Goundamani: கவுண்டமணி மனைவி யார் ? பெயருக்கு பின்னால் இருக்கும் சீக்ரெட் - பிரபலம் கூறிய தகவல்!
காமெடி கிங் கவுண்டமணி, கவுண்டர் இல்லை என்றும், அவரின் மனைவி சாந்தி யார் என்பது பற்றியும் மூத்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

கவுண்டமணி:
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காமெடி நடிகர்களில், கவுண்டமணியும் ஒருவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜய், சத்யராஜ், விஜயகாந்த், அர்ஜூன் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். காமெடி, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் என்று இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது. இந்த நிலையில் தான் அவரது மனைவி சாந்தி சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
கவுண்டமணி குடும்பம்:
இந்த நிலையில் தான் நடிகரும், மூத்த பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், காமெடி நடிகர் கவுண்டமணி குறித்து யாருக்கும் தெரியாத பல தகவல்களை கூறியுள்ளார். " இவர் கூறுகையில், கவுண்டமணி பற்றி எல்லோருக்கும் ஓரளவுக்கு தெரியும்... ஆனால், அவரது மனைவி, மற்றும் 2 மகள்களை பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களது புகைப்படத்தை கூட கவுண்டமணி வெளியிட்டதில்லை. மேலும், அவர்களைப் பற்றி கேட்டாலும் கவுண்டமணி என்னுடைய குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ள உனக்கென்ன அவ்வளவு ஆர்வம் என்று நறுக்கென கேட்டுவிடுவார்.

கவுண்டமணியின் குணங்கள்:
அதே போல் நான் ஒரு நடிகன், சம்பளம் வாங்குகிறேன், நடிக்கிறேன். அதனால், என்னை பற்றி நீங்கள் கேட்கலாம் எழுதலாம். ஆனால், என்னுடைய குடும்பத்தை பற்றி எதற்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்பார். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தனியாகத்தான் வருவார். கோயிலுக்கு கூட செல்லமாட்டார். தனது பிறந்தநாளையும் கொண்டாடமாட்டார். எல்லோரையும் அவன் இவன் என்று தான் கூப்பிடுவார்.
அவருடைய மனைவி சாந்தி அந்த காலங்களில் நாடகங்களில் நடித்தவர். அதுமட்டுமின்றி ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். கவுண்டமணியும், சாந்தியும் நாடகங்களில் இணைந்து நடித்தபோது, காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். குண்டு கருப்பையா கவுண்டமணியை விட வயதில் மூத்தவர் என்பதால் அவரைப் பற்றி பல தகவல்களை என்னிடம் சொல்வார்.
கவுண்டமணி கவுண்டர் கிடையாது:
கவுண்டமணி கவுண்டர் கிடையாது. அவர் கவுண்டர் அடிப்பதில் கில்லாடி. அவருடைய பெயர் சுப்பிரமணியன் கருப்பையா. சினிமாவின் ஆரம்பத்தில் கவுண்டர் மணி கவுண்டர் மணி என்று அழைத்து நாளடைவில் கவுண்டமணி என்று மாறிவிட்டது. இதனை பாக்யராஜூம் சொல்லியிருக்கிறார். அவர் தான் கவுண்டமணி என்ற பெயரை அவருக்கு சூட்டினார்.

கவுண்டமணிக்கு கார்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும். அவர் கிட்டத்தட்ட 9 கார்கள் வைத்திருக்கிறார். பெரும்பாலும் கவுண்டமணி யாருடைய நிகழ்ச்சிகளிலும் பெரிதும் கலந்து கொள்ளமாட்டார். அவருக்கு சுமித்ரா, செல்வி என்று 2 மகள்கள் உள்ளனர். சாதி, மதம் பார்க்காமல் தான் கவுண்டமணி தனது மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.
பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்த தகவல்:
ஒரு மகளுக்கு மாப்பிள்ளை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரின் உறவினர். இதை அவரே சொல்லியிருக்கிறார். அவருக்கு ரசிகர் மன்றம் எல்லாம் கிடையாது. வைத்துக் கொள்ளவும் விரும்பமாட்டார். ஒருமுறை கவுண்டமணியிடம் பொள்ளாச்சி தானே உங்களது சொந்து ஊரு என்று கேட்டேன். அதற்கு அவர் என்னுடைய சொந்த ஊர் எது என்று எனக்கு தெரியாது. நானே மறந்துவிட்டேன். வேண்டுமென்றால் பொள்ளாச்சி தான் கவுண்டமணிக்கு சொந்த ஊருன்னு பத்திரிக்கையில் போட்டுக்கோ என்று சொல்லிவிட்டார் என்று கூறியுள்ளார். இந்த தகவல்கள் வைரலாகி வருகிறது.





















