Brigida Apology: ரொம்ப உடைஞ்சிட்டேன்.. மன்னிச்சிருங்க.. - சேரி குறித்த சர்ச்சை பேச்சிற்கு மன்னிப்பு கேட்ட பிரிகிடா..!
சேரி பற்றி தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் நான் மிகவும் உடைந்து விட்டேன் என்று கண்கலங்க பேட்டியளித்துள்ளார் நடிகை பிரிகிடா
சேரி பற்றி தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் நான் மிகவும் உடைந்து விட்டேன் என்று கண்கலங்க பேட்டியளித்துள்ளார் நடிகை பிரிகிடா
இது குறித்து பிரிகிடா பேசும் போது, “அப்படி சொன்னதுக்கு நான் முதல்ல மன்னிப்பு கேட்டுக்கிறேன். இது என்னுடைய வாழ்கையில மிகப் பெரிய ஸ்டார்ட். முழுசா இரண்டு நாள் கூட சந்தோச பட முடியல. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தேன். ஆனா அது இரண்டு நாள்ளே போயிறும்னு நினைக்கல. நான் சொன்னது தப்பா கன்வே ஆயிருச்சு. நான் ரொம்ப ஃபீல் பண்ணேன். முழுசா உடைஞ்சிட்டேன் அப்படின்னே சொல்லலாம். என்னை மன்னிச்சுருங்க” என்றார்.
இது குறித்து விளக்கம் தெரிவித்த பார்த்திபன், “இரவின் நிழல் கதை 71 இல் நடக்கும் கதை. இன்னைக்கு சேரில்லாம் மாறிபோச்சு. இன்னைக்கு அங்க இருந்து எல்லாரும் வேறொரு நிலைமைக்கு வந்துட்டாங்க. அதைப்பற்றி சொல்லும் போது பிரிகிடா சேரில அப்படித்தான் பேசுவாங்க என்று மிக எதார்த்தமாக பேசிவிட்டார். அதை அவள் சொல்லத்தெரியாமல் சொல்லி விட்டாள். உடனே அதற்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியது. அது அவங்களுக்கு தெரியல. இதுல இருந்து பெரிய வாழ்க்கை வாழ ஆசைப்பட நினைச்சவங்களுக்கு திடீர்னு இப்படி ஒரு எதிர்ப்பு கிளம்பியதும் அவங்களால தாங்க முடியல. ரொம்ப எமோஷனல் ஆகிட்டாங்க. அவங்க மன்னிப்பு கேட்டாங்க.. அவங்களுக்கு பதிலா நாங்களும் மன்னிப்பு கேட்டோம்." என்றார்.
முன்னதாக, தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் இயக்குநர் பார்த்திபனும் ஒருவர். இவர் தற்போது எழுதி இயக்கி, நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் “ இரவின் நிழல்”. உலகிலேயே முதல், “நான் லீனியர் சிங்கிள் ஷாட்” படமாக உருவான இந்தப்படம் கடந்த ஜூலை 15 ஆம் திரையரங்குளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
இந்த படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதனிடையே பார்த்திபனிடம் உதவி இயக்குநராக வேலை செய்ய வந்த பிரிகிடாவுக்கு இரவின் நிழலில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார். இந்தப்படத்தில் நிர்வாண காட்சி ஒன்றிலும் அவர் நடித்திருந்தார்.
இதற்கிடையில் பிரிகிடா அளித்த பேட்டி ஒன்றில், 18 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்க கூடிய படங்களை அனைவரும் பார்க்க ஆரம்பித்து விட்டனர். படத்தில் அவ்வளவு கெட்ட வார்த்தை இருக்க கூடாதுதான். இங்கு ஒருவனது வாழ்கையில் கெட்டது மட்டுமே நடந்திருக்கிறது. அப்படியானால் அவனது வாழ்கையை அப்படித்தான் சொல்ல முடியும். சேரிகளுக்கு போனால் நாம் அந்த மாதிரியான வார்த்தைகளைத்தான் கேட்க முடியும். சினிமாவுக்காக ரொம்பவும் மாற்றி விட முடியாது. மக்களுக்கே தெரியும் அங்கு போனால் எப்படி பேசுவார்கள் என்று.. அந்த மாதிரியான விஷயங்களை இந்தப்படத்தில் தவிர்க்கவே முடியாது என கூறியிருந்தார்.
என்ன @rparthiepan கதை சொல்லும் போது இப்படி தான் சொன்னீங்களா? @Brigidasaga22 மன்னிப்பு கேட்க வேண்டும்! இது தான் சாதிய பார்வை, சேரிகளில் மட்டுமே கெட்ட வார்த்தை பேசுவாங்க என்பது எத்தனை காலத்து பொதுபுத்தியின் அபத்தம்! pic.twitter.com/QJZCsDgSAu
— Santhosh Che (@CheSanthosh) July 17, 2022
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சைகளை கிளப்பியது. பலரும் பிரிகிடாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு அவர் விளக்கம் கொடுத்து தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.