Flashback: நாக்கை கடித்துத் துப்ப முயன்ற மம்முட்டி...அட்வான்ஸ் வாங்கி விலகிய சூர்யா... இது ‛ஆனந்தம்’ கதை!
லிங்குசாமி மீண்டும் மீண்டும் டேக் கேட்க, ‛முதலில் அவனை போகச் சொல்லுங்க...’ என, லிங்குசாமியை வெளியேற்றிவிட்டு வசனத்தை பேசிவிட்டு புறப்படுகிறார் மம்முட்டி.
தமிழ் சினிமாவில் குடும்பப்படங்களுக்கு பஞ்சமில்லை. அதற்காகவே அக்மார்க் இயக்குனர்களும் இருக்கத்தான் செய்தார்கள். விசு, விக்ரமன் என ஒரு பெரிய பட்டியல் அதில் வரும். ஆனால் ஒருவர் தனது முதல் படத்தை மட்டும் சுத்தமான குடும்ப படமாக எடுத்துவிட்டு, பின்னர் வெவ்வேறு ஜானர்களில் பயணித்தார். அவர் லிங்குசாமி. அவரது முதல் படம் ஆனந்தம். அதுவரை குடும்பப்படங்களில் பக்கம் பக்கமாய் வசனம், குடகுடமாய் கண்ணீர் என்பதை உடைத்து, உணர்ச்சிகளை உலாவ விட்ட புதிய யுக்தியை கையாண்ட இயக்குனர். ஆனந்தம்... மகிழ்வான பெயர். ஆனால், அந்த ஆனந்தம் ஆனந்தமாய் உருவாகிவிடவில்லை. சில... இல்லை இல்லை பல தடைகளை தாண்ட வேண்டியிருந்தது. இதோ இன்றைய ப்ளாஷ்பேக்கில் ஆனந்தம்...
சூப்பர் குட் பிலிம்ஸ் வேண்டவே வேண்டாம் என்ற லிங்குசாமி!
இயக்குனர் ஆக வேண்டும் என்கிற வெறியில் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய லிங்குசாமி, இறுதியில் இயக்குனர் விக்ரமனிடம் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் உதவி இயக்குனர் ஆகிறார். எப்படியும் இயக்குனர் ஆகிவிட வேண்டும் என்பது மட்டும் தான் அவரது இலக்கு. அந்த வேலையும் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. அவரிடம் பக்கா குடும்ப சப்ஜெக்ட் இருக்கிறது. அதுவும் அவரது குடும்பம் சார்ந்த கதை. வழக்கமான குடும்ப கதையாக அதை எடுத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் லிங்குசாமி. பலரும் அந்த கதைக்கு சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரியை சந்திக்க பரிந்துரைக்கின்றனர். ஆனால் அவருக்கு அதில் விருப்பமில்லை, சூப்பர் குட் பிலிம்ஸின் குடும்ப கதைகளில் குறிப்பிட்ட சில நடிகர்களை பரிந்துரைப்பார்கள் என்கிற பயம் லிங்குசாமிக்கு. அவர் ஆலயம் மாதிரி ஒரு நிறுவனத்தை விரும்புகிறார். பிசி ஸ்ரீராம் மாதிரி ஒளிப்பதிவாளர், மணிரத்னம் படம் மாதிரி வசனங்கள் என அவரது உலகம் வேறு மாதிரி இருக்கிறது. அந்த நேரத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போஸ்டரை பார்க்கிறார். ‛நாம நினைத்த உலகம்... இன்னொருவன் மூளையிலும் ஓடியிருக்கிறதே...’ என்கிற எண்ணம் அவருக்கு. மம்முட்டி-முரளி-அஜித்-சூர்யா தான் அவரது ஆனந்தம் படத்தின் கதாபாத்திரங்கள். ஆனால் சூப்பர் குட் பிலிம்ஸ் போனால் நிழல்கள் ரவி மாதிரி தம்பியை தந்துவிடுவார்கள் என அவர் பயந்தார். அதனால் சூப்பர் குட் பிலிம்ஸ் தவிர்த்த பிற நிறுவனங்களுக்கு நடையாய் நடந்தார்.
