சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்.. அப்பா இதுக்காகத்தான் இந்த பாட்ட எழுதுனாங்க.. மனம் திறந்த கண்ணதாசன் மகள்
மதுவாலோ, மாதுவாலோ அப்பா பணத்தை இழக்கவில்லை. அதுபோல் மது அருந்தினால் தான் எழுதுவார் என்பதும் பொய். கட்சி ஆரம்பித்து, ஜாமீன் கையெழுத்து போட்டுதான் பணத்தை இழந்தார்.
சிலர் சிரிப்பார் சிலர், அழுவார் நான் சிரித்துக்கொண்டே, அழுகின்றேன்
இந்தப் பாடல் வரிகள் நாம் அனைவருமே நம் வாழ்வில் என்றேனும் ஒருநாளாவது ஒரு பொழுதாவது நம் வாழ்க்கையுடன் பொருத்திப் பார்த்திருப்போம். கண்ணதாசனின் கவிதைகள் ஒவ்வொன்றும் தொட்டில் தொடங்கி இடுகாடு வரை நம் வாழ்க்கை நிகழ்வுகளுடன் தொடர்புடையது. அப்பேற்பட்ட கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கை பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் அவரது மகள் ரேவதி சண்முகம்.
அப்பாவைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். எல்லோரும் சொல்வதுபோல் அப்பா குடிகாரர் இல்லை. அவர் ஒருநாள் போதையில் உளறியோ, தள்ளாடியோ நாங்கள் பார்த்ததில்லை. அப்பா மதியம் வீட்டுக்கு வருவார் ஒரு கோப்பையில் கால்வாசி மதுவும் மீதம் தண்ணீரும் சேர்த்து அருந்துவார். சாப்பிட்டுவிட்டு உறங்கிவிடுவார். மாலையில் ஸ்டூடியோ செல்வார்.
பணி முடித்து இரவு திரும்பியவுடன் அதேபோல் அதே அளவில் தான் அருந்துவார். அவரை உளறி, தள்ளாடி நாங்கள் பார்த்ததில்லை. அதுபோல் மதுவும் மாதுவும் அப்பா பெயருடன் சேர்த்து வைத்துள்ளார்கள். அப்பா பெண்களுடன் பழகியது எங்களுக்கு சிறு வயதில் தெரியாது. ஆனால் பின்னாளில் அம்மா, பெரியம்மாவிடம் கேட்கும்போது அப்பா எதையும் எங்களிடம் மறைத்ததில்லை எனக் கூறுவார்கள்.
அப்பா யாரோ ஒருவருக்கு ஜாமீன் கையெழுத்து போட அதனால் வீட்டை இழந்தோம். அந்தத் தகவலை அப்பாவுக்கு சொன்ன நேரத்தில் அவர் எழுதிய பாடல்தான் சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் என்ற பாடல்.
அப்பா ஆயிரக்கணக்கில் பாடல்கள் எழுதியிருந்தாலும் எனக்கு உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் தான் ரொம்பப் பிடிக்கும். இப்போது கேட்டாலும் எனக்குக் கண்ணீர் வந்துவிடும். அப்பா எப்படி இத்தனை சோகங்களுக்கு மத்தியிலும் சிரித்துக்கொண்டே சிறந்த படைப்புகளைக் கொடுத்தார் என்று நினைக்கும் போது எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருக்கும்.
அப்பா, பாடல்களை எழுதுவதைக் குறைத்தது குறித்து நான் கேட்டிருக்கேன். அப்பாவை ஒரு இயக்குநர் மிகவும் டார்ச்சர் செய்தார். அதனாலேயே அப்பா திரையை விட்டு விலகினாரோ என்று எனக்குத் தோன்றியதுண்டு. அதன்பிறகு அப்பா சில பேனர்களுக்கு மட்டுமே எழுதினார்.
பின்னர் அப்பா ஆன்மிக எழுத்தில் நாட்டம் செலுத்தினார். அப்பா மறைவுக்குப் பின்னர் நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம். சிலர் பயங்கர நெருக்கடி கொடுத்தனர். அப்பா இறந்த பின்னர் எங்களுக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.
மதுவாலோ, மாதுவாலோ அப்பா பணத்தை இழக்கவில்லை. அதுபோல் மது அருந்தினால்தான் எழுதுவார் என்பதும் பொய். கட்சி ஆரம்பித்து, ஜாமீன் கையெழுத்து போட்டுதான் பணத்தை இழந்தார்.
இவ்வாறு ரேவதி சண்முகம் தனது தந்தை கண்ணதாசன் பற்றி கூறியுள்ளார்.