'விவாகரத்து பற்றி பேசுவது வருத்தமளிக்கிறது' - சமந்தா பற்றி வாய்திறந்த நாக சைதன்யா!
நடிகை சமந்தாவுடன் விவாகரத்து குறித்து செய்தி பரப்பி வருவது வருத்தம் அளிப்பதாக நடிகர் நாக சைதன்யா முதல் முறையாக தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து மணந்தார்.
தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் சமந்தா. இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கணவரின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதைத் தனது பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டு சமந்தா அக்கினேனி என மாற்றிக் கொண்டார்.
சமீபத்தில் ஆங்கில எழுத்தான ‘S’ என்று மாற்றினார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தீ ஃபேமிலி மேன் 2 தொடர் முதலில் பல எதிர்ப்புகளைச் சந்தித்து, வெப்சீரிஸ் சரியான பிறகு பலத்த வரவேற்பைப் பெற்றது.
இதனை அடுத்து தெலுங்கு ஊடகங்கள் சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இப்பட விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு , பிரிந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய விருக்கிறார்கள் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.
மேலும் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய நாகர்ஜூனாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களும் நடிகை சமந்தா கலந்து கொள்ளாததால், இருவரும் பிரிந்து விட்டனர் என சமூக வலைத்தளங்களில் உறுதியான தகவலைப் பலரும் பரப்பினர்.
என்னதான் ஊடகங்கள் செய்தி பரப்பினாலும் தற்போது வரை சம்பந்தப்பட்ட சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகை சமந்தா தனது நண்பர்களுடன் இணைந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று போது அவரிடம் விவாகரத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "கோவிலுக்கு வந்து இதை கேட்கிறீர்களே.... புத்தி இருக்கா" என மிகவும் கோபத்துடன் கேட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா சமீபத்தில் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் விவாகரத்து குறித்து செய்தி நிறுவனங்கள் வெளியிடுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது, "சிறு வயதிலிருந்தே திரைத்துறை வாழ்க்கையை வேறு தனித் தனி வாழ்க்கை வேறு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஏனென்றால் என் குடும்பத்தில் இருந்து வந்த பழக்கம் அம்மாவும் அப்பாவும் படங்களில் நடித்து முடித்த பிறகு வீட்டிற்கு வருவார்கள். சிறுவயதிலிருந்தே அவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் படம் குறித்தும் நடந்த சம்பவம் குறித்து பேசி நான் பார்த்ததில்லை அதனால் இயல்பிலிருந்து எனக்கு அந்த குணம் வந்தது. இது ஒரு நல்ல பழக்கம் என்பதால் நான் அதை தற்போது வரை கடைப்பிடித்து வருகிறேன்.
விவாகரத்து குறித்து பேசுவது கொஞ்சம் வேதனையாக இருந்தது. பொழுதுபோக்கு ஏன் இந்த வழியில் செல்கிறது? என்ற எண்ணம் எழுகிறது. இன்றைய காலகட்டத்தில், செய்திகளுக்குப் பதில் செய்தி மாறுகிறது.
இன்று ஒரு செய்தி வந்தால், நாளை இன்னொரு செய்தி வரும். இன்றைய செய்தி மறந்துவிடுக்கிறது. என் தாத்தா காலத்தில், பத்திரிக்கைகள் இருந்தன. ஒரு வாரத்திற்கு ஒருமுறை வரும். அதில் வரும் செய்தி ஒரு நீடித்தது. ஆனால் இன்று ஒரு செய்தி வந்தால் மற்றொரு செய்தி மறைந்து விடுகிறது. இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன் நான் கவலைப்படுவதே நிறுத்திவிட்டேன்" எனக் கூறியுள்ளார்.