Jason Sanjay: விஜய் மகனுடன் கைகோர்க்கும் துல்கர்? தமிழ் சினிமா தாண்டி பான் இந்தியா குறி: வேற லெவல் தகவல்!
Jason Sanjay : ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் ஹீரோவாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராகவும் நாடு தாண்டியும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றவருமான நடிகர் விஜய், சமீபத்தில் தன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார். அவர் தந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், அவர் சினிமாவில் இருந்து விலகப்போவதாக சொன்ன தகவல் அவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

களமிறங்கும் விஜய் வாரிசு :
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சி மூலம் அவர் தீவிரமான அரசியல் தலைவராக என்ட்ரி கொடுத்து இருக்கும் நிலையில் அவரின் வாரிசு திரைத்துறையில் களம் இறங்குவது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். லண்டன் சென்று சினிமா மேக்கிங், இயக்கம் பற்றி பயின்று வந்துள்ள ஜேசன் சஞ்சய் நேரடியாகவே படத்தை இயக்க உள்ளார்.
லைகா உடன் கூட்டணி :
ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்றும் அதற்கான அக்ரிமென்டில் கையெழுத்திட்ட புகைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி வைரலாகின. முதல் படமே பிரமாண்டமான ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் என்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கேள்வியாக ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் யார் ஹீரோவாக நடிக்க போகிறார் என்பதாக தான் இருந்தது. இது குறித்த பல விவாதங்கள் கூட சினிமா வட்டாரத்துக்குள் நடைபெற்றது.
ஜேசன் சஞ்சய் முதல் ஹீரோ :
ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் முதல் படம் கேங்ஸ்டர் ஜானரில் தான் என்ற தகவல் வெளியானதும் அப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம், கவின் என பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது தகவல் ஒன்று மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் ஹீரோவாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் பான் இந்திய படமாக உருவாக உள்ளது என்றும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
துல்கர் சல்மான் லைன் அப் :
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பினும் இந்தி, தெலுங்கு, தமிழ் என மொழி தாண்டி துல்கருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் துல்கர் சல்மான் தற்போது சூர்யா நடிக்கும் புறநானூறு, மணிரத்னம் - கமல் காம்போவில் உருவாகும் தக் லைஃப் மற்றும் ஏராளமான மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரின் சினிமா லைன் அப் மிகவும் நீளமாக இருக்கிறது. அதில் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் துல்கர் புதிதாக இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

