Actor Prakash Raj: நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்ற நிகழ்ச்சி; கல்லூரி வளாகத்தை கோமியத்தால் சுத்தம் செய்த பாஜக மாணவர்கள் அமைப்பு
Actor Prakash Raj: இதனையடுத்து, பிரகாஷ் ராஜ் கல்லூரிக்குள் வரக்கூடாது என்று கல்லூரி வளாகம் முன் திரண்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பிரகாஷ் ராஜ் அங்கிருந்து சென்ற பிறகு அந்த இடத்தை ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. (ABVP)மாணவர்கள் சிலர் கோமியம் கொண்டு சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்திஎன பல்வேறு மொழிகளிலும் காமெடி, குணசித்திரம், வில்லன் என எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் பிரகாஷ் ராஜ். தமிழ்நாட்டின் `செல்லம்’ எனவும் கொண்டாடப்படுபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தன்னுடைய சமூகப் பணி, தைரியமான அரசியல் கருத்துகள் முதலானவற்றால் அனைவரையும் ஈர்க்கும் நடிகர் பிரகாஷ் ராஜ் கர்நாடகாவில் உள்ள் தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றுள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.க.- வையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கர்நாடகாவில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.
தனியார் கல்லூரி விழா
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியதில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மேடை நாடகங்கள், வசனம், சினிமா, சமூகம், (Dialogue on Theater, Cinema, and Society') சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள பிரகாஷ் ராஜிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தச் செய்தி அறிந்த கல்லூரி மாணவர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரியில் ஏன் தனியார் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று கேள்வி எழுப்பினர். அதோடு, பிரகாஷ் ராஜ் கல்லூரிக்கு வருகை தருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, பிரகாஷ் ராஜ் கல்லூரிக்குள் வரக்கூடாது என்று கல்லூரி வளாகம் முன் திரண்ட பாஜக அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோமியம் பயன்படுத்தி சுத்தம் செய்ததால் பரபரப்பு
இதையடுத்து நிகழ்ச்சி நாளன்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாணவர்களிடம் போராட்டத்தை கைவிடக்கோரினர். ஆனால், மாணவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து, அவர்கள் கல்லூரிக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்தி காவல் துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
நடிகர் பிரகாஷ் ராஜ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அதன்பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர், அமைப்பு உறுப்பினர்களான மாணவர்களில் சிலர் கோமியம் (பசு மாட்டு சிறுநீர்) எடுத்து சென்று நடிகர் பிரகாஷ் ராஜ் அமர்ந்து பேசிய அரங்கம், அவர் சென்ற இடங்களில் தெளித்து சுத்தம் செய்தனர். இதனை அவர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள விளக்கமளித்துள்ள போலீசார் கல்லூரி அருகே நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவர்கள் மட்டுமின்றி வேறு சிலரும் இருந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை மாணவர்களுடன் வந்தவர்கள் யார் என்று அடையாளம் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ கடும் எதிர்ப்பை பெற்று வருகிறது. இப்படி சக மனிதனின் மீது மரியாதை இல்லாமல், தீண்டாமை உணர்வுடன் நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.