நித்தி-ரஞ்சிதாவை டோட்டல் டேமேஜ் செய்த இரவின் நிழல்... ‛நான் என்ன காட்டுவது... அவரே காட்டுவார்’ -பார்த்திபன் கிண்டல்!
Iravin Nizhal : ‛‛அனைத்தையும் ஈஸியாக எடுத்துக்கொள்ளும் ஞானி அவர். அதைப் பத்தி எல்லாம் அவர் கவலைப்படமாட்டார்’’ -பார்த்திபன்
பார்த்திபன் நடித்து, இயக்கி, தயாரித்த இரவின் நிழல் திரைப்படம் ஜூலை 15 அன்று திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், ஜூலை 12 ம் தேதி செய்தியாளர்களுக்கான சிறப்பு காட்சி, சென்னை பிரசாத் லேப்பில் திரையிடப்பட்டது. ‛அன் கட்’ வெர்சனாக திரையிடப்பட்ட அந்த திரைப்படம், உலகில் இதுவரை மேற்கொள்ளாத புதிய முயற்சியை எட்டியிருக்கும் நிலையில், ‛இரவில் நிழல்’ படத்தின் முக்கிய கருவாக வரும் , பாக்கியானந்த என்கிற சாமியாரின் கதாபாத்திரம், அப்படியே நித்யானந்தாவின் கதாபாத்திரத்தை எதிரொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாமியாக நடித்திருக்கும் ரோபோ சங்கரின் உடைகளே அதற்க உதாரணம். இந்த உலகில் எத்தனையோ சாமியார்கள் உள்ளனர். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான உடை அணியும் பழக்கம் உள்ளது. ஏன், அதுவே சிலருக்கு அடையாளமாகவும் உள்ளது. அப்படி தான், ரோபோ சங்கர் அணிந்திருக்கும் உடை, சாத்சாத், நித்யானந்தாவின் டிட்டோ உடை தான்.
அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை, பாடல் ஒன்றை ஒலிபரப்பச் செய்து, அதில் ஆசிரமத்தின் ராஜமாதா என, வரலட்சுமியை அறிமுகப்படுத்துவதும், அந்த கதாபாத்திரம் அப்படியே நடிகை ரஞ்சிதாவைப் போன்ற உருவாக்கப்பட்டிருப்பதும், அது நித்யானந்தாவின் கதை தான் என்பதை பளிச்சென காட்டிவிட்டது. ஆசிரமவாதிகளின் சூழ்ச்சியால் சாமியார் சிறைக்குச் செல்வது, சிறைக்குச் செல்லும் சாமியாரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக ராஜமாதா கூறுவது, சாமியார் மீது வழக்கை வலுவாக போடச் சொல்லி போலீசாருக்கு ராஜமாதா பணம் கொடுப்பது என எதெல்லாம் கிசுகிசுவாக பேசப்படுகிறதோ, அதையெல்லாம் அப்படியே காட்சிப்படுத்தியிருந்தார் பார்த்திபன்.
படம் முடிந்ததும், செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபனிடம் இந்த கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தனர். கேள்வி: நீங்கள் காட்டியிருக்கு காட்சி, நித்யானந்தாவையும், ரஞ்சிதாவையும் காட்டியிருப்பதாக தெரிகிறதே?
பார்த்திபன்: நாம அதை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அவரே எல்லாத்தையும் காட்டிக்கொண்டு தானே இருக்கிறார். அவரே இதை பார்த்தா, ஜாலியா எடுத்துப்பாரு. படத்திற்கு அவரே ப்ரமொஷன் கொடுப்பார். நம்மைப்பத்தி ஒரு படம் எடுத்திருக்காங்க என்று அவரே அதை பிரபலப்படுத்துவார். அனைத்தையும் ஈஸியாக எடுத்துக்கொள்ளும் ஞானி அவர். அதைப் பத்தி எல்லாம் அவர் கவலைப்படமாட்டார். நான் எல்லா சாமியார்களைப் பற்றியும் கூறவில்லை. ஒரு சாமியார், மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறான் என்பதை தான் காட்டியுள்ளேன்.
என்று அந்த பேட்டியில் பார்த்திபன் கூறியுள்ளார்.
நித்யானந்தா-ரஞ்சிதா தொடர்பான காட்சிகளை தனது படத்தில் வைத்திருப்பதை ஒப்புக்கொண்ட பார்த்திபன், அதை நித்யானந்தாவும் ப்ரமோட் செய்வார் என்று கூறியிருக்கும் நிலையில், பல மாதங்களுக்குப் பின் இன்று நேரலையில் ஆசி வழங்கவிருக்கும் நித்யானந்தா, இதற்கு பதிலளிப்பாரா அல்லது எச்சரிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.