HBD MS Viswanathan: தியேட்டர் ஊழியர் To இசைமேதை.. காற்றிலே கலந்த எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இன்று பிறந்தநாள்!
தமிழ் சினிமாவில் 1200 படங்களுக்கு மேல் இசையமைத்த பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இன்று 96வது பிறந்தநாள்.
இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளரும், தமிழ் சினிமாவை இளையராஜாவிற்கு முன்பு கட்டி ஆண்டவராக திகழ்ந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவருக்கு நாளை 96வது பிறந்தநாள் ஆகும். இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதன் பெரும் செல்வ செழிப்புடன் வாழ்ந்தாலும் சிறு வயதில் பல இன்னல்களையும், சிரமங்களையும் எதிர்கொண்டே வளர்ந்தார்.
தியேட்டரில் நொறுக்குத் தீனி விற்பவர்:
கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ள கிராமத்தில் 1928ம் ஆண்டு பிறந்தவர். எம்.எஸ்.விஸ்வநாதன் தன்னுடைய 4 வயதிலே தந்தையை இழந்தவர். வீட்டின் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பு அவருக்கு கிடைக்கவில்லை. சிறுவயதிலே திரையரங்குகளில் நொறுக்குத் தீனி விற்பனை செய்துள்ளார்.
பின்னர், நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்ற அவர், 13 வயதிலே தனது கச்சேரியை நடத்தினார். திரைப்பட கம்பெனி ஒன்றில் சர்வராக பணியாற்றிய அவருக்கு சி.ஆர்.சுப்புராமன் குழுவில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அந்த குழுவில் ஆர்மோனிய கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவருக்கு, நண்பராக ராமமூர்த்தி கிடைத்தார். அவரும் அதே குழுவில் வயலின் கலைஞராக இணைந்தார்.
1200 படங்களுக்கு இசை:
அப்போதுதான், இசையமைப்பாளர் சுப்புராமன் திடீரென காலமானார். அப்போது என்ன செய்வதென்று தெரியாமல் தயாரிப்பாளர்கள் திகைக்க, எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து படத்தை முடித்துக் கொடுத்தனர். கண்ணதாசன், வாலி, பாபநாசம் சிவன், தஞ்சை ராமையாதாஸ், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என பல ஜாம்பவான் பாடலாசிரியர்களின் வரிகளில் தமிழ் சினிமாவின் கிளாசிக் பாடல்களை கொடுத்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெயசங்கர் என அப்போதைய ஜாம்பவான் நடிகர்களின் திரை வெற்றிக்கு பெரும்பங்காற்றினார்.
தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். மொத்தம் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ள எம்.எஸ்.விஸ்வநாதன் தனி ஆளாக 500க்கும மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு இசையமைத்தது போலவே, ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, மோகன், பாக்யராஜ், ரகுமான் ஆகியோர் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
காற்றிலே கலந்த எம்.எஸ்.வி:
2015ம் ஆண்டு தனது 87வது வயதில் ஜூலை 14ம் தேதி காலமானார். காலம் நம்மிடம் இருந்து அவரை பிரித்துச் சென்றாலும் ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசையமைத்த அவரது இசை மூலமாக காற்றில் என்றும் நம்முடன் அவர் கலந்தே இருப்பார்.