The Kerala Story: தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் தி கேரளா ஸ்டோரி படம்.. கேரள முதல்வர் கடும் கண்டனம்
தி கேரளா ஸ்டோரி படம் மத்திய அரசின் தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனில் இன்று மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி கேரளா ஸ்டோரி படத்தை மத்திய அரசின் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் ஒளிபரப்புவதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரி
கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி சுதிப்தா சென் இயக்கத்தில் இந்தியில் “தி கேரளா ஸ்டோரி” படம் வெளியானது. இப்படத்தில் அதா ஷர்மா, சித்தி இத்னானி, பிரணவ் மிஷ்ரா, சோனியா பாலனி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தை விபுல் அம்ருத்பால் ஷா தயாரித்திருந்தார். உண்மை சம்பவங்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட தி கேரளா ஸ்டோரி படம் ரிலீசுக்கு முன் கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. கேரளாவைச் சேர்ந்த 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் லவ்ஜிகாத் என்ற பெயரில் இஸ்லாமிய மதத்துக்கு மாற்றப்பட்டதாகவும், அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருவது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் கடும் சர்ச்சை வெடித்தது.
दूरदर्शन आपके लिए लाया है ब्लॉकबस्टर फिल्म #TheKeralaStory। @sudiptoSENtlm के दमदार निर्देशन के साथ इस फिल्म में नजर आएंगे @adah_sharma, योगिता बिहानी, @soniabalani9 और @Pranavmisshra जैसे शानदार सितारे।देखना न भूलें, शुक्रवार, 5 अप्रैल, रात 08:00 बजे सिर्फ़ #DDNational पर। pic.twitter.com/tPtdmGP84n
— Doordarshan National दूरदर्शन नेशनल (@DDNational) April 4, 2024
ரிலீஸில் ஏற்பட்ட பிரச்சினை
தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்ரெய்லர் பார்த்த பலரும் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என கோரிக்கை விடுத்தனர். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்ட நிலையில் இந்தியில் மட்டுமே இப்படம் முதலில் வெளியானது. பின் உச்சநீதிமன்றம் வரை பிரச்சினை சென்ற நிலையில் மற்ற மொழிகளில் ரிலீசானது. தமிழ்நாட்டில் இப்படம் வெளியான தியேட்டர் முன்பு போராட்டம் நடந்ததால் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் 8 மாதங்கள் கழித்து தி கேரளா ஸ்டோரி படம் பிப்ரவரி 16 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
பினராயி விஜயன் கண்டனம்
இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி படம் மத்திய அரசின் தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனில் இன்று மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை ஒளிபரப்புவது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
The decision by @DDNational to broadcast the film 'Kerala Story', which incites polarisation, is highly condemnable. The national news broadcaster should not become a propaganda machine of the BJP-RSS combine and withdraw from screening a film that only seeks to exacerbate…
— Pinarayi Vijayan (@pinarayivijayan) April 4, 2024
எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “பிரிவினையை தூண்டும் வகையில் 'கேரள கதை' திரைப்படத்தை தூர்தர்ஷன் நிறுவனம் ஒளிபரப்புவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேசிய செய்தி ஒளிபரப்பு நிறுவனம் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியின் பிரச்சார இயந்திரமாக மாறக்கூடாது.பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்த முயலும் திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்த வேண்டும். வெறுப்பை விதைக்கும் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை எதிர்ப்பதில் கேரளா உறுதியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.