Vijayakanth: தீவுத்திடல் கொண்டு செல்லப்பட்டது விஜயகாந்த் உடல்.. அஞ்சலி செலுத்த திரண்டு வரும் மக்கள் - பலத்த பாதுகாப்பு
Vijayakanth: விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் இடம் குறித்து அவரது குடும்பத்தாருடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே கடந்த நவம்பர் 18 ஆம் தேதி லேசான காய்ச்சல், சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டதட்ட 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின் அவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவர் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் அவருக்கு கொரோனா இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6.10 மணியளவில் விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து தேமுதிக அலுவலகம் கொண்டுவரப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு நேற்று காலை முதல் திரைத்துறை பிரபலங்களும், கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வந்தனர். கோயம்பேடு பகுதியில் கட்டுக்கடங்காமல் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இன்று மாலை விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதால் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இதற்கிடையே விஜயகாந்த் உடல், ராஜாஜி அரங்கில் வைக்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் இடம் குறித்து அவரது குடும்பத்தாருடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று அதிகாலை மணிக்கு தீவுத்திடலுக்கு எடுத்து செல்லப்பட்டது. காலை 6 மணி முதல் நண்பகல் 1 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருக்கும்,
இதன் பின்னர் மதியம் 1 மணிக்கு தீவுத்திடலில் இருந்து புறப்பட்டு, பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாலை 4.45 மணியளவில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தேமுதிக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவுத்திடலில் பாதுகாப்பு பணிக்காக 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.