Ajith Net Worth: 54ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்தின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
தமிழ் சினிமாவில் திரையுலகை தாண்டி பல சாதனைகளை படைத்து வரும் நடிகர் அஜித் இன்று தன்னுடைய 54-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் இவரது சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மட்டுமின்றி, இயக்குநர்கள் கொண்டாடும் ஒரு நடிகர் என்றால் அது அஜித் குமார் தான். ஒரு நடிகர் என்பதை தாண்டி கார் மற்றும் பைக் ரேஸ் மீது அதீத காதல் கொண்டவர். இந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 படங்கள் ரிலீஸ் ஆனாது. இதில் 'விடாமுயற்சி' கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், 'குட் பேட் அக்லி' அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் ரூ.280 கோடி வரை வசூல் சாதனை செய்தது. அதோடு, அஜித்தின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாகவும் அமைந்தது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் தனக்கு பிடித்த நடிகரை சினிமாவில் எப்படியெல்லாம் பார்க்க ஆசைப்பட்டாரோ அதே போன்று அவரை சினிமாவில் காட்டியது தான் இந்த படத்தின் கூடுதல் சிறப்பு.

'குட் பேட் அக்லி' படப்பிடிப்பை முடிந்து, 4 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், அஜித் முழுக்க முழுக்க தற்போது கார் ரேசில் கவனம் செலுத்தி வருவதால், இதுவரை தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. அஜித்தின் அடுத்தப்பட இயக்குனர் யாராக இருக்கும் என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் நிலவி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற பத்ம விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் பத்ம பூஷண் விருது பெற்ற அஜித்துக்கு, ஜப்பானில் ஒசாகா சர்வதேச தமிழ் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில், சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான துணிவு படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நிலையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மே 1 ஆம் தேதியான இன்று அஜித் தனது 54ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மனைவி ஷாலினி உள்பட சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் தொடர்ந்து இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் அவரது சொத்து மதிப்பு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி அஜித்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.350 கோடி முதல் ரூ.400 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதை விட அவரது சொத்து மதிப்பு அதிகமாகத்தான் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றது. அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லீ படத்திற்கு அஜித் ரூ.110 கோடி வரையில் சம்பளம் பெற்றுள்ளார்.
கார் மற்றும் பைக் ரேஸரான அஜித்திடம் ரூ.1.30 கோடி மதிப்பிலான லேண்ட் ரோவர், ரூ.1.5 கோடி மதிப்பிலான பிஎம் டபிள்யூ 740 லி கார், ரூ.4 கோடி மதிப்பிலான ஃபெர்ராரி 458 இடாலியா கார் என்று பல கார்கள் உள்ளன. இது தவிர ரூ.22 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் அட்வென்சர்ஸ் பைக்கும் வைத்திருக்கிறாராம். இந்த பைக்கில் தான் அவர் இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






















