`2 இட்லிக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்த பாலா!’ - திரைப்பயணம் குறித்து மனம் திறந்த கஞ்சா கருப்பு!
காமெடி நடிகர் கஞ்சா கருப்பு சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் திரைத்துறைக்குள் தான் நுழைந்த கதை குறித்து பேசியுள்ளார்.. அதனை இங்கே கொடுத்துள்ளோம்.
காமெடி நடிகர் கஞ்சா கருப்பு சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் திரைத்துறைக்குள் தான் நுழைந்த கதை குறித்து பேசியுள்ளார்.
கஞ்சா கருப்பு
கஞ்சா கருப்பு பேசிய போது, `திரைத்துறையில் பணியாற்றுவதை விட தொழில் செய்வது பெரிது. எத்தனையோ நடிகர்கள் ஹோட்டல் நடத்தி வருகிறார்கள். நான் சின்ன வயதில் இருந்தே ஹோட்டல் நடத்தி வந்தேன். சிவகங்கை மாவட்டத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு சாதாரண கூரைக்கடை ஹோட்டல் நடத்தி வந்தேன்.. இட்லி, தோசை, ஆப்லெட், ஹாப்பாயில், சிக்கன், மட்டன் ஆகியவற்றை மட்டுமே செய்து விற்றுக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அங்கு இயக்குநர் பாலா அண்ணன் வந்தார்.. `அண்ணே என்ன வேணும்?’ என்று கேட்டேன்.. `இட்லி வேண்டும்.. கொத்தமல்லி சட்னியுடன் வேண்டும்’ எனக் கேட்டார். அவருக்குப் பிடித்த விதமாக அந்த சட்னியை அரைத்துக் கொடுத்தேன். ஆப்பாயில் போடச் சொன்னார்.. அதனையும் திருப்பாமல் தருமாறு கூறினார்.. அதனையும் செய்து கொடுத்தேன்... `பரவாயில்லயே.. ஹோட்டலில் இவ்வளவு தெளிவாக இருந்தால் வேறு இடங்களிலும் தெளிவாக இருப்பாயே’ எனக் கூறினார். அவருக்கு என் மேல் நம்பிக்கை வந்தது’ எனக் கூறியுள்ளார்.
20 ஆயிரம் ரூபாய்..
தொடர்ந்து அவர், `அவர் உணவைச் சாப்பிட்டுவிட்டு, `பில் எவ்ளோ ஆச்சு?’ எனக் கேட்டார்.. `அண்ணே, உங்ககிட்ட காசு எல்லாம் வாங்க மாட்டேன் அண்ணே’ என்றேன்.. `டேய் எவ்ளோன்னு சொல்லுடா’ எனக் கூறி, தன் பையில் இருந்து பணத்தை எடுத்தார். அவர் கிள்ளி பார்க்க மாட்டார்.. அள்ளிக் கொடுத்துவிட்டு அப்படியே போய்விடுவார்.. அதுதான் அவரது பழக்கம். அப்படியே 20 ஆயிரம் ரூபாயைக் கல்லாவுக்குள் தூக்கி எறிந்துவிட்டு சென்றுவிட்டார்.. அன்றைக்கு 20 ஆயிரம் ரூபாய் என்பது எனக்கு 20 லட்சம் ரூபாய் மாதிரி இருந்தது.
சொந்தக் காரன்..
அதை வைத்து கடையை சற்றே முன்னேற்றினேன். திடீரென ஒரு நாள் ஒரு கார் வந்தது. அதில் வந்த பாலா சார், `எனக்கு ஒரு பிரச்னை.. நீ வரணும்’ எனக் கூறி அழைத்துச் சென்றுவிட்டார்.. எனக்கு என்னவென்றே தெரியாது. அங்கு சென்ற பிறகு தான் அது படப்பிடிப்பு என்று தெரியும். அப்போது என்னிடம் ஒரு வாக்குறுதி வாங்கிக் கொண்டார்.. `நீ என்னுடைய சொந்தக் காரன் என்று யாரிடம் சொல்லக் கூடாது.. வேலைக்காரர்களோடு வேலைக்காரனாக நீயும் வேலை செய்ய வேண்டும்.. நீ இந்தத் துறையில் வளர்ந்த பிறகு, உண்மையை சொல்லிக் கொள்’ எனக் கூறினார். அதை ஒரு லட்சியமாகக் கொண்டு வேலை பார்த்தேன்.. அதுதான் என்னை இந்த உயரத்திற்கு அழைத்து வந்திருக்கிறது’ என்று கூறினார். அவர் நடித்த அந்தத் திரைப்படம் தேசிய விருது பெற்ற `பிதாமகன்’ திரைப்படம் ஆகும்.