"நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர் கிரேஸிமோகன்" : நினைவுகூர்ந்த கமல்ஹாசன்
நாடகமே உலகம் என்பதை நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர் கிரேஸிமோகன், என்று அவரது இரண்டாவது நினைவு நாளில் அவருக்கு நடிகரும், மக்கள் நீதிமய்ய தலைவருமான கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
நடிகர், ஓவியர், திரைக்கதை ஆசிரியர், வசனம் ,நாடக கலைஞர் , ஓவியர் என பன்முக திறமை வாய்ந்தவர் நடிகர் கிரேஸி மோகன். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல நடிகர் நடிகைகள் அவருடனான அனுபவங்களை பகிர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கிரேஸி மோகனின் நீண்ட நாள் மற்றும் நெருங்கிய நண்பரான நடிகர் கமல்ஹாசன் அவர் குறித்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் உருக்கமான பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் வாயிலாக நினைவஞ்சலியை பகிர்ந்த நடிகர் கமல்ஹாசன் ”நாடகமே உலகம் என்கிற ஞானச்சொல்லை, நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர். சிரிப்பு முகமூடிக்குள் தீவிர மரபிலக்கிய முகத்தோடு வானம் போல் வாழ்ந்து மறைந்தவர் கிரேஸி மோகன். இரண்டாம் நினைவு நாளில் அவரை நினைவு கூர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
நாடகமே உலகம் என்கிற ஞானச்சொல்லை, நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர். சிரிப்பு முகமூடிக்குள் தீவிர மரபிலக்கிய முகத்தோடு வானம் போல் வாழ்ந்து மறைந்தவர் கிரேஸி மோகன். இரண்டாம் நினைவு நாளில் அவரை நினைவு கூர்கிறேன். pic.twitter.com/gnDFQwP5sJ
— Kamal Haasan (@ikamalhaasan) June 10, 2021
இதே போல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது “ராஜ்கமல்” தயாரிப்பு நிறுவனம் மூலம் பகிரப்பட்ட தொகுப்பு ஒன்றினையும் கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார். அதில் கமலுக்கு கிரேஸி மோகனுக்குமான நட்பு மற்றும் சில சுவாரஸ்ய சம்பவங்களை கமல் நினைவு கூர்ந்துள்ளார். கமலும் கிரேஸி மோகனும் நீண்டகால நண்பர்கள் 1975 -1976-ஆம் காலக்கட்டத்தில் “கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்” புத்தக பரிமாற்றத்தில் தொடங்கப்பட்டதுதான் இவர்கள் இருவரின் நட்பு. தனக்கு கிரேஸி மோகனின் எழுத்துக்கள்தான் முதல் நண்பன் என தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
கிரேஸி மோகன் இருக்கும் இடம் எப்பொழுதுமே கலகலப்பாக இருக்கும் எனவும் ஒருமுறை, மைக்கல் மதன காமராஜன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில், நடிகை குஷ்பு பேசியதை கேட்ட கிரேஸி மோகன் “ நீங்க ரொம்ப குறும்புங்க !” என தெரிவிக்க கமல்ஹாசன் “உங்களை விடவா “ என தெரிவித்தாராம் . மேலும் அவருடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்ட கமல்ஹாசன், அவர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் , அவரின் எழுத்துகளும் வசனங்களும் உள்ள வரையில் அவர் தொடர்ந்து வாழ்ந்துக்கொண்டிருப்பார்“ என தெரிவித்துள்ளார். கமல்ஹாசனும் கிரேஸி மோகனும் இணைந்து நிறைய படங்களில் நடித்துள்ளனர். மேலும் கமலின் படங்களுக்கு கிரேஸி மோகன் வசனமும் எழுதியுள்ளார். இவர்கள் ஒன்றாக இணைந்து பணிபுரிந்த மைக்கல் மதன காமராஜன், பம்மல் கே சம்பந்தம், தெனாலி, அவ்வை சண்முகி, வசூல் ராஜா எம்பி.பிஎஸ் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.