Flashback - Oscars: ஆஸ்கர் வேண்டாம்! சமூக பிரச்னைகளுக்காக விருதை புறக்கணித்த பிரபலங்களின் லிஸ்ட்!
Oscars: ஆஸ்கருக்கு தேர்வாகி விருதுகளை நிராகரித்த பிரபலங்களின் வரிசையைப் பார்க்கலாம்!
ஆஸ்கர் 2024
2024ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் கலைஞர்களின் பெயர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. உலகின் தலைசிறந்த அங்கீகாரமாக கருதப்படும் இந்த விருது பல்வேறு மக்களின், படைப்பாளிகள் கனவாக இருந்து வருகிறது. இப்படியான ஒரு விருதை அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு சில பிரபலங்கள் நிராகரித்தும் உள்ளார்கள். அந்தந்த காலத்தில் நிகழ்ந்து வந்த சமூக பிரச்சினைகளுக்கு ஆதரவாக படைப்பாளிகள் இந்த விருதுகளை நிராகரித்துள்ளார்கள். ஆஸ்கர் விருதை இதுவரை யார் யார் என்னென்ன காரணங்களுக்காக நிராகத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.
டட்லி நிக்கோல்ஸ் (Dudley Nichols)
முதன்முதலில் ஆஸ்கர் விருதை நிராகத்திதவர். திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநருமானன டட்லி நிகோல்ஸ் என்பவர். 1936ஆம் ஆண்டு ஐரிஷ் சுதந்திரப் போராட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தி இன்ஃபார்மர் (The Informer ) படத்திற்கு திரைக்கதை எழுதினார் டட்லி நிக்கோல்ஸ்.
பரவலான அங்கீகாரம் பெற்று மொத்தம் ஆறு பிரிவுகளுக்குள் இப்படம் பரிந்துரைக்கப்பட்டு அதில் நான்கு விருதுகளை வென்றது. சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான பிரிவின் கீழ் டட்லி பரிந்துரைக்கப்பட்டிருந்தார். அன்றைய சூழலில் திரைக்கதை எழுத்தாளர்களுக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்று திரைக்கதை எழுத்தாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனை காரணமாகத் தெரிவித்து தனது விருதை நிராகரித்தார் டட்லி. இதன் விளைவாக அமெரிக்க திரைக்கதை எழுத்தாளர்கள் சங்கத்தில் முதல் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த சில ஆண்டுகளுக்குப் பின் இந்த விருதை அவர் ஏற்றுக் கொண்டார்.
ஜார்ஜ். சி ஸ்காட் (George C Scott)
1970 இல் வெளியான பேட்டன் (Patton ) படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை வென்றார் ஜார்ஜ் சி ஸ்காட். ஆனால் இந்த விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்ட நாள் முதல் தான் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த விருது விழா பணத்திற்காக போலியாக நடைபெறும் ஒரு கூத்து என்று மிக கடுமையாக குறிப்பிட்டிருந்தார். அவரது சார்பாக இந்த விருதை அவர் நடித்த படத்தின் தயாரிப்பாளர் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார். பின் அடுத்த நாளே ஜார்ஜின் விருப்பத்தின் பேரில் இந்த விருதை ஆஸ்கர் கமிட்டிக்கு திருப்பி கொடுத்தார்.
மார்லன் பிராண்டோ (Marlon Brando)
ஆஸ்கர் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு என்றால் அது உலக புகழ்பெற்ற நடிகர் மார்லன் பிராண்டோ இந்த விருதை நிராகரித்த நிகழ்வு என்று சொல்லலாம். பிரான்சிஸ் ஃபோர்ட் கொபொல்லா (Francis Ford Copolla) இயக்கிய ‘காட்ஃபாதர்’ படத்தில் மார்லன் பிராண்டோவின் நடிப்பு உலக அளவில் பாராட்டுக்களை பெற்றது. இந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது மார்லன் பிராண்டோவுக்கு அறிவிக்கப்பட்டது.
செவ்விந்தியர்கள் என்று குறிப்பிடப்படும் அமெரிக்க பூர்வகுடிகள் ஹாலிவுட் சினிமாக்களில் சம உரிமை வழங்கக் கோரி அப்போது போராட்டம் நடைபெற்று வந்தது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது விருதை நிராகரித்தார் மார்லன் பிராண்டோ. அவரது இந்த செயல் பெரும் தாக்கத்தையும் இந்த பிரச்னையை நோக்கி ஊடக கவனத்தையும் ஈர்த்தது. இதற்கு முன்பாக 1955ஆம் ஆண்டே சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை மார்லன் பிராண்டோ பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்கர் ஃபர்ஹதி (Asghar Farhadi )
இரானிய இயக்குநரான அஸ்கர் ஃபர்ஹதி எ செபரேஷன் (A Separation) படத்திற்காக சிறந்த அயல்மொழி படத்திற்கான ஆஸ்கர் விருதை 2012ஆம் ஆண்டு வென்றார். இதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய சேல்ஸ்மேன் (Salesman) படம் சிறந்த அயல்மொழி படத்திற்கான பிரிவில் இரண்டாவது முறையாக ஆஸ்கருக்கு தேர்வானது. அன்றைய சூழலில் அமெரிக்க ஜனாதிபதி இரான் உள்ளிட்ட பல இஸ்லாமிய நாட்டு குடிமக்களுக்கும் அகதிகளுக்கு எதிராக பலவிதமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தார், இதற்கு தனது எதிர்ப்பினை காட்டும் வகையில் தான் இந்த விருது விழாவில் பங்கெடுக்க மாட்டேன் என்று அஸ்கர் ஃபர்ஹதி தெரிவித்தார்.