பழசாகிட்டேன்..அப்டேட் ஆகணும்.. கனகாவின் எமோஷ்னல் வீடியோ.. என்ன விஷயம் தெரியுமா?
கரகாட்டாக்காரன் திரைப்படம் அந்தக் கலைஞர்களின் வாழ்க்கை கண்ணியமானது, கவுரமானது என்பதை பறைசாற்றிய திரைப்படமும் கூட.
![பழசாகிட்டேன்..அப்டேட் ஆகணும்.. கனகாவின் எமோஷ்னல் வீடியோ.. என்ன விஷயம் தெரியுமா? 'Karagattakaran' Actress Kanaka's Emotional Video After Missing For Many Years பழசாகிட்டேன்..அப்டேட் ஆகணும்.. கனகாவின் எமோஷ்னல் வீடியோ.. என்ன விஷயம் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/04/cc2296aa3eb5cccfd4e901b55ba1bd29_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
"தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்துச் செம்பு அத
தொட்டெடுத்துத் தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ
கிட்ட வந்து கெளருதடி என்னப் படு ஜோரு
கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா
பொண்ணு மனசத் தொட்டு பறிச்சா
தன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வல தான் விட்டு விரிச்சா.."
இந்தப் பாடல் வரிகளைக் கேட்கும்போது நம் எண்ண அலைகள் கனகாவின் வில் அம்புக் கண்களில் நின்றிருக்கும். அப்படியொரு திருத்தமான அழகு கொண்டவராக தமிழ்த் திரையுலகில் உலா வந்தவர் கனகா.
கரகாட்டாக்காரன் திரைப்படம் அந்தக் கலைஞர்களின் வாழ்க்கை கண்ணியமானது கவுரமானது என்பதை பறைசாற்றிய திரைப்படமும் கூட. கரகாட்டக்காரன் படம் அவருக்கு ஒரு திருப்புமுனை படம் என்றே கூறலாம்.
அதன்பின்னர் தமிழ்த் திரையுலகில் கனகா ஒரு ரவுண்ட் வந்தார். ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, முரளி, கார்த்திக்,
ராமராஜன் எனப் பல நடிகர்களுடனும் ஜோடி போட்டனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என்றும் அவர் ஹிட்டடித்தார். மலையாளத்தில் மோகன் லால், மம்முட்டி, சுரேஷ் கோபி படங்களில் நடித்தார். ஜெயராம், முகேஷுடனும் ஜோடி போட்டார். கடையிசாக வி.சேகர் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டில் வெளியான விரலுக்கேத்த வீக்கம் படத்தில் தான் கனகா நடித்தார். அதன் பின்னர் கனகா எங்கு சென்றார் என்ன ஆனார் என்றெல்லாம் தமிழ்த் திரையுலகம் கண்டுகொள்ளவில்லை. வாழ்ந்தால் போற்றும், வீழ்ந்தால் மறக்கும் இதில் திரைச் சமூகம் மட்டும் விதிவிலக்கா என்ன?
இந்நிலையில் தான் அண்மையில் மீண்டும் கனகா மீடியா வெளிச்சத்துக்கு வந்தார். ஆனால் அது அவ்வளவு மகிழ்ச்சியான விஷயமாக இல்லை. கனகாவுக்கும் அவரது ஆண் நண்பருக்கும் இடையேயான காதல் விவகாரம் அது. அதன் பின்னர் கனகா மறைந்தார் என்றெல்லாம் பொய்திகள் வெளியாக அவரே வீடியோவில் தோன்றி தான் நலமுடன் இருப்பதாகக் கூறினார். இப்போது இன்னொரு வீடியோ கனகாவிடமிருந்து வந்துள்ளது. கொஞ்சம் மேக்-அப் அதிகம்தான் என்றாலும் கூட கனகாவின் கொஞ்சல் பேச்சு எல்லாவற்றை மறைத்துவிடுகிறது.
அந்த வீடியோவில் கனகா, எனக்கு இப்போது 50 வயசாயிடுச்சு. நான் ரொம்ப பழசாகிட்டேன். என் நடிப்பு, நடை, உடை, பாவனை எல்லாவற்றையும் அப்டேட் செய்ய வேண்டும். ஆனால் அதை நான் சீக்கிரம் கற்றுக்கொள்வேன். எனக்கு ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி கத்துக்கிட்டு ரீஎன்ட்ரி கொடுக்கணும் என்று மனம் திறந்து பேசியிருக்கிறார். கனகாவின் பேச்சு நிதானமாக இருக்கிறது. அவர் சொல்வதைப் போலவை அவர் ஒப்பனை தொடங்கி எல்லாவற்றிலும் தன்னை நிறைய அப்டேட் செய்ய வேண்டும் என்றே தெரிகிறது.
ஆனால், கனகா மட்டும் தன்னை அப்டேட் செய்து அப்கிரேட் ஆனால் தமிழ்த் திரையுலகுக்கு மீண்டும் ஒரு நல்ல நடிகை கிடைக்கலாம். அது மட்டுமல்லாமல் ஓடிடி சீரிஸின் கை ஓங்கி இருக்கும் காலத்தில் கனகா போன்ற நடிகர்கள் தங்கள் திறனை கொஞ்சம் அப்கிரேட் செய்துவந்தால் வாய்ப்புகள் சிவப்புக் கம்பளமாக விரிந்து வரவேற்கும். கனகா வீடியோவின் கீழ் உள்ள கமென்டுகளும் அவரை மக்கள் வரவேற்பதற்கான சாட்சியாக உள்ளன.
"சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே.." என்று பாடி கனகாவின் ரீஎன்ட்ரியை நிச்சயம் தமிழ் ரசிகர்கள் வரவேற்பார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)