HBD Vadivukkarasi: நடிகையாக மாறிய டீச்சர்.. திரையுலகின் அரசியாக திகழ்ந்த ‘வடிவுக்கரசி’க்கு இன்று பிறந்தநாள்..!
லட்சியத்தோடு சினிமா துறைக்குள் வருபவர்களை விட, காலச் சூழலால் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்து சாதிப்பவர்கள் பலர். எதிர்பாராத அந்த வெற்றி காலத்துக்கும் நிலைத்து நிற்பதாக இருக்கும்.
லட்சியத்தோடு சினிமா துறைக்குள் வருபவர்களை விட, காலச் சூழலால் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்து சாதிப்பவர்கள் பலர். எதிர்பாராத அந்த வெற்றி காலத்துக்கும் நிலைத்து நிற்பதாக இருக்கும். அதில் முதன்மையானவர் நடிகை வடிவுக்கரசி. அவருக்கு இன்று 61வது பிறந்தநாள்
டீச்சராக தொடங்கிய வாழ்க்கை
வேலூரில் இருந்து தனியாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை தான் வடிவுக்கரசியின் பூர்வீகம். அவரின் அப்பா பிரபல இயக்குநர்களுக்கும், தயாரிப்பு நிறுவனங்களுக்கு நன்கு பரீட்சையமானவர். இவரது பெரியப்பா தான் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இயக்குநர்களில் ஒருவரான ஏ.பி.நாகராஜன். இப்படிப்பட்ட சினிமா குடும்பத்தில், அப்படி என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தவர் வடிவுக்கரசி என்றால் நம்ப முடிகிறதா?
வாழ்க்கையில் டீச்சராக தன் அடுத்தக்கட்ட நகர்வை ரூபாய் 75 சம்பளத்தில் தொடங்கினார். ஆனால் வருமானம் போதாமல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான புகழ்பெற்ற கண்மணிப் பூங்கா நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு கதை சொல்லி அசத்தினார். இதுவே அவர் சினிமாவில் நுழைய அடிப்படை காரணமாக அமைந்தது. சினிமாவில் ஆள் தேர்வுக்கு விளையாட்டாக இவர் கொடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வாழ்க்கையையே திசை மாற்றியது.
சினிமா பயணம்
முதல் படம் தீபாவளி ரிலீஸ் தான். அதுவும் 1978 ஆம் ஆண்டு வெளியான பாரதி ராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் படம். இரண்டு காட்சிகள் என்றாலும் ரசிகர்களிடையே நன்கு பரீட்சையமானார். கமல் வடிவுக்கரசி பின்னாளில் பெரிய ஆளாய் வருவார் என பாரதிராஜாவிடம் ஆரூடம் சொல்லியுள்ளார். இதனைத் தொடர்ந்து கன்னிப்பருவத்திலே கண்ணம்மா என்ற ஹீரோயின் கேரக்டர். மிகவும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இதன்பின்னர் ஓய்வு எடுக்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்த படங்கள் வரிசைக் கட்டின.
ஆனால் காலம் ஹீரோயின் கேரக்டரில் இருந்து இறக்கி அடுத்தக்கட்ட துணை நடிகைகள் கேரக்டருக்கு அழைத்து வந்தது. அடுத்தக்கட்ட நகர்வுக்கு தயாராகவே இருந்தார். வடிவுக்கரசிக்கு நடிக்க தெரியும். ஆனால் நடனமாட தெரியாது. நமக்கு என்ன வருகிறதோ அதைக் கொண்டு முன்னேற வேண்டும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.
மெட்டி படம் மிகச்சிறந்த நடிகையாக அடையாளப்படுத்தியது.
சிவாஜியுடன் வா கண்ணா வா படத்தில் மகளாகவும், படிக்காதவன் மற்றும் முதல் மரியாதை படத்தில் மனைவியாகவும் அசத்தியிருப்பார்.
அருணாச்சலம் படத்தில் கூன் விழுந்த பாட்டியாக ரஜினியை மிரட்டி அவரது ரசிகர்கள் மிரட்டல் விட்டெதெல்லாம் வடிவுக்கரசியின் நடிப்புக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. அஜித், விஜய் தொடங்கி பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார்.
சீரியல் எண்ட்ரீ
ஒருபக்கம் பெரிய திரையில் நடித்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். சக்தி, திருமதி செல்வம், குலதெய்வம் என பல சீரியல்களிலும் தனது முத்தான நடிப்பை வழங்கினார். அவரின் குரலுக்காவும், உடல் மொழிக்காகவும் என்றைக்கும் அவர் போற்றப்படுவார். இனிய பிறந்த வாழ்த்துக்கள் வடிவுக்கரசி அம்மா...!