ஆகாயத்தில் முடிவான ஆனந்தம் கதை!
ஞானவேல் படம் எடுப்பதாக உறுதியளிக்கிறார். அதை நம்பி திருமணமும் செய்கிறார் லிங்குசாமி. ஆனால் திருமணத்தன்று தான் அவர் படம் எடுக்கவில்லை என்கிற தகவல் கிடைக்கிறது. இப்படி நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாகிவிட்டது. பாரமும் கூடிவிட்டது. நல்ல கதை இருக்கிறது. ஆனால் அதை எடுக்க யாரும் முன்வரவில்லை. ராஜகுமாரன் தயவில் ஆர்.பி.செளத்ரியை சந்திக்கும் வாய்ப்பு லிங்குசாமிக்கு கிடைக்கிறது. அவரது அலுவலகத்தில் சீனிவாசன் என்பவரிடம் கதை சொல்ல செளத்ரி கூறுகிறார். சீனிவாசனுக்கு கதை பிடித்துவிட்டது. இப்போது மீண்டும் செளத்ரியிடம் செல்கிறார். ஸ்கிரிட் இருக்கா என செளத்ரி கேட்கிறார். ஒரு பெரிய புத்தகத்தை அவர் நீட்டுகிறார். ‛சரி.. நான் அவசரமா ஒரு இடத்திற்கு போறேன்.. விமானத்தில் கதையை படிக்கிறேன்..’ என எடுத்துச் செல்கிறார். ஊர் திரும்பியதும் முதலில் அழைத்தது லிங்குசாமியை. ‛கதை படித்தேன்... நல்லா இருந்தது. நாம பண்ணலாம்,’ என பச்சை கொடி காட்டுகிறார் செளத்ரி.
அஜித்-சூர்யா ‛அவுட்‛... அப்பாஸ் ‛இன்’!
தயாரிப்பாளர் கிடைத்தாகிவிட்டது. இனி நடிகர்களை தயார் செய்ய வேண்டும். கதைப்படி பெரிய பட்டாளம் இருக்கிறது. ஏற்கனவே மம்முட்டியிடம் கதை சொல்லி அவரிடம் ஒப்புதல் வாங்கியிருந்ததால், அவர் வருகையில் பிரச்சினை இல்லை. ஆனால் முரளி... அஜித்...சூர்யா... என்பதெல்லாம் சாத்தியமா? என்கிற பயம். இப்போது ஒவ்வொருவராக சந்தித்தால், முரளி ஓகே ஆகிறார். அஜித் கொஞ்சம் பிஸி. அவருக்கு பதில் அப்பாஸ் வருகிறார். இன்னொருவர் சூர்யா. கதைகேட்டு சிவக்குமார், சூர்யா இருவருமே ஓகே சொல்லி சூர்யா அட்வான்ஸ் கூட வாங்கிவிட்டார். ஆனால், திடீரென நந்தா படத்திற்கு அவர் செல்ல வேண்டியிருந்ததால் அவரால் வர முடியவில்லை. பின் அவரக்கு பதில் வேறொருவர் மாற்றப்பட்டார். பார்ப்பவர்கள் எல்லாம் சொன்னது ஒன்று தான், ‛என்னய்யா... நீ போட்ருக்க ஆளெல்லாம்... ஒரு அப்பாவுக்கு பிறந்த மாதிரி தெரியலையே... ஒவ்வொரு ஸ்டேட்ல இருந்து ஒருத்தரை போட்ருக்க..’ என்று கூறினர். ‛இல்ல.. எனது குடும்பத்திலேயே நாங்க வித்தியாசமா தான் இருப்போம்... கதைபடி பாருங்க நல்லா இருக்கும்...’ என ரொம்ப உறுதியாய் இருந்தார் லிங்குசாமி.
அனைவரையும் வெளியேற்றிய மம்முட்டி!
