Indian 2 update: அடுத்தடுத்து இரண்டு படங்கள்: அதிரடி அப்டேட் கொடுத்த இயக்குநர் ஷங்கர்... குஷியில் கமல் ரசிகர்கள்
இயக்குநர் ஷங்கர் இரண்டு படங்களின் அப்டேட்டை ஒரே ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இரண்டு படங்களின் அப்டேட்டை ஒரே ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
ராம்சரண் தேஜா நடித்து வரும் கேம் சேஞ்சர் மற்றும் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களையும் இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.
இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் படம் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் கிரைன் சரிந்த விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் ஒருவழியாக முடிந்த நிலையில், தற்போது இந்த படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. மேலும், தென் ஆப்பிரிக்காவில் 100 ஆண்டுகால பழமையான ரயில் நிலையம் ஒன்றில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியன் 2 படத்தின் இறுதிகட்ட படபிடிப்புகளுக்கான வேலைகள் சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இங்கு இறுதிகட்ட ஷூட்டிங்கை படமாக்கும் ஷங்கர் அத்துடன் முழு படத்தையும் முடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மற்றொரு புறம் ராம்சரணின் 15-வது படமான கேம் சேஞ்சர் படத்தையும் இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். கேம் சேஞ்சர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் 23-ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்றது. இதில் கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இயக்குனர் ஷங்கரின் திரைப்படத்திற்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்றால் அது மிகையல்ல. காரணம் அவரின் படத்தில் பிரம்மாண்டத்திற்கு குறை இருக்காது என்பதுடன், ஷங்கர் அதிக வெற்றிப் படங்களை கொடுத்தவர் என்பது தான். குறிப்பாக இந்தியன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்தியன் 2 எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பில் கமல் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில், ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், கேம் சேஞ்சர் படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றும், கிளைமாக்ஸ் காட்சிகள் அபாரமாக வந்துள்ளதாகவும், அடுத்ததாக இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அந்த படத்தின் சில்வர் புல்லட் காட்சிகளின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஷங்கர் கொடுத்த இந்த அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.