55 years of Shanthi Nilayam: அட்டகாசமான கூட்டு முயற்சி.. காலங்களை கடந்தும் கொண்டாடப்படும் 'சாந்தி நிலையம்'!
55 years of Shanthi Nilayam : ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான 'சாந்தி நிலையம்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 55 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னர்களாக விளங்கிய எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசன் நடிப்பில் சூப்பர் ஹிட் படங்கள் மாறி மாறி வெளியான பொற்காலத்தில் 1969ம் ஆண்டு மிக முக்கியமான ஆண்டாகும். எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண், நம் நாடு சிவாஜியின் தெய்வமகன், அன்பளிப்பு, காவல் தெய்வம், சிவந்த மண், திருடன் உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெளியாக ஜெமினி கணேசன் நடிப்பில் இருகோடுகள், பொற்சிலை, குலவிளக்கு, பூவா தலையா உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெளியாகின. அந்த பட்டியலில் 1969ம் ஆண்டு இதே தினத்தில் வெளியான படம் தான் 'சாந்தி நிலையம்'. இப்படம் வெளியாகி இன்றுடன் 55 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
ஜெமினி கணேசன், நாகேஷ், பண்டரிபாய், வி.எஸ்.ராகவன், விஜய சந்திரிகா, ராம பிரபா, மஞ்சுளா. கே. பாலாஜி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படத்தில் நடிகை காஞ்சனா அறிமுகமானார். அவரை சுற்றிலும் நகரும் வகையில் அமைக்கப்பட்ட இந்த கதைக்களத்தில் பாடல்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது. படம் முழுக்க முழுக்க சாந்தி நிலையம் என்ற பங்களாவை சுற்றி எடுக்கப்பட்டது என்பதால் படத்திற்கு 'சாந்தி நிலையம்' என பெயரிடப்பட்டது.
மெல்லிசை மன்னர் இசையமைப்பில் கண்ணதாசன் வரிகளில் ஒலித்த 'இயற்கை என்னும் இளைய கன்னி' என்ற பாடல் அந்த காலகட்டத்திலேயே சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பாடல். மேலும் அதில் ஒரு ஸ்பெஷல் என்றால் அப்பாடல் தான் எஸ்.பி.பி பாடிய முதல் பாடல்.
சாந்தி நிலையம் படத்தின் ஒளிப்பதிவும் பெரிய அளவில் பேசப்பட்டது. மிகவும் பிரபலமான ஒளிப்பதிவாளர் மார்க்கஸ் பார்ட்லி இப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை பெற்றார். 'பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே' என்ற பாடல் முழுக்க ஹீலியம் பலூன்கள் வானில் பார்ப்பது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். உண்மையிலேயே அந்த பாடல் தரைமட்டத்தில் தான் படமாக்கப்பட்டது. ஆனால் அவை வானில் பார்ப்பது போல தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படமாக்கி இருப்பார். இது அவரின் திறமையை வெளிப்படுத்தியது.
ஆங்கில நாவல் மற்றும் தி சவுண்ட் ஆஃப் மியூசிக் திரைப்படத்தை மையமாக வைத்து 'பேடி பண்டவலு' என்ற பெயரில் கன்னடத்தில் வெளியானது. அப்படத்தை தழுவி தமிழில் ரீ மேக் செய்யப்பட்டது. எஸ்எஸ் வாசன் மற்றும் ஜிஎஸ்.மணி இணைந்து தயாரிக்க அதை ஜிஎஸ் மணி இயக்கி இருந்தார்.
நல்ல கதை, திரைக்கதை, வசனம், இசை, நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு என அனைவரின் கூட்டு முயற்சி தான் 'சாந்தி நிலையம்' படம் 55 ஆண்டுகளை கடந்தும் பேசப்படுவதற்கு முக்கியமான காரணம். இது போன்ற ஒரு சில படைப்புகள் காலங்களை கடந்தும் கொண்டாடப்படும் காவியங்கள்.