(Source: ECI/ABP News/ABP Majha)
Kavignar Vaali: மருத்துவமனையில் வாலி.. பாடலை மாற்றிய கங்கை அமரன்.. “வாடா பின்லேடா” பாடலின் பின்னணி!
Krish: மருத்துவமனையில் இருந்த கவிஞர் வாலிக்கு போன் பண்ணி பாடல் வரிகளை மாற்றி எழுத வைத்த அனுபவத்தை பாடகர் கிரிஷ் பகிர்ந்ததை காணலாம்.
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான பாடகர்களில் ஒருவர் கிரிஷ். தன்னுடைய தனித்துவமான குரலால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். ஆல்பம் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பாடி வந்த கிரிஷை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'வேட்டையாடு விளையாடு' படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான 'மஞ்சள் வெயில் மாலையிலே...' என பாடலை பாடும் வாய்ப்பை கொடுத்தார். முதல் பாடலே கிரிஷுக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது. அதை தொடர்ந்து ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார் கிரிஷ்.
நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட பாடகர் கிரிஷ், கவிஞர் வாலி பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் மங்காத்தா படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றன. அதில் வாடா பின்லேடா என்ற பாடலுக்கு வரிகளை கவிஞர் வாலி எழுதி இருந்தார்.
அந்த பாடல் பற்றி கிரிஷ் பேசுகையில் "அன்னைக்கு நைட் அந்த பாடலை ரெக்கார்ட் பண்றோம். சுசித்ரா தன்னுடைய பகுதிகளை பாடிட்டு போயிட்டாங்க. அதுக்கு அப்புறம் நான் ரெக்கார்ட் பண்ணனும். நைட் ஒரு பதினோரு மணி இருக்கும். அந்த நேரத்துல யுவன் சொல்லறாரு எனக்கு கடைசி சரணத்துல ஒரு ஆணின் குரல் (Male) இருந்தா நல்லா இருக்கும். முதல பாடகி (Female) பாடுவது போல தான் முழுசா இருந்துது. அதுக்கு அப்புறம் அதில பாடகர் போர்ஷன் இருந்தா நல்லா இருக்கும்னு பிடிவாதம் பிடிக்கிறார்.
இரண்டு நாள் முன்னாடி தான் வாலி மருத்துவமனையில் அட்மிட்டாகி இருந்தார். ஆனா போனை மட்டும் எடுத்து பேசுவார். இவனுங்க இரண்டு பேரும் (யுவன் ஷங்கர் ராஜா & வெங்கட் பிரபு) அவருக்கு போன் பண்ண பயந்துகிட்டு என்னை வைச்சு பேச வைச்சானுங்க. அடியாள் ஒருத்தன் வேணும் இல்லை. நான் போன் பண்ணதும் "என்னயா?"ன்னு கேட்டார். யுவன் இந்த மாதிரி சொல்லறாருன்னு நான் அவர்கிட்ட சொன்னேன்.
கடைசி பல்லவி மட்டும் அப்படினு நான் சொன்னவுடனே "உங்களுக்கு யாருக்காவது மனசாட்சி இருக்குதாயா? நான் மருத்துவமனையில் படுத்துகிட்டு இருக்கேன்டா" அப்படின்னு சொன்னாரு. இல்ல இவன் பாடப்படுத்துறான் அது தான் உங்களை கேட்கலாம்னு பண்ணேன் சொன்னதும் "ஒன்னு பண்ணு அந்த லிரிக் மொத்தத்தையும் அமருக்கு (கங்கை அமரன்) அனுப்பு, அதுக்கு மேட்ச் பண்ணி எழுதக் கூடிய ஒரே ஆள் அவன் தான்" அப்படின்னு சொன்னாரு.
உடனே வெங்கட் பிரபு கங்கை அமரன் சாருக்கு போன் பண்ணி "டாடி, இந்த மாதிரி லிரிக் ஒன்னு எழுதணும். வாலி அங்கிள் உங்களை எழுத சொன்னாரு" அப்படின்னு சொன்னதும் பல்லவியை படிக்கச் சொன்னார். உடனே லாஸ்ட் பல்லவியை அதுக்கு ஏத்த மாதிரி மேட்ச் பண்ணி கங்கை அமரன் சார் எழுதி கொடுத்தாரு.
ஒரு பாடலை கங்கை அமரன், வாலி இரண்டு பெரும் சேர்ந்து எழுதியதை பாடிய பாக்கியம் எனக்கு கிடைச்சுது" என நெகிழ்ச்சியுடன் கூறி இருந்தார் கிரிஷ்.