சினிமா முதல் சுற்றுச்சூழல் ஆர்வலர் வரை - நடிகர் விவேக் கடந்து வந்த பாதை..
தமிழ் சினிமாவில் ‘சின்ன கலைவாணர்’ என அழைக்கப்பட்ட நடிகர் விவேக்கின் மரணம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விவேக் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவருக்கு வயது 59. அவரின் உயிரிழப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு கலைஞர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விவேக் என்ற விவேகானந்தன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 19-11- 1961 அன்று பிறந்தார். மதுரையில் தனது படிப்பை முடித்த இவர், 1986 -1992 ஆண்டுகளில் தலைமைச் செயலக ஊழியராக பணியாற்றினார். 1987 ஆம் ஆண்டில் இயக்குநர் பாலசந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ படம் மூலம் அறிமுகமானார்.
200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் விவேக், கலைவாணர் என்.எஸ்.கே போல் படங்களில் சமூக சீர்திருத்த கருத்துகளை எடுத்துக்கூறியவர். இதனால், அவர் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டார். விவேக் தனி காமெடியனாக புகழ்பெறச் செய்த திரைப்படம் ‘காதல் மன்னன்’. அதன்பிறகு, குஷி, தூள், ரன் என பல வெற்றிப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
ரஜினி, விஜய், அஜித், என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள விவேக், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, மாதவன் என அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் நடித்துள்ளார். நாகேஷ், மனோரமா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சந்தானம் கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். நான்தான் பாலா, வெள்ளைப்பூக்கள் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும், பாலசந்தர், பாரதிராஜா, ஷங்கர் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களுடனும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2020-ஆம் ஆண்டு ‘தாராள பிரபு’ என்ற படத்தில் கடைசியாக நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும் விவேக் ஒப்பந்தமாகியிருந்தார்.
தமிழ் சினிமாவில் 220-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்த விவேக், கலையில் சிறைந்த பங்களிப்பை கொடுத்ததற்காக அவருக்கு 2009ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும், சிறந்த காமெடி நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை 5 முறை பெற்றுள்ளார். உன்னருகே நானிருந்தால், ரன், பார்த்திபன் கனவு, அந்தியான், சிவாஜி ஆகிய படங்களுக்காக விருது பெற்றார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களை முன்மாதிரியாக கொண்டு சமூக செயல்பாட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் விவேக். சுற்றுச்சூழல் ஆர்வலராக விளங்கிய அவர், மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை முன்னெடுத்து சுமார் ஒரு கோடி மரங்களை நட்டு விழிப்புணர்வு ஊட்டினார்.