என் இனிய பொன் நிலாவே பாடல் இளையராஜாவுக்கு சொந்தமானது இல்லை..நீதிமன்றம் அதிரடி
மூடுபனி படத்தில் இடம்பெற்றுள்ள என் இனிய பொன் நிலாவே பாடலின் உரிமம் இளையராஜாவுக்கு சொந்தமானது இல்லை என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

இளையராஜா
இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பாக சமீப காலங்களில் தொடர் விவாதங்கள் நடந்து வருகின்றன. ராஜாவின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தினால் உடனே அவர்களுக்கு இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் பறப்பது வழக்கம். ஆனால் இந்த முறை இளையராஜா இசையமைத்த பாடலை பயன்படுத்துவதற்கான காப்புரிமை அவருக்கே கிடையாது என அதிர்ச்சி உத்தரவை பிறப்பித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்
என் இனிய பொன் நிலாவே பாடல் யாருக்கு சொந்தமானது ?
இளையராஜா இசையமைத்த மூடுபனி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ' என் இனிய பொன் நிலாவே. இந்த பாடலை தற்போது பா விஜய் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ள அகத்தியா திரைப்படத்தில் ரிகிரியேட் செய்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. பழைய பாடலை யேசுதாஸ் பாடியிருந்த நிலையில் இந்த பாடலை விஜய் யேசுதாஸ் பாடியிருந்தார். வேல்ஸ் ஃபிலிம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ' என் இனிய பொன் நிலாவே' பாடலின் காப்புரிமை தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் அனுமதியின்றி இந்த பாடலை பயன்படுத்தியதாகவும் சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் சரிகம நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்திருந்தது. வேல்ஸ் ஃபிலிம் சார்பாக பாடலை பயன்படுத்துவதற்கான அனுமதியை இளையராஜாவிடம் பெற்றதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இப்படியான நிலையில் இந்த வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மூடுபனி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் சரிகம நிறுவனத்திற்கு இடையிலான ஒப்பந்தத்தின் படி என் இனிய பொன் நிலாவே பாடல் வரிகளுக்கான காப்புரிமை இளையராஜாவுக்கு சொந்தமானது இல்லை என்றும் தனக்கு சொந்தமில்லாத ஒன்றை பயன்படுத்துவதற்கான அனுமதியை அவர் வழங்கமுடியாது என இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மினி புஷ்கர்னா தெரிவித்துள்ளார்.
என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான உரிமம் சாரேகாமா நிறுவனத்திற்கே சொந்தம் என்றும் அனுமதியின்றி இந்த பாடலை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறிய நீதிமன்ற 30 லட்சம் ரூபாய் உரிமத் தொகை செலுத்தி இந்த பாடலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் வேல்ஸ் நிறுவனம் இந்த தொகையை கட்ட மறுத்து இந்த பாடலை படத்தில் இருந்து நீக்கியுள்ளது. அகத்தியா திரைப்படம் இன்று ஜனவரி 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