இப்போ நடிகர்களும் ஓகே. முதல் ஷாட் எடுக்கும் போது தான் லிங்குசாமிக்கு பயம் வருகிறது. எப்படி காட்சிகளை எடுக்க வேண்டும் என்கிற பயம். புதுமுக இயக்குனருக்கான பயம். இதை மம்முட்டி நோட் செய்கிறார். ஓரிரு நாள் சூட்டிங் செல்கிறது. அவரது தடுமாற்றத்தை புரிந்த மம்முட்டி, சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரையும் வெளியேற்றுகிறார். லிங்குசாமியை மட்டும் அழைத்து பேசுகிறார். ‛இங்கே பாரு... நீ என்ன சீன் எடுக்க நினைக்கிறீயோ... அதை நீ நடிச்சு பாரு. அதுக்கு ஏற்றமாதிரி சீன் வை. சீன் எந்த பிரேமில் வரும் என்பதை முடிவு செய். அப்போ தான் உனக்கு ஈஸியா இருக்கும். நல்லா டைம் எடுத்துக்கோ. நாங்க வெயிட் பண்றோம். கவலைப்படாத; நல்ல கதை... நல்லா வரணும்,’ என ஐடியா தந்தார் மம்முட்டி. அந்த வார்த்தைகளை அப்படியே பிடித்துக் கொண்ட லிங்குசாமி, அதன் பின் அந்த பார்மாட்டிற்கு மாறினார்.
ஒரே வசனம்-பல டேக்... ‛தாங்க மாட்டீங்கடா...’
இப்போது படத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்றான, சஸ்பென்ஸ் உடைக்கும் காட்சி எடுக்கப்படுகிறது. குழந்தை உடல்நிலை பற்றி மம்முட்டி மறைத்து வைத்திருக்கும் ரகசியத்தை கூறும் காட்சி. ‛தாங்க மாட்டீங்கடா..’ என்கிற அந்த வசனத்தில் லிங்குசாமிக்கு திருப்தியில்லை. பல டேக் போகிறது. ஒரு கட்டத்தில் கடுப்பான மம்முட்டி, ‛என்ன தம்பி வேணும் உனக்கு...’ என கடுப்பாகிறார். ‛இல்லை சார்... இந்த டயலாக்கு இன்னும்...’ என லிங்குசாமி கூற, ‛தம்பி.. அதெல்லாம் டப்பிங்ல பார்த்துக்கலாம்...’ என மம்முட்டி கூறுகிறார். ‛இல்லை சார்...’ என, அதில் லிங்குசாமி திருப்தியாகவில்லை. ‛சரி நீ பண்ணிக்காட்டு...’ என கடுப்பாகிறார். பல தேசிய விருதுகளை வாங்கிய நடிகனுக்கு லிங்குசாமி நடித்துக் காட்டுகிறார். ஆனால் அங்கு முட்டல், மோதலாகவே இருந்தது. இப்படி பல போராட்டங்களும், சரியான புரிதல் இல்லாமல் சூட்டிங் ஒருவழியாக முடிந்தது.
‛நாக்கை கடித்து துப்புவேன்’ -மம்முட்டி!
இப்போது டப்பிங். சிக்கல் அங்கு தான் ஆரம்பம். கதைப்படி தஞ்சாவூரில் நடக்கும் கதை. மம்முட்டி மலையாளி. அவரது தமிழ், அனைவரும் அறிந்ததே. மீண்டும் அதே இடத்தில் வந்து நிற்கிறது. ‛தாங்க மாட்டீங்கடா...’ டயலாக் தான். வழக்கம் போல இயக்குனருக்கு திருப்தி இல்லை. கோபத்தின் உச்சத்திற்கு செல்கிறார் மம்முட்டி. இடையிடையே மனைவியிடம் வரும் போனுக்கு பதில் அளிப்பது மம்முட்டி வழக்கம். கோபத்திற்கான காரணத்தை அவரது மனைவி கேட்கிறார். ‛ஏதோ... தஞ்சாவூர் தமிழாம்... நாக்கை கடிச்சு துப்பலாம் போல இருக்கு... ஜூரி மாதிரி 5 பேர் உட்கார்ந்திருக்கான்... சரியா பேசுறேனா... இல்லையானு சொல்ல...’ என டென்ஷனில் கொதிக்கிறார் மம்முட்டி. லிங்குசாமி மீண்டும் மீண்டும் டேக் கேட்க, ‛முதலில் அவனை போகச் சொல்லுங்க...’ என, லிங்குசாமியை வெளியேற்றிவிட்டு வசனத்தை பேசிவிட்டு புறப்படுகிறார் மம்முட்டி.
