Fahadh Faasil : நான் அவருக்கு கடன்பட்டிருக்கேன்.. அவர் இல்லைன்னா நான் இல்ல.. நெகிழ்ந்த ஃபகத் ஃபாசில்
இர்ஃபான் கானால் தான் நடிகனானேன். என் திரை வாழ்க்கைக்காக நான் அவருக்கு கடன்பட்டுள்ளேன். அந்த டிவிடியை அன்று நான் பார்க்காமல் இருந்திருந்தால் இன்று நான் ஒரு நடிகராக இத்தனை தூரம் வந்து இருக்க மாட்டேன்
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் ஃபகத் பாசில். தனது தனித்துவமான நடிப்பிற்காக பெயர் பெற்ற ஃபகத் பாசில் சினிமா துறைக்கு அவர் வர காரணமாக இருந்த பாலிவுட் நடிகர் குறித்து மனமுருகி பேசியிருந்தார்.
பாலிவுட் சினிமாவில் தனது தனி முத்திரை பதித்தவர் மறைந்த நடிகர் இர்ஃபான் கான். அவரின் மறைவுக்கு பிறகு நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார் ஃபகத் பாசில். அந்த கடிதத்தில் அவர் "இர்ஃபான் கானால் தான் நடிகனானேன். என் திரை வாழ்க்கைக்காக நான் அவருக்கு கடன்பட்டுள்ளேன். அந்த டிவிடியை அன்று நான் பார்க்காமல் இருந்திருந்தால் இன்று நான் ஒரு நடிகராக இத்தனை தூரம் வந்து இருக்க மாட்டேன் " என தெரிவித்து இருந்தார். இது குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அவர் சில தகவல்களை பகிர்ந்து இருந்தார்.
ஃபகத் பாசில் பேசுகையில் "பல வருடங்களுக்கு முன்னர் நான் அமெரிக்காவில் பள்ளி வளாகத்திலேயே தங்கி பயின்று வந்தேன். அது இயக்குநர் நசீருதின் ஷாவின் 'யு ஹோயா தோ க்யா ஹோதா' திரைப்படம். அப்படத்தில் சலீம் ராஜபலி என்ற கதாபாத்திரத்தில் இர்ஃபான் கான் நடித்திருந்தார். அவர் ஒரு நடிகர் போலவே எனக்கு தோன்றவில்லை. அதற்கு பிறகு தான் எனக்கு தெரியவந்தது அவர் கிட்டத்தட்ட 25 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்று. அவரொரு நடிகரை போல இல்லை என்றாலும் என் பார்வை முழுவதும் அவர் மீது மட்டும் தான் இருந்தது. மற்ற நடிகர்கள் திரையில் தோன்றினாலும் என்னால் அவர் மீது இருந்த பார்வையை விலக்க முடியவில்லை. அவ்வளவு கிரேஸ்ஃபுல்லாக இருந்தார். அவர் என்னை இம்ப்ரஸ் செய்தது போல வேறு யாரும் என்னை அந்த அளவுக்கு இம்ப்ரெஸ் செய்ததில்லை. அதற்கு பிறகு அவரின் படங்களை பார்த்துதான் நான் வளர்ந்தேன்" என கூறியிருந்தார்.
இர்ஃபான் கான் மீது இத்தனை மரியாதை கொண்டுள்ள ஃபகத் பாசில் அவரை ஒரு முறை கூட நேரில் சந்தித்ததில்லையாம். அவரை சந்திக்க காரணம் கிடைக்கவில்லை. ஒரு ஹேண்ட் ஷேக் கூட செய்ததில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் அந்த கடித்ததில் தெரிவித்து இருந்தார். அன்று அந்த டிவிடியை பார்க்காமல் இருந்திருந்தால், அந்த நடிகர் எனது வாழ்க்கையை மாற்றாமல் இருந்தால் இன்று நான் ஒரு நடிகராக இதை தூரம் வந்திருப்பேன் என தோன்றவில்லை என குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.