Flashback: எழுதியது வானத்தைப் போல... எடுத்தது சூர்யவம்சம்... ஜனகராஜ் கேட்டு சரத்குமார் நடித்த சூர்யவம்சம்!
ஜனகராஜ் மாதிரி ஒரு அண்ணன், காமராஜர் மாதிரி சட்டை போட்ட அண்ணன், முரளி, நெப்போலியன் மாதிரி தம்பி, சுபலட்சுமி மாதிரி ஒரு தங்கை என சாப்ட் கதாபாத்திரங்கள் இருக்கு. அதுக்கு சரத்குமார் செட்டாக மாட்டார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி-இயக்குனர் விக்ரமன் கூட்டணி ஒருவிதமான ஈர்ப்பு கொண்டது. அவர் அறிமுகம் செய்து வைத்ததாலே என்னவோ... அந்த பேனரில் விக்ரமன் பண்ணிய படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். இப்போது நாம் பார்க்கவிருக்கும் சூர்யவம்சத்தின் ஹிட் பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. சின்ராசு என்கிற பெயர் கூட உலகளாவிய பேமஸ் என்பது தான் அந்த படம் பிரபலமானதற்கு சாம்பிள். ஆனால் சூர்யவம்சம் ஒரு இன்ஸ்ட்ண்ட் கதை என்பது எத்தனை பேருக்கு தெரியும். எடுக்க நினைத்த படம் ஒன்று, எடுத்த படம் ஒன்று. அப்படி உருவானது தான் சூர்யவம்சம். சரி வாங்க... இன்றைய பிளாஷ்பேக் நிகழச்சியில் சூர்யவம்சம் கதையை பார்க்கலாம்...!
அவ்வை சண்முகி தந்த சிக்கல்!
நிகழ்ச்சி ஒன்றில் தற்செயலாக தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியை சந்திக்கிறார் இயக்குனர் விக்ரமன். என்ன படம் பண்றீங்க என இருவரும் பரஸ்பரம் கேட்டுக்கொள்கின்றனர். சரத்குமாரை வைத்து படம் செய்யவிருப்பதாகவும், தயாரிப்பாளர் ஒருவரிடம் அது பற்றி பேசியிருப்பதாக கூறுகிறார் விக்ரமன். ‛சரி... நாளை வந்து என்னை வீட்டில் சந்தியுங்கள்...’ என புறப்படுகிறார் ஆர்.பி.செளத்ரி. மறுநாள் சொன்ன நேரத்தில் சென்று சந்திக்கிறார் விக்ரமன். ‛கே.எஸ்.ரவிக்குமாரை வெச்சு சரத்குமார் படம் ஒன்னு பண்ண முடிவு பண்ணோம்... திடீர்னு அவ்வை சண்முகி படம் வந்ததால, கே.எஸ்.ரவிக்குமார் அங்கே போயிட்டார். சரத்குமார் டேட்ஸ் என்னிடம் தான் இருக்கு. அட்வான்ஸ் வேறு கொடுத்தாச்சு. நீங்களும் சரத்குமார் படம் தானே பண்றதா சொன்னீங்க. பேசாம எனக்கு பண்ணுங்க... அதே கால்ஷீட்டை எடுத்துக்கோங்க...’ என்கிறார் செளத்ரி. ஏற்கனவே பேசியிருக்கும் தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்கி வருகிறேன் என புறப்படுகிறார் விக்ரமன். அனுமதியும் கிடைக்கிறது. இப்போது படம் செய்ய வேண்டும்.
ஒரு நாள்... ஒரு கதை... வேறு முடிவு!