‛கதையை கடிந்து கொண்ட மம்முட்டி!’
இப்போது படம் அனைத்தும் முடிந்துவிட்டது. பைனல் மிக்சிஸ். படத்தை பார்க்கும் போது, அதே ‛தாங்க மாட்டிங்கடா...’ இடத்தில் இயக்குனருக்கு திருப்தி இல்லை. வைரக்கண்ணு என்பவர் தான் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து மம்முட்டியிடம் பேசி வந்தார். அவர் மீண்டும் போன் செய்கிறார். ‛என்ன வைரகண்ணு படம் நல்லா இருக்கா...’ என ஆவலாய் கேட்கிறார் மம்முட்டி. ‛எல்லாம் நல்லா இருக்கு... ஒரு இடத்தில் மட்டும் வசனம் கொஞ்சம் மிக்சிஸிங்கில் பிரச்சினையா இருக்கு,’ என்கிறார் வைரக்கண்ணு. ‛நாலு பேரை பெத்து நடுமனையில் நிக்க வெச்சு.... தாங்கமாட்டீங்கடா...’ அந்த டயலாக் தானே.. என மம்முட்டி கேட்க, வைரகண்ணு ஆமாம் என்கிறார். ‛எதுக்கு அந்த நாயி 4 புள்ளைய பெத்து என் உயிரை வாங்குறான்னு தெரியல..’ என நொந்து கொண்ட மம்முட்டி, தமிழ்நாடு வந்து மீண்டும் டப்பிங் பேசுகிறார். அங்கு அவர் மீண்டும் பல டேக் பேசி செல்கிறார். முன்பு அவர் பேசியதையும், பின்னர் அவர் பேசிய பாதியை எடுத்து வசனத்தை முழுமையாக்குகிறார்கள்.
குமுதத்துடன் கேரள சென்ற லிங்குசாமி!
படம் ரிலீஸ் ஆகி தமிழ்நாட்டில் நன்றாக போகிறது. கேரள உரிமையை மம்முட்டி பெற்றிருந்தார். மலையாளத்திலும் படம் சூப்பர் ஹிட். தமிழ் விமர்சனம் ஒன்று குமுதத்தில் வருகிறது. அதில் தமிழ் நடிகர்கள் எப்படி டப்பிங் பேச வேண்டும் என்பதை மலையாள நடிகர் மம்முட்டியை பார்த்து காற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக ‛தாங்கமாட்டீங்கடா...’ என்கிற வசனத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என எழுதுகிறார்கள். லிங்குசாமிக்கு அவ்வளவு தான்... உடனே அந்த பிரதியை எடுத்துக் கொண்டு கேரளா புறப்படுகிறார். மம்முட்டியை வீட்டில் சந்திக்கிறார். ‛என்னய்யா... படம் நல்லா போகுது போல... இங்கேயும் நல்லா போகுதுய்யா... மலையாள மனோரமாவில் நல்லா எழுதியிருக்காங்க... இந்த பாரு...’ அவர் ஒரு நாளிதழை காட்டுகிறார். பதிலுக்கு தான் எடுத்து வந்த வார இதழை லிங்குசாமி காட்ட, ‛படித்துக் காட்ட...’ கூறுகிறார் மம்முட்டி. லிங்குசாமி படித்துக்காட்டியதும், ‛ம்ம்ம்... சரி சரி..’ என அப்போதும் அலட்டாமல் தட்டிக்கொடுத்தார் மம்முட்டி. ஆனந்தம் உண்மையில் படம் முடிந்த பிறகு தான் ஆனந்தம் தந்தது.
மேலும் ப்ளாஷ்பேக் செய்திகளுக்கு...
Flashback: நீக்கப்பட்ட அஜித்... சேர்க்கப்பட்ட பிரசாந்த்... ICU சபதத்தில் உருவான ஆனந்தபூங்காற்றே!