Fahadh Faasil: வீட்டு டைனிங் டேபிளில் சினிமா பேச்சு எதுக்கு? அஜித் வழியில் அட்வைஸ் செய்த ஃபகத்: கொண்டாடும் ரசிகர்கள்
Fahadh Faasil and Ajith Kumar: நடிகர் அஜித் குமார், நடிகர் ஃபகத் ஃபாசில் இருவரும் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில், ‘ரசிகர்கள் திரையரங்கிற்கு வெளியே சினிமாவைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.’ என்று சொல்லியிருந்தார். ஃபகத்தின் ரசிகர்கள் அவருடைய சிந்தனையை கொண்டாடி வருகின்றனர். இப்படியிருக்க, தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவரான அஜித், அவரது சினிமா பயணத்தின் தொடக்கத்தில் அளித்த பேட்டியில், ‘ரசிகர்கள் யாரும் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.’ என்று சொல்லியிருப்பார்.
நடிகர்கள் அஜித், ஃபகத் இருவரும் பேசிய வீடியோவை மெர்ஜ் செய்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். இருவரும் ரசிகர்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அஜித் தனது ரசிகர்களுக்கு இதையே வலியுறுத்தி வருவதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு இருவரின் சிந்தனையையும் கொண்டாடி வருகின்றனர்.
நேரம் திரும்ப கிடைக்காது
அஜித் குமார் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியது முதலே ரசிகர்கள் தன்னை அதிகமாக கொண்டாடுவதை அதிகம் விரும்பாதவர். அஜித் குமார், தன்னை ‘தல’ என அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். இவருக்கான ரசிகர் பட்டாளம் ரொம்பவே க்ரேசியானது. இந்நிலையில், ‘நீயா.. நானா..’ புகழ் கோபிநாத் அஜித் குமாரை நேர்காணல் செய்ததில் குறிப்பிட்ட பகுதியை ரசிகர்களுக்கு ரீல்ஸ்களில் பகிர்ந்து கொண்டாடி வருவது வழக்கம். அந்த வீடியோவில் அஜித் பேசுகையில்,’ ரசிகர்களாக இருக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், நேரம் பொன் போன்றது. அதை வீணடித்துவிட்டால் திரும்ப கிடைக்காது. ரசிகர்கள் அவர்களுக்கான நேரத்தை நன்றாக பயன்படுத்த வேண்டும். நேரத்தை இழந்துவிட்டால் எதை கொடுத்தும் திரும்ப பெற முடியாது. ரசிகர்கள் நேரத்தை வீணடிக்காமல் பாசிடிவாக பயன்படுத்த வேண்டும்.’ என்று தெரிவித்திருந்தார்.
டைனிங் டேபிளில் சினிமா வேண்டாமே
ஆவேசம் திரைப்படத்தில் ஃபகத் ஃபாசிலின் ‘ரங்கா’ கதாபாத்திரம் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் ஃபகத் நேர்காணலில் பல விசயங்கள் குறித்து பேசியுள்ளது ரசிகர்களை கூடுதலாக மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேர்காணல் ஒன்றில் அவர் பேசுகையில், “ ரசிக்கும்படியான திரைப்படங்களை கொடுப்பேன் என ரசிகர்களுக்கு என்னால் உறுதியளிக்க முடியும். அவர்கள் திரையரங்குகள் தவிர மற்ற வேளைகளில் சினிமா பற்றியோ, என்னைப் பற்றியோ நினைக்க வேண்டாம்; பேச வேண்டாம். வீடுகளில் டைனிங் டேபிளில் சினிமா பற்றி பேச வேண்டாம். சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பு வழியில் அதைப் பற்றி பேசுவது நல்லது; ஆனால், அதற்குமேல் அதிகமாக சினிமா பற்றி பேச வேண்டியதில்லை. என்னைப் பற்றியோ, நான் வாழ்வில் என்ன செய்கிறேன் என்பது பற்றியோ சீரியஸாக கவனிக்க வேண்டியதில்லை” ரசிகர்கள் அவரவர் வாழ்கையில் கவனம் செலுத்தலாம் என்பது போன்று பேசியிருப்பார்.
அஜித், ஃபகத் இருவரும் ரசிகர்களின் வாழ்க்கை குறித்த அக்கறையில் இப்படி பேசியிருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சினிமா என்றாலும் அதிகமாக ஒருவரை வோர்ஷிப் செய்ய வேண்டியதில்லை என்பதை வலியுறுத்தும் இருவரின் ரசிகர்களாக இருப்பதில் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று ரசிகர்கள் இருவரின் வீடியோவும் இணைந்த ரீல்ஸை பகிர்ந்து வருகின்றனர்.