Kanni Paruvathile Movie: வில்லத்தனமான பாக்யராஜ் பற்றி உங்களுக்கு தெரியுமா? 43 ஆண்டுகளை முன் வெளியான "கன்னிப் பருவத்திலே"
பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்த பி.வி. பாலகுரு இயக்கத்தில் 1979ம் ஆண்டு வெளியான திரைப்படம் "கன்னிப் பருவத்திலே". இப்படம் வெளியாகி இன்றோடு 43 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் இயக்குநர்கள் தங்களிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்தவர்களை பெரிய இயக்குநர்களாக வளர்த்து விடுவார்கள். பிற்காலத்தில் அவர்களும் பெரிய இயக்குநர்களாக வளர்ந்த பிறகு அவர்களின் உதவி இயக்குநர்களை வளர்த்து விடுவார்கள். இதுதான் தொன்று தொட்டு நம் தமிழ் சினிமா மட்டும் அல்ல இந்திய சினிமாவிலும் நடைபெறும் வழக்கம்.
இன்று இருக்கும் பெரும்பாலான இயக்குனர்கள் அனைவருமே முன்னணி இயக்குநர்களின் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்து வந்தவர்கள்தான். அப்படி இயக்குனர் பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்தவர்கள் தான் இயக்குனர் பி.வி. பாலகுரு, கே. பாக்யராஜ் உள்ளிட்டோர்.
43 ஆண்டுகளை கடந்த கன்னிப் பருவத்திலே :
முதன்முதலில் இயக்குநராக பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வெளியே வந்த பிறகு ஒரு படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பி.வி. பாலகுரு. அது தான் 1979-ஆம் ஆண்டு வெளியான "கன்னிப் பருவத்திலே" திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றோடு 43 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இவர் தான் கே. பாக்யராஜை இயக்குனர் பாரதிராஜாவிடம் அறிமுகம் செய்து வைத்தவர். அதன் நன்றி கடனாக இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனத்தை எழுதி கொடுத்ததோடு ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் பாக்யராஜ். இதன் மூலம் தனது நன்றியை வெளிக்காட்டியுள்ளார்.
நெகட்டிவ் ரோலில் பாக்யராஜ் :
1979-ஆம் ஆண்டு வெளியான இப்படம் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ராஜேஷ். பிற்காலத்தில் அவர் ஒரு சிறந்த நடிகராக முன்னேறியவர். இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை வடிவுக்கரசி. அதுவரையில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவுக்கரசி, படத்தின் கதாநாயகியாக அறிமுகமானது இந்த படத்தில் தான். பின்னாளில் வடிவுக்கரசி பல திரைப்படங்களில் நெகடிவ் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பாக்யராஜ் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கதை சுருக்கம் :
காளைகளை அடக்குவதில் திறமையானவரான ராஜேஷ் வடிவுக்கரசி இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு பெரும் போராட்டத்திற்கு பிறகு திருமணம் நடைபெறுகிறது. ஆனால் திருமணமான சில நாட்களிலேயே காளையை அடக்கும்போது ஒரு விபத்தில் தனது ஆண்மையை இழக்கும் ராஜேஷிடம் அன்பை இழக்காமல் இருக்கிறார் வடிவுக்கரசி. ராஜேஷின் நண்பனாக வரும் பாக்யராஜ் இந்த உண்மையை அறிந்துகொண்டு வடிவுக்கரசியை தனது ஆசைக்கு இணங்க முயற்சி செய்கிறார். ஆனால் அதற்கு சற்றும் வளைந்து கொடுக்காமல் சிறப்பாக நடித்துள்ளார் வடிவுக்கரசி. அனைவரின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்தது என்றாலும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது சங்கர் கணேஷின் இசை. இப்படத்தின் மிகவும் ஹிட்டான ஒரு பாடல் "பட்டு வண்ண ரோசாவாம்...". இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அமோக வெற்றி அடைந்தது.