு மறுநாளே தான் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாகவும் அதிர்ச்சி கொடுத்தார். 2023 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தான் கருவுற்றதால் அவர் தன்னிடமிருந்து விலகியதாகவும் தனது குற்றச்சாட்டில் தெரிவித்திருந்தார்.
தொடர்ச்சியாக மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ்
ஆனால் தன் மீதான புகாரை சட்டப்படி சந்திப்பேன் என மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்திருந்தார். அதேசமயம் ஜாய் கிரிசில்டா நீங்கள் எங்கேயும் தப்ப முடியாது என்கிற ரீதியில் தொடர்ச்சியாக இருவரும் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இப்படியான நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தை ஜாய் கிரிசில்டா நாடினார். அவர் அளித்த மனுவில், தான் கருவுற்றிருப்பதால் தன்னால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை.
அதனால் தன்னுடைய பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.6.50 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை காவல்துறை மற்றும் மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு தனது மனைவி ஸ்ருதியுடன் மாதம்பட்டி ரங்கராஜ் வந்தது பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தந்தை என ஒப்புக்கொண்டார்
இந்நிலையில் ஜாய் கிரிசில்டா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ‘மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டதையும், தன்னுடைய குழந்தைக்கு அப்பா என்பதையும் சமீபத்தில் நடந்த விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் மற்றும் மகளிர் குற்ற தடுப்பு துணை ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. குழந்தைக்கு தந்தை தான் என ஒப்புக்கொண்டதால் டிஎன்ஏ பரிசோதனை தேவையில்லை எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் மாதம்பட்டி ரங்கராஜின் தனிப்பட்ட பிரச்னை முடிவுக்கு வந்ததாக சொல்லப்பட்டாலும், அவரின் தொழில் வாழ்க்கையில் இது என்ன மாதிரியான மாற்றத்தை உண்டாக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.





















