(Source: ECI/ABP News/ABP Majha)
குலசாமி இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா... கலந்துகொள்ளாத விமல்... வருத்தம் தெரிவித்த இயக்குநர் அமீர்!
”நான் சும்மா வந்தா போதும், நடிப்பேன், காசு கொடுத்தால் போதும் என்பது ஏற்புடையது அல்ல.கதை நாயகன் நாயகி இங்கு இருந்திருக்க வேண்டும்" என இயக்குநர் அமீர் பேசியுள்ளார்.
நடிகர் விமல் நடிப்பில், இயக்குநர் சரவண சக்தி இயக்கத்தில் வரும் ஏப்ரல் 21ஆம் தேதி திரைக்கு வரவுள்ள திரைப்படம் ‘குலசாமி’
MIK Productions Private Limited தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார். தன்யா ஹோப் நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் சரவண சக்தியின் மகன் சூர்யா வில்லன் வேடத்தில் அறிமுகமாகியுள்ளார்.
ஏப்ரல் 21ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. வைட் ஆங்கில் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனி ஒருவன் எடிட்டர் கோபி கிருஷ்ணா எடிட்டராகவும், ஜீ தமிழ் ராக் ஸ்டார் பின்னணி பாடகர் மஹாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்கள். இப்படத்திற்கு கனல் கண்ணன் சண்டை பயிற்சி அமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
விஜய் சேதுபதி வசனம்
இந்த விழாவில் இயக்குநர் சரவண சக்தி பேசியதாவது: இப்படத்திற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு முதல் நன்றி. அவர் வசனம் எழுதி தந்ததால் தான் இப்படம் மிகபெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சிறப்பான காவல் அதிகாரியாக இருந்த ஜாங்கிட் அவர்கள் எங்களுக்காக இப்படத்தில் நடித்திருக்கிறார் அவருக்கு எங்கள் நன்றி. அமீர் அண்ணன் அவருடைய படங்களை தாண்டி மிகப்பெரிய அன்புள்ள மனிதர் அவர் எனக்காக வந்துள்ளார். சுரேஷ் காமாட்சியும் நானும் ஒன்றாக சுற்றியவர்கள் இப்போது பெரிய தயாரிப்பாளர் ஆகியுள்ளார் அவருக்கு நன்றி.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிகச்சிறப்பான வசனங்கள் தந்துள்ளார். அவரால் படத்திற்கு பெரிய பலம் சேர்ந்துள்ளது. இப்படம் மிகப்பெரிய போராட்டங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளது. இந்தப் படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் இந்நேரத்தில் நன்றிக் கூறிக்கொள்கிறேன். நல்ல கருத்துள்ள படத்தை தந்துள்ளோம் படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி” எனப் பேசினார்.
’புது டீம்’
தொடர்ந்து இசையமைப்பாளர் மஹாலிங்கம் பேசுகையில், “தயாரிப்பாளரும் நானும் ஒரே ஊர்க்காரர்கள். நான் கிராமத்தில் இருந்து வந்தவன் என்பதால் என் கிராமத்து இசையை ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் எனக்குப் பிடித்ததை செய்து கொண்டிருந்தேன் அதைப் பார்த்து இந்தப் படத்திற்கு இசை அமையுங்கள் என்றார் தயாரிப்பாளர். இந்தக்களம் பெரிது, புதிது என்பதால் தயங்கினேன். ஆனால் படக்குழு தைரியம் தந்தார்கள். இயக்குநர் எனக்கு ஊக்கம் தந்தார். நாங்கள் புது டீம் நீங்கள் தான், எங்களுக்கு ஆதரவு தந்து எங்கள் படத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும். நன்றி” என்றார்.
ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவி பேசியதாவது: “ என்னுடைய கேரியரை பிரஸ் போட்டோகிராபராக தான் ஆரம்பித்தேன் பிசி சாரிடம் தான் கேமரா கற்றுக்கொண்டேன். சரவண சக்தி கதை சொன்னபோதே இந்தப்படம் பெரிய வகையில் வரும் என்று தெரிந்தது. சரவண சக்தி மிகச்சிறந்த வகையில் இயக்கியுள்ளார். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்” எனப் பேசினார்.
’வித்தியாசமான விமல்’
நடிகை தேவதர்ஷினி பேசியதாவது: “நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை , படவா படத்தில் நான் நடித்திருக்கிறேன் அதன் மூலம்தான் சரவணன் சாரை எனக்கு தெரியும். அந்தப் படத்தில் நான் விமலுக்கு அக்காவாக நடித்துள்ளேன். இந்தப் படத்தில் அக்கா கதாபாத்திரம் இல்லை, அதனால் தான் என்னை அழைக்கவில்லை. மொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள்.
படத்தின் டிரைலரை பார்க்கும்போது நன்றாக இருந்தது. விமலை நான் இப்படி பார்த்தது இல்லை எப்போதும் கலகலப்பான கதாபாத்திரத்தில் தான் நடிப்பார், ஆனால் இதில் முற்றிலும் வித்தியாசமாக நடித்துள்ளார், இப்படத்தின் இசையமைப்பாளர் சின்னத் திரையில் இருந்தே எனக்கு அவரை தெரியும், ஒரு நல்ல பாடகர். பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது. படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி.
வராத விமல்.. வருத்தம் தெரிவித்த அமீர்
இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர் பேசியதாவது: இயக்குநர் சரவண சக்தி என்னுடைய நண்பர், நான் நடிக்கும் ஒரு படத்தில் உடன் நடிக்கும் சகோதரர். ஒரு இயக்குநர் நடிகராகும் போது சில சங்கடங்கள் இருக்கும் அதை தீர்த்து வைத்தது சரவண சக்தியும், அண்ணாச்சியும் தான். என்னை மிக மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டார்கள். சரவண சக்தி மிகச்சிறந்த திறமையாளர்.
இன்று பொன்னியின் செல்வன் படத்தையே புரமோசன் மூலம் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சுற்றி சுற்றி புரமோசன் செய்கிறார்கள் இன்று சினிமாவின் நிலை இதுதான். அப்படி இருக்கும் போது, இந்தப்படத்தின் நாயகன், நாயகி இங்கு இருந்திருக்க வேண்டும். விமல் எனும் கதாநாயகனை நம்பி, சரவண சக்தியை நம்பி இவ்வளவு பெரிய முதலீட்டை போட்டிருக்கிறார்கள்.
அதை எடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இயக்குநர் அவருக்குத் தெரிந்தவர்களைக் கூப்பிடுவார், ஆனால் உங்களுடைய பொறுப்பு அங்கு என்ன இருக்கிறது. நான் சும்மா வந்தா போதும், நடிப்பேன், காசு கொடுத்தால் போதும் என்பது ஏற்புடையது அல்ல.கதை நாயகன் நாயகி இங்கு இருந்திருக்க வேண்டும், எனக்கு அந்த வருத்தம் உள்ளது. அந்தக்குறையை ஜாங்கிட் சார் வந்திருந்து நிவர்த்தி செய்துள்ளார். இந்தப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்” என்றார்.