Malaysia Vasudevan: தெம்மாங்கு பாட்டுக்காரன்.. பாடகர் மலேசியா வாசுதேவனின் நினைவு தினம் இன்று!
பாரதிராஜா தொடங்கி ரஜினி, ஸ்ரீதேவி என பலருக்கும் படிக்கல்லாய் அமைந்த 16 வயதினிலே படம் தான் மலேசியா வாசுதேவனுக்கும் அதிர்ஷ்ட கதவாக அமைந்தது.
மறைந்த பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் அவர் குறித்த நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் யாரேனும் சிலர் ஜாம்பவன்களாக வலம் வந்து கொண்டிருக்கும்போது தான் சிலர் சத்தமே இல்லாமல் சம்பவம் செய்வார்கள். அதில் மிக முக்கியமானவர் மலேசியா வாசுதேவன். மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் புகழ்பெற்று திகழ்ந்த காலக்கட்டத்தில் முளைத்த தனித்துவமான குரல் மலேசியா வாசுதேவனுடையது தான்.
பாரதிராஜா தொடங்கி ரஜினி, ஸ்ரீதேவி என பலருக்கும் படிக்கல்லாய் அமைந்த 16 வயதினிலே படம் தான் மலேசியா வாசுதேவனுக்கும் அதிர்ஷ்ட கதவாக அமைந்தது. அப்படத்தில் இடம் பெற்ற ‘செவ்வந்திப் பூ முடிச்ச’ , ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பட பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தார் இந்த மலேசியா வாசுதேவன். அதன்பின்னர் ‘கோவில்மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ’ பாடலும். ‘வான் மேகங்களே… வாழ்த்துகள் பாடுங்கள்' என்ற பாடலும் அவரை எட்டா உயரத்துக்கு அழைத்து சென்று நிதர்சனம். எந்த பாடல் கொடுத்தாலும் மனிதர் பிரித்து மேய்ந்து விடுவார்.
பிரபலமான பாடல்கள்
- மாரியம்மா மாரியம்மா (கரகாட்டக்காரன்)
- காதல் வைபோகமே (சுவர் இல்லாத சித்திரங்கள்)
- பூங்காற்று திரும்புமா (முதல் மரியாதை)
- பூவே இளைய பூவே (கோழி கூவுது)
- பேர் வச்சாலும் (மைக்கேல் மதன காமராஜன்)
- பொதுவாக என் மனசு தங்கம் (முரட்டுக்காளை)
- தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி (தூறல் நின்னு போச்சு)
- ஒரு தங்க ரத்தத்தில் (தர்ம யுத்தம்)
- இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் (சிகப்பு ரோஜாக்கள்)
- ஆயிரம் மலர்களே மலருங்கள் (நிறம் மாறாத பூக்கள்)
- ஒரு கூட்டு கிளியாக (படிக்காதவன்)
- ஆசை நூறுவகை (அடுத்த வாரிசு)
- ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல் (16 வயதினிலே)
என எண்ணற்ற பாடல்களை மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார்.
நடிகராகவும் மலேசியா வாசுதேவன்
1977 ஆம் ஆண்டு அவர் எனக்கே சொந்தம் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்த மலேசியா வாசுதேவன் அதன்பிறகு ரஜினி, கமல்,விஜய், விஜயகாந்த், ராமராஜன் என ஏகப்பட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் கலந்த மிக முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளார். இவரின் மகன் தான் பிரபல நடிகரான யுகேந்திரன் வாசுதேவன். பிரபல பின்னணி பாடகரான இவர் விஜய் நடித்த யூத் மற்றும் பகவதி, அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒருவராக கலந்து கொண்டு மக்களிடையே மிகவும் பரீட்சையமானார்.
ஏற்கனவே நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் பிரச்சினையால் நிகழ்ந்த பக்கவாத பாதிப்பால் மலேசியா வாசுதேவன் பாதிக்கப்பட்டார். பல ஆண்டுகளாக சிகிச்சைப் பெற்று வந்த அவர் குடலிறக்க பிரச்சினை காரணமாக 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி இறந்தார். மலேசியா வாசுதேவன் மறைந்து ஒரு டஜன் ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அந்த காந்த குரலோன் நம்மிடையே ஒலிக்கொண்டிருப்பார்.