தயாரிப்பாளர், நடிகர் என எல்லாம் முடிவாகிவிட்டது. ஆனால் கதை ரெடியாகவில்லை. இப்போது கதை பிடிப்பதற்காக குற்றாலம் செல்கிறார் விக்ரமன். முதல்நாளே நல்ல கதை சிக்குகிறது. கிட்டத்தட்ட 80 சதவீத கதை ரெடியாகிவிட்டது. சீன் உட்பட. ஒரே நாளில் எல்லாம் கிடைத்ததால், குஷியோடு தயாரிப்பாளரிடம் தகவலை தெரிவிக்கலாம் என புறப்படுகிறார் விக்ரமன். முன்னதாக அவர் டெவலப் செய்த கதையை கேட்டு விக்ரமனின் உதவி இயக்குனர்களும் சிலாகித்து போகினர். இந்திய சினிமாவில் முக்கிய படமாக அது இருக்கும் என்றும் புகழ்ந்து தள்ளினர். முன்பு ஹீரோ, தயாரிப்பாளர் எல்லாம் இருந்தும் கதை இல்லாமல் இருந்தது. இப்போது கதை, சீன் எல்லாம் இருக்கிறது. ஆனால்... ஹீரோ... சரத்குமார் சரியாக இருப்பாரா என்கிற சந்தேகம் இயக்குனருக்குள் எழுகிறது. தன் கதை மீது எப்போதும் அலாதி நம்பிக்கை கொண்டவர் விக்ரமன். தயாரிப்பாளரிடம் அவர் கதையை மட்டும் சொல்ல செல்லவில்லை. வேறு சில அதிர்ச்சி முடிவுகளும் இருந்தது.
ஜனகராஜ் வேண்டும்... சரத்குமார் வேண்டாம்...!
மூன்று நாள் டிஷ்கஷன் முடித்துவிட்டு, நேராய் செளத்ரியிடம் சென்று கதையை சொல்கிறார். ‛அருமை... அட்டகாசம்...’ என சிலாகித்தார் செளத்ரி. உடனே பண்ணலாம் என அவர் சொல்ல, ‛சார்...’ என இழுக்கிறார் விக்ரமன். ‛சொல்லுங்க...’ என்கிறார் செளத்ரி. ‛சார் இது 3 அண்ணன், தம்பி, ஒரு தங்கை இருக்கிற கதை... அண்ணன் கதாபாத்திரம் தான் மெயின். ஜனகராஜ் மாதிரி ஒரு அண்ணன்... காமராஜர் மாதிரி சட்டை போட்ட அண்ணன்... முரளி.... நெப்போலியன்...மாதிரி தம்பி, சுபலட்சுமி மாதிரி ஒரு தங்கை என அவ்வளவு சாப்ட் கதாபாத்திரங்கள் இருக்கு. அதுக்கு சரத்குமார் செட்டாக மாட்டார். வேறு யாராவது தான் போடனும்,’ என்கிறார் விக்ரமன். ‛ஏன் சரத்குமாருக்கு என்ன... அண்ணன், தம்பினு இரண்டு கேரக்டரை அவருக்கு கொடுப்போம்... மற்றதுக்கு வேண்டிய ஆளை போடுவோம்’ என்கிறார் செளத்ரி. ‛இல்லை சார்... இப்போ தான் உங்க பேனர்ல நாட்டாமை முடிச்சிருக்காரு. அவர் நல்ல கம்பீரமா நடித்து வேற லெவல்ல இருக்காரு அதை நாம கெடுக்க வேண்டாம். இது அவர் கேரக்டருக்கு சரியா இருக்காது. கொஞ்சம் வேற மாதிரி தேடணும்,’ என்கிறார் விக்ரமன். ‛இல்லை இல்லை... நீங்க சரத்குமார்ட சொல்லிப்பாருங்க...’ என்கிறார் செளத்ரி. ஒப்பாமல், சரத்குமாரிடம் கதை கூறுகிறார். அவருக்கும் பிடித்துவிட்டது. ஆனால் அது விக்ரமனுக்கு பிடிக்கவில்லை. ‛சார்... நீங்க நாட்டாமை படத்துல கம்பீரமா மக்கள் மனசுல நிக்குறீங்க... இது அதுக்கு அப்படியே உல்டா கேரக்டர். இது வேண்டாம் சார்...’ என்று கூறி அங்கிருந்து செல்கிறார் விக்ரமன்.
விஜயகுமாரை தூக்கிவிட்டு டபுள் ஆக்ஷனில் சரத்!
