Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜின் புதிய ஹீரோ இவரா? மீண்டும் போதை கதையா? புதிய பாதையா?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

மாநகரம் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி என அடுத்தடுத்த படங்கள் மூலமாக மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்தார்.
அல்லு அர்ஜுனை இயக்கும் லோகேஷ்:
இவர் தமிழில் கடைசியாக இயக்கிய லியோ மற்றும் கூலி விஜய் மற்றும் ரஜினிகாந்த் என உச்சநட்சத்திரங்களை வைத்து இயக்கியிருந்தாலும் இந்த படம் ரசிகர்களின் மனங்களை கவரவில்லை. கூலி படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத காரணத்தால் ரஜினி - கமல் இருவரையும் இணைத்து இயக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜ் தவறவிட்டார்.
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தெலுங்கில் தன்னுடைய புதிய படத்தை இயக்க உள்ளார். தெலுங்கின் முன்னணி நடிகராக இருந்த அல்லு அர்ஜுன் அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். புஷ்பா படம் மூலமாக பான் இந்தியா நடிகராக அவர் உருவெடுத்த நிலையில், அட்லீ இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது.
எல்சியூவா? புதிய கதைக்களமா?
அதன் படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த படம் தொடங்கும் என்று கருதப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியது.

லோகேஷ் கனகராஜின் எல்சியூ யுனிவர்ஸ் கதைக்களத்திற்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கூலி படம் தோல்விப்படமாக அமைந்தாலும் அவர் கைதி 2 படத்தை இயக்குவார் என்று கருதப்பட்ட நிலையில், அவர் திடீரென தெலுங்கு படத்தை இயக்கச் சென்றுள்ளார். இந்த படம் எல்சியூ வரிசையில் வருமா? அல்லது தனி கதைக்களமா? என்பது படம் வெளியான பிறகே தெரிய வரும் என்று கருதப்படுகிறது.
மீண்டும் போதையா?
மாநகரம் படம் தவிர லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்கள் போதைப் பொருளை மையமாக கொண்டே உருவாகியுள்ளது. கூலி படம் மட்டும் உறுப்பு கடத்தல், தங்க வாட்ச் கடத்தலை மையமாக கொண்டு உருவாகியிருந்தது. லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்கள் மூலமாக அதிகளவு போதை கலாச்சாரத்தை பரப்புவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. புஷ்பா மற்றும் புஷ்பா 2 ஆகிய படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்றாலும் அதுவும் செம்மரக் கடத்தலையே மையமாக கொண்ட படம். ஒரு விதத்தில் அல்லு அர்ஜுனுக்கு அது குறையாகவும் முன்வைக்கப்பட்டது.
லோகேஷ் கனகராஜ் அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் புதிய படத்தில் இதுவரை தன் படங்களில் இல்லாத ஒரு புதிய கதைக்களத்தை கையில் எடுப்பாரா? அல்லது வழக்கம்போல போதை, கஞ்சா கதையே தெலுங்கில் எடுப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.





















