Leo Running Time: விக்ரம், மாஸ்டர் படங்கள விட கம்மி நேரம் தான்.. லியோ படத்தின் ரன்னிங் டைம் இதுதான்!
லோகேஷின் முந்தைய படங்களான மாஸ்டர், விக்ரம் இரண்டுமே கிட்டத்தட்ட 3 மணி நேர ரன்னிங் டைமை கொண்டிருந்தது.
விஜய்யின் 'லியோ’ படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகி விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த மாசம் ரிலீஸ்
விஜய் - லோகேஷ் கனகராஜ் இருவரும் மாஸ்டர் படத்துக்குப் பிறகு இணைந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘லியோ’. வரும் அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் நாளுக்குநாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.
படக்குழுவும் அதற்கு ஏற்றார் போல் தொடர் அப்டேட்களை வாரி வழங்கத் தொடங்கியுள்ளன. கடந்த சில நாள்களாக லியோ போஸ்டர் ஃபெஸ்ட் எனும் பெயரில் போஸ்டர்களை வரிசையாக வெளியிட்டு வருகின்றனர்.
ரன்னிங் டைம் இதுதான்!
இந்த போஸ்டர்களில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் படத்தின் கதைக்கான ஹிண்ட்களை தரும் வண்ணம் அமைந்துள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் ஆவலுடன் பட வெளியீட்டை எதிர்நோக்கி காத்துள்ளனர். இந்நிலையில், லியோ படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதன்படி லியோ படம் இரண்டு மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் - விஜய் இணைந்த முந்தைய படமான மாஸ்டர் திரைப்படம், 3 மணி நேரங்கள் 1 நிமிடம் ரன்னிங் டைமை கொண்டிருந்தது. இந்நிலையில், படம் ஹிட் அடித்தாலும், படத்தின் க்ளைமேக்ஸ் மற்றும் இரண்டாம் பாதி இறுதியில் சலிப்பு தட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதேபோல் லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 54 நிமிடங்களாக அமைந்தபோதிலும் படம் ரசிகர்களை ஒன்ற வைத்து கோலிவுட்டின் மிகப்பெரும் ஹிட் படங்களில் ஒன்றாக உருவெடுத்தது.
அப்போ அடுத்த பாகம் இருக்கா?
இந்நிலையில் லோகேஷின் முந்தைய படங்களைப் போல் அல்லாமல் இப்படத்தின் ரன்னிங் டைம் குறைவாக உள்ளது, மேலும் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
சஞ்சய் தத், அர்ஜூன், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி, கௌதம் மேனன், மிஸ்கின் என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ல நிலையில், லியோ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருமா என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும், எல்சியு எனப்படும் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸில் இப்படம் இணையுமா எனும் கேள்வி ஏற்கெனவே எழுந்துள்ள நிலையில், இப்படத்தில் போஸ்ட் க்ரெடிட் சீன் ஒன்று இடம்பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இசை வெளியீட்டு விழா
மற்றொருபுறம் லியோ திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துள்ளனர். முன்னதாக படத்தின் முதல் பாடலான நா ரெடி வரவேற்பு, விமர்சனங்கள் இரண்டையும் பெற்றது. இந்நிலையில், போஸ்டர்கள் ரிலீசுக்குப் பிறகு, இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் செப்.30ஆம் தேதி லியோ படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அனிருத்தின் ஜெயிலர் பட விழா பிரம்மாண்டமாக இதே அரங்கில் நடைபெற்ற நிலையில், அனிருத்தின் அடுத்த இசை விருந்தை எதிர்பார்த்து அவரது ரசிகர்களும் காத்துள்ளனர்.