Samantha: சமந்தா விமர்சனங்களை ஒதுக்கி, பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார்.. மீண்டும் மருத்துவர் ஃபிலிப்ஸ் காட்டம்
Samantha Ruth Prabhu: தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியது தொடர்பாக டிகை சமந்தா விளக்கமளித்த நிலையில் தற்போது அவரை மீண்டும் மருத்துவர் ஃபிலிப்ஸ் விமர்சித்துள்ளார்
சமந்தாவை சாடிய மருத்துவர்
வைரஸ் பாதிப்புகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைட் நெபுலைசேஷன் (Hydrogen Peroxide Nebulisation) எனப்படும் சிகிச்சையை பயன்படுத்துவதாக நடிகை சமந்தா (Samantha) தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் கல்லீரல் நிபுணரும் பிரபல மருத்துவருமான டாக்டர் பிலிப்ஸ் என்பவர் நடிகை சமந்தாவை கடுமையாக சாடி, தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நடிகை சமந்தா ஆரோக்கியம் பற்றிய மருத்துவ அறிவற்றவர். பகுத்தறிவு மற்றும் விஞ்ஞானரீதியாக முற்போக்கான இந்த சமூகத்தில், ஆபத்து விளைவிக்கிறார். இதுபோன்ற சமூகத்தில் சமந்தாவுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று அவர் சமந்தாவை கடுமையாக சாடியிருந்தார்
சமந்தா விளக்கம்
மருத்துவர் ஃபிலிப்ஸின் விமர்சனத்தைத் தொடர்ந்து சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். இதில் அவர் நிபுணர்களின் அறிவுறுத்தலின் படியும், தானே ஆய்வு செய்த பிறகு தனக்கு பயனளித்த மருத்துவ சிகிச்சை முறைகளையே தான் பரிந்துரைத்ததாக தெரிவித்திருந்தார் .
மேலும் பணம் இல்லாத பலரால் இந்த சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாமல் போய் இருக்கும். இந்த மாதிரியான மாற்று சிகிச்சை முறைகள் பணம் இல்லாத பலருக்கு பயனுள்ளதாக அமையும் என்ற நோக்கத்தில் மட்டுமே தான் பரிந்துரைத்ததாக சமந்தா தெரிவித்தார். தான் தவறு செய்திருந்தாலும் தன்னை இவ்வளவு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியிருக்க வேண்டாம் என்றும் அவர் கூறியிருந்தார்
பாதிக்கப்பட்டவராக பாவனை செய்கிறார் சமந்தா.
Ms. Samantha Ruth Prabhu has responded to my "provocative" criticism of her endorsement of unscientific, pseudoscientific and baseless alternative medicine therapies by playing the victim card and endorsing more alternative practices.
— TheLiverDoc (@theliverdr) July 5, 2024
Please note, she is a serial offender in… https://t.co/eRvsXrGlZq pic.twitter.com/iRadZgrHTE
சமந்தாவின் விளக்கத்தைத் தொடர்ந்து மருத்துவர் ஃபிலிப்ஸ் மற்றொரு பதிவில் சமந்தாவை கடுமையாக விமர்சித்துள்ளார். இதில் அவர், "சமந்தா நீண்டதொரு விளக்கம் கொடுத்திருக்கிறார். நான் கூறிய அறிவியல்பூர்வமான விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் தன்னை பாதிக்கப்பட்டவராக பாவித்து பாவனை செய்கிறார். இந்த மாதிரி தவறான மருத்துவ ஆலோசனைகளை சமந்தா இதற்கு முன்பும் வழங்கி இருக்கிறார்.
மக்களின் உடல்நலத்தைப் பற்றி எந்த வித அக்கறையும் இல்லாத இந்த மாதிரியான சமூக வலைதள பிரபலங்கள் மக்களிடம் பல தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள். இவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்றதான் என்னை மாதிரியான மருத்துவர்கள் தங்கள் வேலையை விட்டு கருத்து சொல்கிறோம். தான் செய்தது தவறு என்று சமந்தா உணர்ந்திருந்தால் உடனடியாக அந்த பதிவை நீக்கிவிட்டு தனது லட்சக்கணக்கான ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.
உண்மையில் நீங்கள் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் மருத்துவ ரீதியான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்." என்று மருத்துவர் ஃபிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.