Nadhiya | ”தடுப்பூசி போட்டும் வீட்டுல எல்லோருக்கும் கொரோனா” - பிரபல நடிகை நதியா கொடுத்த ஷாக்..
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து தெரிவிக்க, மும்பையில் இருந்த நதியாவை லிங்குசாமி குழுவினர் தொடர்புகொண்டுள்ளனர். அப்போதுதான் வீட்டில் அனைவருக்கும் கொரோனா என்ற செய்தி கிடைத்துள்ளது.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் டிரண்ட் செட்டராக இருந்தவர் நடிகை ‘நதியா’. நதியா பயன்படுத்தும் ரிப்பன் முதல் காலணி வரை அனைத்தும் அவரது பெயரிலேயே வெளியாகும். நதியா கம்மல், நதியா வளையம், நதியா கொண்டை என்பது இன்றளவும் பிரபலம். அதற்கு ஏற்றார்போல் நடிகை நதியாவும் எவர் கிரீன் அழகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை நதியாவின் வீட்டில் அனைவருக்கும் கொரோனா என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. நடிகை நதியா தற்போது மும்பையில் வசித்து வருகிறார். தற்போது லிங்குசாமி இயக்கத்தில் பெயர் வைக்காத ஒரு படத்தில் நதியா நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத் பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. முன்னதாக நதியாவின் முதல் ஷெட்யூல் காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
View this post on Instagram
இந்நிலையில் நதியாவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து தெரிவிக்க, மும்பையில் இருந்த நதியாவை லிங்குசாமி குழுவினர் தொடர்புகொண்டுள்ளனர். அப்போதுதான் வீட்டில் அனைவருக்கும் கொரோனா என்ற செய்தி கிடைத்துள்ளது. இது குறித்து நதியா கூறுகையில், வீட்டில் இருக்கும் அம்மா, அப்பா, பணிபுரிபவர் நான் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் இரண்டு டோஸ் தடுப்பூசிபோட்டும் எனக்கு எப்படி கொரோனா வந்தது என்றே தெரியவில்லை என மிகுந்த வருத்தத்தில் தெரிவித்தாராம்.
நிலைமையை உணர்ந்த படக்குழுவினர் நதியா நடிக்கும் காட்சிகளை மட்டும் தற்போது ஒத்தி வைத்துள்ளனராம். கொரோனா தடுப்பூசி போட்டாலும் பாதுகாப்பாக இல்லை என்றால் கொரோனா தொற்று ஏற்படும் என மருத்துவர்கள் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளனர். தடுப்பூசி எடுத்துக்கொண்டால் நோயின் தீவிர தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம், உயிரிழப்பைத் தவிர்க்கலாமே தவிர தொற்று ஏற்படாமல் இருக்காது என்பதே மருத்துவர்களின் கூற்றாக உள்ளது.
View this post on Instagram
நதியா முதன் முதலாக பூவே பூச்சூடவா என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 80-களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்ட நதியாவிற்கு ஆண் ரசிகர்களுக்கு நிகராக பெண் ரசிகர்களும் ஏராளம். திருமணத்திற்கு பிறகு படங்கள் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட நதியா , ஜெயம் ரவி நடிப்பில் உருவான , எம் .குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அந்த படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்தார். புத்தகம் படிப்பது, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, தன் தொழிலிலும் நேர்த்தியாக இருப்பது என வலம்வரும் நதியா உடற்பயிற்சி மற்றும் ஃபிட்னஸிலும் அதிக கவனம் செலுத்துகிறார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அது குறித்த வீடியோக்களையும் பதிவிட்டு பலருக்கும் ஊக்கம் அளிக்கும் நபராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.