Fahadh Faasil Mamannan: சாதிய தலைவரானார் ஃபஹத் பாசில்? மாமன்னன் ரத்னவேலுவை கொண்டாடும் இணையவாசிகள்..!
மாமன்னன் படத்தில் இடம்பெற்ற ஃபஹத் பாசிலின் ரத்னவேலு கதாபாத்திரத்தை கொண்டு சாதிய பெருமையை உயர்த்தி பேசுவது போன்று, சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாமன்னன் படத்தில் இடம்பெற்ற ஃபஹத் பாசிலின் ரத்னவேலு கதாபாத்திரத்தை கொண்டு சாதிய பெருமையை உயர்த்தி பேசுவது போன்று, சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாமன்னனில் ”ரத்னவேலு” :
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசில் மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் தான் மாமன்னன். திரையரங்குகளை தொடர்ந்து அண்மையில் ஒடிடி தளத்திலும் வெளியானது. இப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் பெருமையை உயர்த்தி பேசி, பிற சமூகத்தினரை கொடுமைப்படுத்தும் சாதிய வன்மம் பிடித்த ரத்னவேலு எனும் கதாபாத்திரத்தில் நடித்து ஃபஹத் பாசில் மிரட்டியிருப்பார். அவரது நடிப்பிற்கு பாராட்டுகளும் வெகுவாக குவிந்தன. அதேநேரம், அவரது கதாபாத்திர சித்தரிப்பு இளைஞர்களிடையே மோசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் சிலர் எச்சரித்து இருந்தனர்.
இணையத்தில் வைரலாகும் பதிவுகள்:
அன்று சிலர் எச்சரித்தது தான் இன்று உண்மையாகியுள்ளது. கட்டபொம்மன் ஊர் எனக்கு, உப்பு செஞ்சா தண்ணி குடி தப்பு செஞ்ச தலையில் அடி, நீ சிங்கம் தான், காக்க காக்க என் இஷ்டத்திற்கு ரத்னவேலு கதாபாத்திரத்தினை வைத்து எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். படம் பார்க்காதவர்கள் யாராவது இந்த எடிடட் வீடியோக்களை பார்த்தால் மாமன்னனில், ஃபஹத் பாசில் தான் நாயகன் என்றும், உதயநிதி மற்றும் வடிவேலு தான் வில்லன் என்றும் நினைத்து விடுவார்கள்.
அந்த அளவிற்கு தலைவன், நாயகன், தியாகி, ரட்சகன் மற்றும் பாசமிகு கணவன் என பல்வேறு வடிவங்களில் ஃபஹத் பாசிலின், ரத்னவேலு கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளனர். குறிப்பாக கொங்கு பகுதியில் தங்களுக்கான அடையாளமாகவே அந்த ரத்னவேலு கதாபாத்திரத்தை கொண்டாட தொடங்கியுள்ளனர்.
மாரி செல்வராஜ் சொல்ல நினைத்தது..!
அனைத்து மக்களும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்பதையும், இன்றளவும் பல பகுதிகளில் சாதிய வன்முறையால் பிற்படுத்தப்பட்ட மக்கள் எப்படிபட்ட அடக்குமுறைகளுக்கு ஆளாகின்றனர் என்பதையும் காட்டும் விதமாக தான் மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் எடுத்து இருந்தார். அவரது எண்ணங்களை அநாயசமாக அப்படியே திரையில் வெளிப்படுத்தி இருந்தார் ஃபஹத் பாசில். இதன் மூலம், சமத்துவம் என்பது அவசியம் என்ற எண்ணம் சமூகத்தில் உருவாக வேண்டும், சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்ற எண்ணத்தை நாளைய தலைமுறையினரிடையே விதைக்க வேண்டும் என்பதே மாமன்னன் படத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
தடம்புரண்ட கருத்து:
சமூகத்திற்கு மிகவும் அவசியமான கருத்தை சொல்ல வந்த மாமன்னன் திரைப்படம் தற்போது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களும் தங்களது சாதிய பெருமைகளை பேசுவதற்காக ரத்னவேலுவின் கதாபாத்திரத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அவர்கள், இவர்கள் என்றெல்லாம் இன்றி, அனைத்து சமூகத்தினரும் இந்த செயலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அதேநேரம், சிலர் வேண்டுமென்றே மாரி செல்வராஜின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக, இந்த செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
When you cast an ultra charmer in #FahadhFaasil as a negative character…This is what happens.. the entire context just got flipped…
— The Illusionist (@JamesKL95) July 29, 2023
In some time:
Those fans: Sir, how about a spin-off with our fan favorite Rathnavelu.. ?#MaariSelvaraj: Thambi.. Thambi…😅 pic.twitter.com/MERfLcWvOO
இது தான் கிடைச்சதா?
