(Source: ECI/ABP News/ABP Majha)
Kalidas: 50 பாடல்கள்... ரூ.8 ஆயிரம் பட்ஜெட்... தமிழின் முதல் பேசும் படம் ‛காளிதாஸ்’ வெளியான நாள் இன்று!
Kalidas Movie: இன்று ஐமாக்ஸ் படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அன்று, இதே நாளில் தான் முதன் முதலாக பேசும் படத்தை தமிழ்நாடு பார்த்தது.
ஒரு படம் வெளியானால், அதைப்பற்றியே நாம் சில நாட்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். அது நன்றாக இருந்தாலும் சரி, நன்றாக இல்லை என்றாலும் சரி. பேச்சு என்னவோ, அந்த படத்தை பாற்றியதாகவே உள்ளது. ஆனால், ஆரம்பித்தில் சினிமாக்கள் எந்த பேச்சும் இல்லாமல், வெறுமனே சைகை மொழியில் தான் வந்தன. அதை மாற்றி, முதன் முதலாக பேசும் படமாக இன்று, இதே நாளில் 91 ஆண்டுகளுக்கு முன் வெளியானது தான் காளிதாஸ்.
ஆர்தேசிர் இரானி தயாரிப்பில் எச்.எம்.ரெட்டி இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில், பி.ஜி.வெங்கடேசன், டி.பி.ராஜலட்சுமி, எல்.வி.பிரசாத், தேவாரம் ராஜாம்பாள், ஜே.சுசிலா, சுசிலா தேவி, எம்.எஸ்.சந்தானலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களில் ஒருவரை உங்களுக்கு தெரிந்திருந்தால் கூட, நீங்கள் கட்டாயம் திறமையானவர் தான். இந்தியாவின் முதல் பேசும் படம் ஆலம் ஆரா. இந்த படம் எந்த அரங்கில் தயாரானதோ, அதே அரங்கில் வைத்து தான் காளிதாஸ் படத்தையும் தயாரித்தனர்.
என்ன தான் தமிழின் முதல் பேசும் படம் என்று அழைக்கப்பட்டாலும், தமிழோடு, தெலுங்கு மற்றும் இந்தி மொழியும் இணைந்தே பேசப்பட்டது இத்திரைப்படத்தில். மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதிய நாடக பாடல்கள் தான், காளிதாஸ் படத்தில் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம், தமிழ் திரைப்படத்தின் முதல் பாடலாசிரியர் என்கிற பெருமையை பெற்றார் மதுரகவி பாஸ்கரதாஸ்.
ஒரு பாடல் பிடிக்கவில்லை என்றால், தியேட்டரில் இருந்து வெளியேறி புகைக்கவோ, ஸ்நாக்ஸ் எடுக்கவோ சென்று விடுகிறோம். ஆனால், 50 பாடல்களை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். கிட்டத்தட்ட பாடல்கள் தான் படமாகியிருக்கும் போல. அதை அவ்வளவு பொறுமையோடு பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள் மக்கள். முதல் பேசும் படம் என்கிற விளம்பர யுக்தியை பயன்படுத்தி, அந்த காலகட்டத்தில் பரபரப்பாக விளம்பரப்படுத்தப்பட்டது. சுதேசமித்ரன் இதழில் படத்திற்கான விளம்பரமும் வெளியிடப்பட்டது.
அப்போதே 8 ஆயிரம் ரூபாய் மெகா பட்ஜெட்டில்(இன்று மெகா ஸ்டார்கள் படம் ரிலீஸ் ஆகும் போது, இரண்டு டிக்கெட் எடுக்கும் விலை) எடுக்கப்பட்டது காளிதாஸ். கி.பி.3 ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவி காளிதாஸ் பற்றிய கதை தான், காளிதாஸ். சாகுந்தலம், மேகதூதம் ஆகியவற்றை இயற்றியவர் தான் மகாகவி காளிதாஸ். என்ன தான் சினிமாவாக இருந்தாலும், அன்று அவை தோன்றியதன் காரணம் தேசபற்று தான். இந்த படத்திலும் தேசப்பற்றை விதைக்கும் வரிகளும், பாடல்களும் அதிகம்.
அதனால் தான் 1931ல் 8 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், 75 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்து, சாதனை படைத்தது. இதில் சாபம் என்னவென்றால், 1930 களிலிருந்து 40கள் வரை எடுக்கப்பட்ட பெரும்பாலான படங்கள் மாயமாகிவிட்டன. அந்த வரிசையில் தான் காளிதாஸ் படமும் உள்ளது.
சுதேசமித்ரனில் விளம்பரம் வந்ததால், அது தொடர்பான போஸ்டர்கள் சில தற்போது வரை பாதுகாக்கப்படுகிறது. மற்றபடி தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் என்கிற பெயரையும், பெருமையையும் தவிர நம்மிடத்தில் காளிதாஸ் பற்றிய விபரங்கள் இல்லை. இன்று ஐமாக்ஸ் படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அன்று, இதே நாளில் தான் முதன் முதலாக பேசும் படத்தை தமிழ்நாடு பார்த்தது. அந்த வகையில் சினிமாப்ரியர்கள் கொண்டாட வேண்டிய, கட்டாயம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய திரைப்படம் காளிதாஸ்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்