Watch Video: காமராஜர் முதல் குற்றால அருவி வரை... சிவகுமாரின் காலத்தால் அழிக்க முடியாத ஓவியங்கள்!
Watch video : நடிகர் சிவகுமாரின் காலத்தால் அழியாத ஓவியங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயர் என அழைக்கப்படும் பழம்பெரும் நடிகர் சிவகுமார் தன்னுடைய தத்ரூபமான நடிப்பு மற்றும் மிரள வைக்கும் வசனங்களால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். பல தரப்பட்ட கதாபாத்திரங்களையும் மிகவும் எளிமையாக எதார்த்தமாக பொருந்தி நடிக்க கூடிய சிவகுமார் 1965ம் ஆண்டு வெளியான 'காக்கும் கரங்கள்' என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பெரும்பாலான பக்தி படங்களில் கடவுள் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
நடிகராக மட்டுமின்றி ஒரு சிறந்த சொற்பொழிவாளராக பிரபலமானவர் சிவகுமார். கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச காப்பியங்களின் கதைகளை அடுத்த தலைமுறையினருக்கு மிகவும் அழகாக கடத்தி செல்ல கூடிய வகையில் சொற்பொழிவு ஆற்றுவது அவரின் தனிச்சிறப்பு.
நடிகராகவும் பேச்சாளராகவும் மட்டுமே பெரிதும் அறியப்படும் சிவகுமார் ஒரு சிறந்த ஓவியர் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. காந்தி, பெரியார், காமராஜர், டாக்டர் ராதாகிருஷ்ணன் என தான் மதிக்கும் அரசியல் தலைவர்கள், நடிகர் ஜெமினி கணேசன், நாகேஷ், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிகை பத்மினி, மூதாட்டி என மனித உருவங்கள், கலைநயம் மிக்க கோயில்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில், மகாபலிபுரம், பம்பாய் கேட்வே ஆஃப் இந்தியா, குற்றால அருவி, பாண்டிச்சேரி ட்யூப்ளே இப்படி எண்ணற்ற ஓவியங்கள் அவருடைய 'பெயிண்டிங்ஸ் ஆஃப் சிவகுமார்' புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஓவிய கல்லூரியில் சேர்வதற்கு முன்னரே ஓவிய கலையில் தேர்ச்சி பெற்றருந்த சிவகுமார் தன்னுடைய கலைஞானத்தை மேலும் மெருகேற்றி கொள்ள சிறந்த ஓவியக் கலைஞர்களிடம் பயிற்சி பெற்றார். நீர் வண்ண ஓவியம், கோட்டோவியம், தைல வண்ண ஓவியம் என அனைத்து வகையான ஓவியங்களையும் கற்று தேர்ந்தவர். அவற்றை மிகவும் வேகமாக வரையும் திறமையும் படைத்தவர். மரபையும் நவீனத்தையும் உள்வாங்கி அதை ஓவியமாக வெளிப்படுத்த கூடிய கலைஞன்.
View this post on Instagram
இன்று டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலகட்டத்தில் ஓவியத்தின் இயல்பு தன்மையும் பழமையும் மாறாமல் அந்த ஓவியங்களை உயிர்ப்பிக்கிறது நடிகர் சிவகுமாரின் ஓவியங்கள். இசையமைப்பாளரும் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் சிவகுமாரின் ஓவியங்களை போஸ்ட் செய்து குறிப்பு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். "நடிகர் திரு.சிவகுமார் அவர்களால் வரையப்பட்ட காலத்தால் அழிக்க முடியாத ஓவியங்கள். பார்த்து மகிழுங்கள்" என பதிவிட்டுள்ளார்.