பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பெரிய பட்ஜெட் படங்கள் பலவும் பில்டப் தரும் அளவிற்கான ப்ரமோஷன்களால் சுமார் வெற்றி பெற வேண்டிய படங்கள் படுதோல்வி அடைந்து வருகிறது.
இந்திய திரையுலகில் தமிழ் திரையுலகிற்கு என்று தனி இடம் உண்டு. தமிழ் திரையுலகின் பல படங்கள் வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 2000ம் ஆண்டுக்கு பிறகு தமிழ் சினிமா புதிய பரிணாமத்தை எடுத்துள்ளது.
ப்ரமோஷன்:
படங்கள் தயாரிப்பிலும், நடிகர்களின் சம்பளங்களும், மற்ற கலைஞர்களின் ஊதியம், படத்திற்கான தயாரிப்பு வேறு ஒரு கட்டத்திற்குச் சென்றுவிட்டது. ஆனால், ஒரு படத்தின் வெற்றிக்கு அடிப்படை ஆதாரமான கதை மற்றும் திரைக்கதையில் கவனம் செலுத்துவது குறைந்து வருகிறது.
இதை ஈடுகட்டுவதற்காகவே தயாரிப்பாளர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கையில் எடுத்துள்ள புதிய யுக்தியாக ப்ரமோஷன் மாறியுள்ளது. திரைப்படங்களின் ஆரம்ப காலங்களில் இருந்தே ப்ரமோஷன் இருந்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகால ப்ரமோஷன் என்பது வேறு ஒரு வடிவத்திற்கு சென்றுள்ளது.
இது தேவையா?
தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதற்காக அவர்கள் இந்த பிரம்மாண்ட ப்ரமோஷனை கையில் எடுத்துள்ளனர். முன்பு படங்கள் வெளியாவதற்கு முன்பு படத்தின் அறிவிப்புக்கு பின்னர் பாடல்கள் வெளியிடப்படும். பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி படத்திற்கு வரவழைப்பார்கள். தற்போது, பர்ஸ்ட் லுக், போஸ்டர், டீசர், ட்ரெயிலர், மேக்கிங் வீடியோ என அடுத்தத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றனர்.
குறிப்பாக, சமீப ஆண்டுகளில் ரசிகர்கள் படங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது அந்த படங்களின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பேசும் வார்த்தைகள் ஆகும். படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறும் பட்சத்தில், விழா மேடையில் அவர்கள் பேசிய வார்த்தைகள் சமூக வலைதளங்களில் மிக மோசமாக விமர்சனத்திற்கு ஆளாக்கப்படுகிறது.
அஞ்சான், கங்குவா:
ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பேசப்படும் வார்த்தைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நடிகராக சூர்யா மாறியுள்ளார். சூர்யா உச்சத்தில் இருந்தபோது அஞ்சான் படத்தின் இயக்குனர் லிங்குசாமி பேசிய ‘கத்திகிட்ட ஒட்டுமொத்த வார்த்தையும் இறக்கிருக்கேன்’ என்று கூறினார். படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியதால் அஞ்சான் படம் தோல்வி அடைந்தது மட்டுமின்றி சூர்யாவின் திரை வாழ்வில் பெரிய சறுக்கலை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கங்குவா படத்திற்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்ட படக்குழுவினர் தந்த பில்டப் ப்ரமோஷன்களே படத்திற்கு எதிர்வினையாக தற்போது அமைந்துள்ளது. ஒரு தரப்பினர் படம் நன்றாக இருக்கிறது என்று கூறினாலும், படத்தின் சத்தம், திரைக்கதை உள்ளிட்ட காரணங்கள் படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
பில்டப் ப்ரமோஷனால் ப்ளாப்:
பாகுபலி, கேஜிஎஃப், ஆர் ஆர் ஆர் படங்களுக்கு பிறகு பான் இந்தியா என்ற வர்த்தகத்தை தயாரிப்பாளர்கள் கையில் எடுத்துள்ளனர். இதற்காக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் தீவிர ப்ரமோஷன் செய்தனர்.
இந்த ப்ரமோஷன் யுக்தியானது சமீபகாலமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிப்பதை காட்டிலும் பில்டப்களாகவே மாறி நிற்கிறது. ஆனால், இந்த பில்டப்கள் சில சமயங்களில் சுமாரான படங்களுக்கு நல்ல வெற்றியைத் தந்தாலும், பல சமயங்களில் சுமார் வெற்றி பெற வேண்டியதை காட்டிலும் அட்டர் ஃப்ளாப் படங்களாக மாறி நிற்கிறது. சமீபகாலமாக பில்டப் கொடுத்து ப்ளாப் ஆன படங்களாக சலார், பிரம்மாஸ்திரா, ஆதிபுருஷ், சாஹூ, தர்பார், அண்ணாத்த, லால் சலாம், இந்தியன் 2, ஐ என ஏராளமான படங்கள் கூறலாம்.
இனி வருங்காலங்களில் ரசிகர்களை ட்ரெயிலர் மற்றும் பில்டப் ப்ரமோஷன்களால் ஏமாற்றி திரையரங்கிற்கு வரவழைக்கும் வித்தையை தயாரிப்பாளர்களும், படக்குழுவும் கைவிட்டுவிட்டு திரைக்கதையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தினால் நிச்சயம் பான் இந்திய வெற்றியை தமிழ் சினிமா தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.