MS Bhaskar: பார்த்தாலே வெறுப்பா இருக்கு.. எம்.எஸ்.பாஸ்கரை திட்டிய சரத்குமார், நெப்போலியன்!
Cinema Rewind: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் எம்.எஸ்.பாஸ்கர். காமெடி, வில்லன், குணச்சித்திரம் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசால்ட்டாக செய்வார்.

தான் நடித்த ஒரு கேரக்டருக்காக வீட்டில் சாப்பாடு கூட போட மறுத்தார்கள் என பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் எம்.எஸ்.பாஸ்கர். காமெடி, வில்லன், குணச்சித்திரம் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசால்ட்டாக அதனை செய்து பாராட்டுகளை அள்ளி விடுவார். அந்த வகையில் 2023ம் ஆண்டு வெளியான பார்க்கிங் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்றிருந்தார். சீரியல், சினிமா மட்டுமல்லாது அனிமேஷன் படங்களுக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் பன்முக தன்மை கொண்டவராக திகழ்கிறார். அவர் இல்லாத தமிழ் படங்களே மிக குறைவு என சொல்லும் அளவுக்கு அதிக படங்களில் நடித்து வருகிறார்.
அசர வைத்த ஆண்டவர் லிங்கம்
ஒரு நேர்காணலில் பேசிய எம்.எஸ்.பாஸ்கரிடம், உங்களுடைய திரைப்பயண கேரக்டர்கள் ஒருவரை சிரிக்கவும் வைத்திருக்கிறது, அழுகவும் வைத்திருக்கிறது. ஆனால் நேரில் பார்த்த யாராவது திட்டியிருக்கிறார்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘நான் பண்ணிய ஒரு கேரக்டருக்காக சாப்பாடு கூட போட மாட்டேன்னு சொல்லியிருக்கிறார்கள். எங்கு என நினைக்கிறீர்கள். இந்த சம்பவம் என்னுடைய வீட்டில் தான் நடைபெற்றது. நான் ராதிகா நடித்த செல்வி நாடகத்தில் ஆண்டவர் லிங்கம் என்ற கேரக்டரில் நடித்தேன். கதைப்படி எனக்கு வில்லன் வேடம். நான் அந்த சீரியலில் நடித்ததைப் பார்த்து விட்டு என்னுடைய அம்மா திட்டியிருக்கிறார்கள். நாடகம் முடிந்ததும் என்னுடைய மனைவியிடம் சாப்பாடு எடுத்து வைக்குமாறு கூறினேன்.
அதற்கு இப்படி நடித்து விட்டு உங்களுக்கு சாப்பாடு கேட்கிறதா என்ற ரீதியில் கோபமாக ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே இருக்கிறது. நீங்களே போட்டு சாப்பிட்டுகோங்க என தெரிவித்திருக்கிறார். அப்போது என்னுடைய மகள் ஒரு கான்வெண்ட் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். ஒருமுறை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் என்னை அழைத்து பேசினார். நான் என்னுடைய மகள் தான் ஏதோ தப்பு செய்திருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்தேன்.
திட்டிய சரத்குமார், நெப்போலியன்
ஆனால் அந்த மேடம் என்னிடம், நான் டிவி எல்லாம் பார்ப்பேன்.நீங்கள் ஏன் நல்ல கேரக்டர் தேர்வு செய்து நடிக்கக்கூடாது என கேட்டார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான், ஆண்டவர் லிங்கம் நல்ல கேரக்டர் தான் என விளக்க முற்பட்டேன். உண்மையில் அதுதான் எனக்கான பாராட்டு. என்னை திட்டுவது தான் எனக்கு பாராட்டு. அதேபோல் சரத்குமார் அண்ணாவும், நெப்போலியன் பங்காளியும் கூட என்னிடம் சொன்னார்கள்.
எங்க எதிரே வராதீங்க பாஸ்கர் உங்களைப் பார்த்து எரிச்சலா இருக்கு. நாங்கள் எப்படி பட்டாபியாக உங்களை ரசித்தோமோ, அதே அளவுக்கு ஆண்டவர் லிங்கமாக பார்த்து வெறுக்கிறோம் என கூறினார்கள். அந்த மாதிரி நிறைய பாராட்டு கிடைத்திருக்கிறது” என எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார்.





















