HBD Karthik Raja: 'தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டியவர்' ... இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பிறந்தநாள் இன்று..!
திறமை இருந்தும் கொண்டாடப்படாத பிரபலங்களில் முதல் பெயராக இசையமைப்பாளர் ‘கார்த்திக் ராஜா’ பெயர் இருக்கும் இன்று அவருக்கு 50வது பிறந்தநாளாகும்.
என்னதான் பிரபலங்களில் வாரிசாக இருந்தாலும் திறமையை நிரூபித்தால் தான் ரசிகர்களின் மனதில் இடம் என்பது எழுதப்படாத விதி. ஆனால் திறமை இருந்தும் கொண்டாடப்படாத பிரபலங்களில் முதல் பெயராக இசையமைப்பாளர் ‘கார்த்திக் ராஜா’ பெயர் இருக்கும் இன்று அவருக்கு 50வது பிறந்தநாளாகும்.
சிறந்த இசை என்பது சரியான இசைக்கோர்ப்புடன் திகட்டாத அளவுக்கான பாடல்களை தருவது. அதனை சரியாக கையாண்டவர் என்பதால் தான் இசைஞானி இளையராஜாவை காலங்கள் கடந்தும் கொண்டாடுகிறோம். அவரின் வாரிசுகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானாலும், இருவரும் தங்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டனர். ஆனால் தம்பி யுவன் கொண்டாடப்படுகிறார். ஆனால் அண்ணன் கார்த்திக் ராஜாவின் திறமையை இன்றளவும் பலருக்கும் தெரியவில்லை.
நாம் தினசரி கேட்டும் பல பாடல்களுக்கு இவர் தான் இசையமைத்தார் என ஒருவரை நினைத்துக் கொள்வோம். ஆனால் ஒரு கட்டத்தில் வேறு ஒருவர் தான் அந்த பாட்டுக்கு சொந்தக்காரர் என்னும் போது அவரின் பாடல்களை தேடிச் செல்வோம். அப்படி கார்த்திக் ராஜாவின் பாடல்களை எடுத்துக் கொண்டால் தெளிந்த நீரோடைப் போல பாடல்களை கொடுத்தவர்.
பின்னணி இசையில் பின்னியவர்
1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் வெளியான பல படங்களில் பின்னணி இசையை கார்த்திக் ராஜா தான் மேற்கொண்டிருந்தார். இதில் சில படங்களில் பாடல்களை கம்போஸ் செய்தும் உள்ளார். ஆனால் நாம் அந்த படமே இளையராஜாவின் இசையில் தான் உருவானது என நினைப்போம்.
உழைப்பாளி,அமைதிப்படை, ராசாமகன்,பொன்னுமணி, தர்மசீலன், சர்க்கரைதேவன் என பல சூப்பர் ஹிட் படங்களுக்கு பின்னணி இசையமைத்தார். தொடர்ந்து ரஜினியின் பாண்டியன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பாண்டியனின் ராஜ்ஜியத்தில்’ பாடலுக்கு மெட்டமைத்தவர் கார்த்திக் ராஜா தான் என்பது பலரும் அறியாத உண்மை.
இசையால் மின்னிய பாடல்கள்
1996 ஆம் ஆண்டு தான் முழுநேர இசையமைப்பாளராக கார்த்திக் ராஜா பணியை தொடங்குகிறார். அந்த ஆண்டில் எனக்கொரு மகன் பிறப்பான், மாணிக்கம், அலெக்சாண்டர் என வரிசையாக 3 படங்கள் ரிலீசாகி பாடல்கள் பெரும் வரவேற்பை பெறுகின்றன. ஆனாலும் கார்த்திக் ராஜாவுக்கு தனி அடையாளம் கொடுத்தது விக்ரம், அஜித் இணைந்து நடித்த உல்லாசம் படத்தில் பாடல்கள் தான்.
அதன்பின்னர் கார்த்திக் ராஜா காட்டில் அடைமழை தான். நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, வாஞ்சிநாதன், உள்ளம் கொள்ளை போகுதே, டும் டும் டும், ஆல்பம், த்ரீ ரோசஸ், குடைக்குள் மழை, நெறஞ்ச மனசு, ரெட்டைச்சுழி, படை வீரன் என ஏகப்பட்ட படங்களுக்கு இசை கார்த்திக் ராஜா தான்.
அதேசமயம் விஜய்யின் புதிய கீதை, சுந்தர் சி இயக்கிய அரண்மனை, சந்தானத்தின் தில்லுக்கு துட்டு ஆகிய படங்களுக்கு பின்னணி இசையும் அமைத்துள்ளார். அதேபோல் கமலை வைத்து முத்தே முத்தம்மா (உல்லாசம்), காசு மேல காசு வந்து (காதலா காதலா) பாடலை பதிவு செய்திருப்பார்.
மேலும் கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் என பழமொழிகளிலும் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு 2 படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த பாடல்கள் எல்லாம் நினைவிருக்கிறதா?
செல்லமே செல்லம் என்றாயடி, உள்ளம் கொள்ளம் போகுதே உன்னை கண்ட நாள் முதல், வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாத, ரகசியமாய் அவசரமாய் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் மெலடி பாடல்களுக்கு சொந்தக்காரர் கார்த்திக் ராஜா. என்னதான் அவரின் தம்பி யுவன் ஷங்கர் ராஜாவை கொண்டாடினாலும், யுவனே பல நேர்காணலில் தன்னை விட திறமையானவர் கார்த்திக் ராஜா தான் என தெரிவித்துள்ளார்.
அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதை விட, இதெல்லாம் நீங்கள் இசையமைத்த பாடல்கள் என எனக்கு தெரியும் என சொல்வதில் தான் கார்த்திக் ராஜாவின் மிகச்சிறந்த வாழ்த்தாக அமையும்.