HBD Vijay Antony: ரசிகர்களே! அக்னி, விஜய் ஆண்டனியாக மாறியது எப்படி தெரியுமா?
நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்ட விஜய் ஆண்டனிக்கு இன்று பிறந்தநாள். அந்த பெயர் எப்படி அவருக்கு வந்தது? என்று தெரிந்து கொள்வோம்.
தமிழ் திரையுலகில் இன்று பலரும் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்களாக உள்ளனர். ஆனால், அவர்களில் வெகுசிலர் மட்டுமே அதில் வெற்றி கண்டுள்ளனர். அவர்களில் மிகவும் பிரபலமானவர் விஜய் ஆண்டனி.
இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் வெற்றி கொண்ட விஜய் ஆண்டனி நடிகராகவும் இன்று அசத்தி வருகிறார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாகவும் உலா வருகிறார். அவருக்கு இன்று 49வது பிறந்தநாள் ஆகும்.
அக்னி விஜய் ஆண்டனியாக மாறியது எப்படி?
லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜய் ஆண்டனி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜா. சினிமாவில் இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் வந்த விஜய் ஆண்டனி முதன்முதலில் ஒலிப்பதிவு பொறியாளராகத்தான் தனது பணியை தொடங்கினார். பின்னர், இசையை கற்றுக் கொண்டு இசையமைப்பாளராக மாறிய அவர், சினிமாவிற்காக தனது பெயரை அக்னி என்று மாற்றி வைத்துக் கொண்டார்.
அக்னி என்ற பெயரிலே அவர் கனா காணும் காலங்கள், காதலிக்க நேரமில்லை சீரியல்களுக்கு இசையமைத்தார். அதில் அவர் இசையமைத்த காதலிக்க நேரமில்லை சீரியலுக்கான என்னைத் தேடி காதல் என்ற பாடல் அப்போது பட்டிதொட்டியெங்கும் பிரபலம். 90ஸ் கிட்ஸ்களின் மனதில் எப்போதும் இந்த பாடலுக்கு என்று தனி இடம் உண்டு. அவரது இசையால் கவர்ந்து இழுக்கப்பட்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தன்னுடைய சுக்ரன் படத்திற்கு இசையமைப்பாளராக அக்னியை ஒப்பந்தம் செய்தார்.
பெயரை மாற்றி வைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்:
தனது படங்களுக்கு நாள், ராசி பார்க்கும் பழக்கம் கொண்ட எஸ்.ஏ. சந்திரசேகர் தனக்கும், அக்னி என்ற பெயருக்கும் ராசியில்லை என்று கூறியுள்ளார். மேலும், அவருடைய பெயரான ஆண்டனி என்ற பெயருக்கு முன்னால் விஜய் என்று வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். பின்னர், அவரே விஜய் ஆண்டனி என்றும் பெயர் சூட்டியுள்ளார். தனது மகன் விஜய்யின் பெயரை முன்னால் வைத்துக் கொண்டால் கண்டிப்பாக பிரபலம் ஆகிவிடலாம் என்று ஆசிர்வதித்து எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் ஆண்டனிக்கு அந்த பெயரை சூட்டியுள்ளார். இப்படித்தான் அக்னி விஜய் ஆண்டனியாக மாறினார்.
அவர் கூறியது போலவே விஜய் ஆண்டனி இன்று தமிழ் சினிமாவின் பிரபலமாக உலா வருகிறார். விஜய் ஆண்டனி என்ற பெயருடனே சுக்ரன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி விஜயகாந்த், விஜய் என தமிழ் திரையுலகின் பெரிய பிரபலங்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் பாடகராகவும் பல படங்களுக்கு பாடியுள்ளார். பிசசைக்காரன் 2 படம் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி தற்போது மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் மற்றும் ஹிட்லர் படங்களில் நடித்து வருகிறார். மென்மேலும் அவர் தமிழ் சினிமாவில் தடம் பதிக்க ஏபிபி நாடுவின் பிறந்தநாள் வாழ்த்துகள்.