Latha Rajinikanth: ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது வருத்தமே... ஆனால்...! - மனம் திறந்து பேசிய மனைவி லதா
2010, 11 ஆம் ஆண்டுகளில் என் கணவர் உடல்நிலை எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். எல்லா குடும்பத்திலும் இருப்பது போல தான் ஏற்றம், இறக்கங்கள் என் குடும்பத்திலும் இருந்தது.
நான் என் கணவர் ரஜினியை தலைவராக தான் பார்த்தேன். அவர் அரசியலுக்கு வராதது வருத்தம் தான் என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கோச்சடையான் படம்
நடிகர் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, ஷோபனா உள்ளிட்ட பலரின் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் “கோச்சடையான்”. இப்படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த நிலையில் தமிழ் சினிமாவில் முதல் மோஷன் கேப்சர் படம் என்ற பெருமையும் இப்படத்துக்கு உண்டு.
எந்திரன் படத்துக்குப் பின் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் அதிலிருந்து மீண்டு வந்து நடித்த படம் தான் கோச்சடையான். ஆனால் இந்த படம் ரசிகர்களை கவர தவறியது. மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் தோல்வியை தழுவியது. இப்படம் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தது. இப்படியான நிலையில் இந்த படத்தை மீடியா ஒன் நிறுவனம் தயாரித்திருந்தது. ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் விநியோகம் செய்திருந்தது. கோச்சடையான் படத்துக்காக மீடியா ஒன் நிறுவனத்தினர் ஆட் பீரோ நிறுவனத்திடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார்கள்.
இதுதொடர்பான கடன் ஒப்பந்தத்திற்கு ரஜினியின் மனைவியான லதா சாட்சி கையெழுத்திட்டிருந்தார். ஆனால் குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்ததால் லதா ரஜினி மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் இதுவரை ஆஜராகமால் இருந்த லதா நேற்று ஆஜரானார்.
வழக்கு பற்றி விளக்கம்
அப்போது அவர் தலையில் முக்காடு போட்டு சென்றது மிகப்பெரிய அளவில் வைரலானது. இதனைத் தொடர்ந்து சென்னை திரும்பிய லதா, செய்தியாளர்களை சந்தித்து சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பான விளக்கங்களை அளித்தார். அப்போது, “நான் மோசடி எதுவும் செய்யவில்லை. கைது வாரண்ட் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. மீடியா ஒன் முரளி, ஜெயக்குமாரும் வாங்கிய கடனுக்கு நான் உத்தரவாதம் அளித்து கையெழுத்து போட்டேன். ஆனால் அவர்கள் ஒப்பந்தத்தை மாற்றி விட்டார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே எனக்கு இருவரும் ரொம்ப பிரச்சினை கொடுத்து வந்தார்கள்.
நான் சட்டத்துக்கு மதிப்பு கொடுத்து வழக்கில் ஆஜராக சொன்னார்கள் என்பதால் கர்நாடகா நீதிமன்றத்திற்கு சென்றேன். வெயில் அடித்ததால் தலையில் முக்காடு போட்டு சென்றேன்” என கூறினார்.
ரஜினியின் அரசியல் வருகை
அப்போது லதாவிடம், கோச்சடையான் படத்தை நீங்களே சொந்தமாக தயாரித்து இருக்கலாமே? என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “2010, 11 ஆம் ஆண்டுகளில் என் கணவர் உடல்நிலை எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். எல்லா குடும்பத்திலும் இருப்பது போல தான் ஏற்றம், இறக்கங்கள் என் குடும்பத்திலும் இருந்தது. அப்படிப்பட்ட நிலையில் என் கணவர் உடல்நிலை தான் முக்கியம். யார் தயாரிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. ஆனால் படம் நன்றாக வரவேண்டும் தானே நினைப்போம்.அப்படித்தான் நாங்களும் நினைத்தோம்” என கூறினார்.
தொடர்ந்து ரஜினியின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது எனக்கு ரொம்ப வருத்தம் தான். நான் அவரை தலைவராக தான் பார்த்தேன். ஆனால் நியாயமான காரணங்கள் அரசியலுக்கு வராதது பற்றி இருந்தது. அதை மதிக்க வேண்டும். ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என கேட்டதற்கு, ‘இப்பவும் ரஜினி அவரால் முடிந்தளவு தமிழ்நாட்டுக்கு நல்லது பண்ணிட்டு தான் இருப்பாரு’ என லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.