இப்போது மீண்டும் செளத்ரியிடம் செல்கிறார். ‛சார்.. நான் சொல்ற நடிகர்களை வைத்து பண்றதா இருந்தால், இந்த கதையை பண்ணலாம். சரத்குமார் இதுக்கு செட் ஆக மாட்டார்னு’ விக்ரமன் கறாராக கூறிவிட்டார். சரத்குமாரை வைத்து தான் படம் எடுக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்திருந்தால், இந்த கதை வேண்டாம், வேறு கதை பண்ணலாம் என்கிறார். பழைய கதை ஒன்றை கூறுகிறார். ‛விஜயகுமார் மாதிரி ஒரு அப்பா... அவரோட பையன்கள்...’ என ஒரு கதையை சொல்கிறார் விக்ரமன். ‛இதுவும் நல்லா இருக்கே... இதுல எதுக்கு விஜயகுமார்... அப்பா, மகன் இரண்டையும் சரத்குமாரை பண்ணச் சொல்வோம்...’ என்கிறார் செளத்ரி. ‛ம்... பண்ணலாம்... சார்...’ என குஷியாகிறார் விக்ரமன். ‛என்ன தான் சொல்லுங்க... அந்த கதை மாதிரி வராது...’ என முந்தைய கதையில் நிற்கிறார் செளத்ரி. ‛சார்... அது நல்ல கதை தான்... இதுவும் சாதாரண கதை இல்லை... இந்த படம் ரெக்கார்டு பிரேக் பண்ணும். நீங்க எடுத்த நாட்டாமையை ஓவர்டேக் பண்ணுதா இல்லையானு பாருங்க...’ என சபதமிட்டு நம்பிக்கை தருகிறார் விக்ரமன். ‛இந்த படம் ரெக்கார்டு பிரேக் செய்யவில்லை என்றால், நான் இன்டஸ்ட்ரியை விட்டு போகிறேன்...’என விக்ரமன் மீண்டும் அழுத்தமாக சொல்ல, ‛சரி’ என பச்சை கொடி காட்டுகிறார் செளத்ரி.
முதல் கதை என்ன ஆனது?
சொன்னபடி படம் ரிலீஸ் ஆகி, நாட்டாமை கலெக்ஷனை 3 வாரத்தில் ஊதி தள்ளி, சூர்யவம்சம் பேய் ஹிட் அடித்தது. வசூலை அள்ளிக்குவித்தது. இன்று வரை சூர்யவம்சம் இல்லாத மாதத்தை தொலைக்காட்சியில் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு சூர்யவம்சம் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத படமானது. இந்திய சினிமா என்று கூற காரணம் இருக்கிறது. பல மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. அனைத்திலும் சூப்பர் ஹிட். சரி... அப்போ... விக்ரமன் முதலில் கூறிய கதை என்ன ஆச்சு? அது தான் வானத்தைப் போல...! பின்னர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனிடம் அந்த கதையை கூறி, அதற்கு விஜயகாந்தை அவர் பரிந்துரைக்க, முன்பு சரத்குமாரிடம் இருந்த அதே சந்தேகங்கள் விஜயகாந்திடமும் விக்ரமனுக்கு இருந்தது.
வைதேகி காத்திருந்தால், என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் போன்ற படங்களில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரங்களை நினைவூட்டி தயாரிப்பாளர் அவரை சம்மதிக்க வைத்தார். விஜயகாந்த் வந்ததால், கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. தங்கை கதாபாத்திரம் தூக்கப்பட்டது. அண்ணன், தம்பி பாசத்திற்கு இடையே தம்பியின் காதல் காட்சிகள் சேர்க்கப்பட்டது. இப்படி தான் சூர்யவம்சமும்-வானத்தைப் போலவும் ஒரே இடத்தில் தோன்றி ஒரே மாதிரியான ஹிட் அடித்த படங்கள்!
மேலும் ப்ளாஷ்பேக் செய்திகள் படிக்க...
Flashback: நடிக்க மறுத்த கமல்... டிஸ்கஷனில் வாக்குவாதம்... ட்ரெண்ட் உருவாக்கிய ‛ஜென்டில்மேன்’