மாமன்னன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், அந்த படத்தில் இருந்து கற்றுக்கொள்ளவும், வாழ்வியலுக்காக எடுத்துக்கொள்ளவும் நிறைய விஷயங்கள் இருந்தன. அதனை உள்வாங்குவதன் மூலம் சமூகத்தில் ஒரு நல்ல மனிதனாக வாழ்வதற்கான நல்ல ஆலோசனைகளையும் வழங்கியிருந்தது. ஆனால், அவற்றையெல்லாம் விடுத்து, இந்த சமூகத்தில் எப்படிபட்ட நபர் இருக்கக் கூடாது என மாரி செல்வராஜ் கூறியிருந்தாரோ? அந்த கதாபாத்திரத்தை தான் சிலர் கொண்டாடி வருகின்றனர். இது தற்போதைய இளைஞர்களின் மனநிலை எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்பதை காட்டுகிறது. என்னதான் கல்வி மூலம் நமது வாழ்வியல் முன்னேறி இருந்தாலும், இன்னும் சாதி பெருமையில் இருந்து பெரும்பாலானோர் முழுமையாக வெளிவரவில்லை என்பதை தான் இந்த சம்பவம் காட்டுகிறது.
— Cineversal Studios (@CineversalS) July 29, 2023
யார் தப்பு?
இணையதளங்களில் வெளியாகும் பதிவுகளுக்காக ரத்னவேலு கதாபாத்திரத்தில் நடித்த ஃபஹத் பாசிலை எல்லாம் தேடிச் சென்று குற்றம் சொல்ல முடியாது. ஒவ்வொருவரின் குடும்ப சூழல் தான் இதற்கு காரணம். என்னதான், இப்பலாம் யார் சார் ஜாதி பாக்குறாங்க என பொதுவெளியில் பேசிக்கொண்டாலும், எல்லா இடத்திலும் ஜாதி பார்க்கிறார்கள் என்பது தான் உண்மை. ஒருவேளை எங்கும் ஜாதிகள் பார்கப்படுவதில்லை என்பது உண்மை என்றால், ஊரில் உள்ள எல்ல சாதியின் பெயரிலும் ஏன் மேட்ரிமோனி செயலிகள் மூலமான வணிகம் படு ஜோராக நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே, இங்கு சாதிகள் அல்ல ஜனங்கள் தான் முக்கியம் என ஒவ்வொருவரும் உணரும் வரையில், இந்த சாதிய ரீதியிலான சில்லரைத்தனமான பதிவுகள் என்பது வந்து கொண்டு தான் இருக்கும். அந்த வன்மங்களால் விளையும் மோசமான நிகழ்வுகளையும் நாம் கண்கூடாக பார்க்க வேண்டி தான் இருக்கும்.
கொஞ்சம் மாத்தி பேசுங்களேன்..!
இன்றைய இளைஞர்களின் பெரும்பாலான பெற்றோர் மத்தியில் இந்த சாதியின் தாக்கத்தை நம்மால் காண முடியும். அவர்களிடம் எடுத்துச் சொல்லி புரிய வைப்பதும், அவர்களை மாற்ற நினைப்பதும் கடினமானது என்பதோடு அவசியமில்லாததும் கூட. ஆனால், அடுத்த தலைமுறையின் பெற்றோராக உள்ள இன்றைய இளைஞர்கள், தங்களது பிள்ளைகளுக்கு இந்த சமூகம் தொடர்பாக கொடுக்க உள்ள அனுபவம் மிகவும் அவசியமானது. முந்தைய தலைமுறை பெற்றோரை போல அல்லாமல், சக மனிதனை சாதி, மதம் ஆகியவற்றை கொண்டு அடையாளப்படுத்தக் கூடாது எனவும், ஒவ்வொருவரையும் சக மனிதனாக மட்டுமே பார்த்து மதிக்க வேண்டும் எனவும், அடுத்த தலைமுறைக்கான பெற்றோர் பேச வேண்டியது தான் தற்போதைய சூழலில் மிகவும் அவசியமானது. நாளைய தலைமுறையை சாதி, மதம் எனும் மோசமான கட்டமைப்புகளிடமிருந்து விடுபட வேண்டுமென்றால், அவர்களது பெற்றோர் இந்த மாற்றத்தை முன்னெடுக்க வேண்டியது மட்டுமே தற்போது முதற்கட்ட அவசிய நடவடிக்கையாகும்.