ஹவுஸ் அரெஸ்ட் ஷோவில் எல்லை மீறிய ஆபாயாசம்– ஷோவை நீக்கியதோடு, அஜாஸ் கான் மீது FIR!
அஜாஸ் கானின் ஹவுஸ் அரெஸ்ட் ரியாலிட்டி ஷோவில் ஆபாச காட்சிகள் இடம் பெற்ற நிலையில், அஜாஸ் கான் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அந்த ரியாலிட்டி ஷோவும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் பிக்பாஸ் மூலமாக பிரபலமான அஜாஸ் கான், 'ஹவுஸ் அரெஸ்ட்' என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். உல்லு ஆப்பில் ஒளிபரப்பு செய்யப்படும் இந்த ஷோவின் புரோமோ வீடியோ வெளியானதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. இந்த சமூகத்திற்கும், கலாச்சாரத்திற்கும் சீர்குலைக்கும் காட்சிகள் இடம் பெற்ற நிலையில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து இந்த ஷோ ஒளிபரப்பு செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த ஷோவின் புரோமோ வீடியோ தேசிய மகளிர் ஆணையம் வரை சென்ற நிலையில் அஜாஸ் கான் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உல்லு ஆப்பிலிருந்து இந்த ரியாலிட்டி ஷோ நீக்கப்பட்டுள்ளது.
அஜாஸ் கானின் 'ஹவுஸ் அரெஸ்ட்' நிகழ்ச்சி பெரும் சர்ச்சையில் சிக்கியதால், OTT தளத்தில் இருந்து அதனை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், மும்பை அம்போலி காவல் நிலையத்தில் நிகழ்ச்சிக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாசத்தைப் பரப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வைரலான ஒரு வீடியோவே இந்த விவகாரத்திற்குக் காரணமாக அமைந்தது. நிகழ்ச்சித் தொகுப்பாளரான அஜாஸ் கான், 2 போட்டியாளர்களை கேமரா முன் ஆபாசமான செய்கைகளில் ஈடுபட வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. போட்டியாளர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கேமரா முன் ஆபாசமாக நடந்து கொண்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜாஸ் கானின் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சிக்குத் தடை:
உல்லு செயலியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி, பெரும்பாலும் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்திற்காக அறியப்படுகிறது. மே 1 வியாழன் வரை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. ஆனால் சர்ச்சை வலுத்ததும், வெள்ளிக்கிழமை அன்று உல்லு ஆப்பிலிருந்து ஹவுஸ் அரெஸ்ட் ரியாலிட்டி ஷோ நீக்கப்பட்டது. வைரலான வீடியோவில், அஜாஸ் கான் பெண் போட்டியாளர்களை ஆபாசமாக நடந்து கொள்ள வற்புறுத்துவது போலத் தெரிகிறது. இணையத்தில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட இந்த விவகாரம், தேசிய மகளிர் ஆணையத்தின் கவனத்திற்கும் சென்றது. ஆணையம், உல்லு செயலியின் தலைமைச் செயல் அதிகாரி விபு அகர்வால் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அஜாஸ் கானுக்கு மே 9 அன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
அஜாஸ் கான் மற்றும் உல்லு ஆப்பிற்கு எதிராக FIR:
இதற்கிடையில், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், தொடர்புடைய நபர்கள் மற்றும் உல்லு ஆப்பிற்கு எதிராக அம்போலி காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த கௌதம் ரெவாரியா என்பவர் இந்த FIR-ஐ பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜ்குமார் பாண்டே, அஜாஸ் கான், உல்லு செயலி மற்றும் பிற அடையாளம் தெரியாத நபர்களின் பெயர்கள் FIR-இல் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 25 அன்று தனது அலுவலகத்தில் 'ஹவுஸ் அரெஸ்ட்' நிகழ்ச்சி குறித்துப் புகார் வந்ததாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசமான செய்கைகளும், வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பலரும் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனக்குச் செய்திகள் மற்றும் புகார்களை அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.
எங்கு எல்லாம் ஒளிபரப்பானது ‘ஹவுஸ் அரெஸ்ட்?
ராஜ்குமார் பாண்டே தயாரிப்பில், அஜாஸ் கான் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி உல்லு செயலியில் வெளியானது. மேலும், பேஸ்புக், யூடியூப் மற்றும் எக்ஸ் போன்ற தளங்களிலும் பதிவேற்றப்பட்டது. இந்த விவகாரம் குறித்து அஜாஸ் கானைத் தொடர்பு கொண்டபோது, அவர் திருப்திகரமான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. அந்தேரி மேற்கில் உள்ள உல்லு செயலியின் அலுவலகத்திற்கும் சென்று கடிதம் அளித்ததாகவும், நிகழ்ச்சியை நீக்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பதிவு செய்யப்பட்ட பிரிவுகள்:
கௌதம் ரெவாரியாவின் புகாரின் பேரில், ராஜ்குமார் பாண்டே, அஜாஸ் கான், உல்லு ஆப் மற்றும் பிறருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 296 (ஆபாசச் செயல்கள் மற்றும் பாடல்கள்) மற்றும் பிரிவு 3 (5) (பொது விளக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறை விசாரணையைத் நடத்தி வருகிறார்கள்.





















