HBD Madonna Sebastian: “தேவதை வம்சம் நீயோ” - நடிகை மடோனா செபாஸ்டியனின் பிறந்தநாள் இன்று!
மடோனா செபாஸ்டியன் இன்று தனது 32 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.தமிழில் அவர் நடித்த கதாபாத்திரங்களைப் பற்றிப் பார்க்கலாம்
மடோனா
பிரேமம் திரைப்படத்தில் அறிமுகமாகி ரசிகர்களை வசியம் செய்த மடோனா செபாஸ்டியன் இன்று தனது 32 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த மடோனா.ஆரம்பகாலத்தில் சூர்யா டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார்.மேலும் சின்ன வயதிலிருந்தே கர்நாடக இசையில் அவருக்கு நல்ல பயிற்சி இருந்த காரணத்தினால் திரைப்படப் பாடல்கள் சிலவற்றையும் பாடியிருக்கிறார் மடோனா.சூர்யா டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியபோது அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரேமம் திரைப்படத்தின் இயக்குனர் அல்ஃபோன்ஸ் புத்திரன் மடோனாவை ஆடிஷனுக்கு அழைத்திருக்கிறார். பிரேமம் படத்தின் பிரமாண்ட வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் தொடர்ச்சியாக நடித்து வருபவர் மடோனா செபாஸ்டியன்.
மடோனா செபாஸ்டியன் என்றால் முதலில் நமக்கு நினைவிற்கு வரும் காட்சி என்ன? பிரேமம் படத்தில் ஸ்லோ மோஷனில் ரெட் வெல்வேட் கேக் சாப்பிடும் சீன் நியாபகம் வருகிறதா.அப்படி இல்லையென்றால் காதலும் கடந்துபோகும் படத்தில் கடைசியாக காரில் அமர்ந்து விஜய் சேதுபதியைப் பார்த்ததும் ஒரு சின்னச் சிரிப்பு அவர் முகத்தில் தோன்றுமே அது.தமிழ் சினிமாவில் அவர் நடித்துள்ள கதாபாத்திரங்களைப் பார்க்கலாம்
காதலும் கடந்து போகும்
இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கி விஜய் சேதுபதி மற்றும் மடோனா இணைந்து நடித்தப் படம் காதலும் கடந்து போகும்.ஒரு சுமாரான கல்லூரியில் படிப்பை முடித்து சென்னைக்கு வந்து ஒரு நல்ல வேலையில் சேந்து வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் மடோனா.ஆனால் அவரது கெட்ட நேரம் வேலை பறிபோய் நல்ல வேலை ஒன்று கிடைக்காமல் தனது வீட்டிற்கும் திரும்பபோக விரும்பாமல் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் பெண்ணாக நடித்திருப்பார் மடோனா.தனது ஊரை விட்டு வீட்டை விட்டு சொந்தக் காலில் நிற்க ஒரு பெண் எதிர்கொள்ளும் சிரமங்களை மிக ரம்மியமாக சொன்னப் படம் காதலும் கடந்துபோகும்.
வானம் கொட்டட்டும்
இயக்குனர் மனிரத்னத்தின் உதவி இயக்குனர் தனா இயக்கியப் படம் வானம் கொட்டட்டும். விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன் இணைந்து நடித்திருப்பர்.மடோனா செபாஸ்டியன் நடித்ததில் அதிகம் பேசப்படாத கதாபாத்திரம். காரணம் படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு உறுதியான ஒரு இடத்தை அளிக்கமுடியாத குழப்பம் இருந்துகொண்டே இருப்பதுதான்.பெரும் பணமோசடியில் சிக்கியப்பின் தலைமறைவாகிறார் மடோனாவின் அப்பா. தன் தந்தையின் செயலால் தனக்கு ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ளும் ஒரு கதாபாத்திரமாக உத்தேசிக்கப்பட்டு ஆனால் தெளிவில்லாமல் போய்விட்ட ஒரு கதாபாத்திரம்.ஆனால் மடோனாவின் நடிப்பு எந்த வகையில் பாதிக்கப் படவில்லை.
பவர் பாண்டி
பவர் பாண்டி திரைப்படத்தில் ரேவதியின் இளமைக்கால கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.குறைந்த நேரமே படத்தின் வந்திருந்தாலும் ரசிகர்களிடம் நல்ல ஒரு கேமியோவாக இவருக்கு இருந்தது.
கவண்
விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஒருமுறை சேர்ந்து நடித்தப் படம் கவண்.படம் முழுவதிலும் வந்துசென்றாலும் தனித்துவமான எந்த அம்சமும் இந்த கதாபாத்திரத்தில் இல்லாதது வருத்தம் தான்.