Soundarya Jagadish: பிரபல கன்னட தயாரிப்பாளர் சௌந்தர்ய ஜெகதீஷ் தூக்கிட்டு தற்கொலை
சௌந்தர்ய ஜெகதீஷை பொருத்தவரை அவருக்கு பொருளாதார ரீதியாகவோ அல்லது உடல்நலம் தொடர்பாகவோ எந்த பிரச்சினையும் இல்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக இருந்த சௌந்தர்ய ஜெகதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் பெங்களூருவில் உள்ள மகாலட்சுமி லே அவுட்டில் வசித்து வந்தார்.55 வயதான சௌந்தர்ய ஜெகதீஷ் நேற்று அதிகாலை 4 மணியளவில் தனது அறையில் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. காலை 9.40 மணிக்கே இந்த விஷயம் வெளியே தெரிந்துள்ளது. உடனடியாக சௌந்தர்ய ஜெகதீஷை மீட்டு அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் இறந்து சில மணி நேரம் ஆகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சௌந்தர்ய ஜெகதீஷ் எந்த காரணத்தால் தற்கொலை செய்துக் கொண்டார் என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. அதேசமயம் ‘சமீப காலமாகவே அவர் மனசோர்வடைந்த நிலையில் காணப்பட்டார் என்றும், இதற்காக மருந்துகளை எடுத்துக் கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது மாமியார் மறைவு சௌந்தர்ய ஜெகதீஷை வெகுவாக பாதித்தது’என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சௌந்தர்ய ஜெகதீஷை பொருத்தவரை அவருக்கு பொருளாதார ரீதியாகவோ அல்லது உடல்நலம் தொடர்பாகவோ எந்த பிரச்சினையும் இல்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவரின் தற்கொலை சம்பவம் மர்மமான ஒன்றாகவே உள்ளது. சௌந்தர்ய ஜெகதீஷூக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சமீபத்தில் தான் மகளுக்கு திருமணமும் நடந்துள்ளது.
தொழிலதிபராக இருந்த சௌந்தர்ய ஜெகதீஷ் கன்னடத்தில் பப்பு, மஸ்த் மஜா மதி, சிநேகிதரு மற்றும் ராம்லீலா உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். மேலும் கடந்த ஜனவரி மாதம் அவர் கடும் சர்ச்சைகளுக்கு உள்ளானார். பெங்களூருவில் உள்ள ராஜாஜி நகரில் அவருக்கு சொந்தமான ரெஸ்டோபார் நிறுவனம் வழக்கில் சிக்கியது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் மதுபான பாரை திறந்திருந்ததால் சௌந்தர்ய ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரின் இந்த தற்கொலை சம்பவம் கன்னட திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.