‛முப்பது வருட தன்னம்பிக்கை நீங்கள்..’ உருகி உருகி ட்வீட் செய்த அஜித்தின் அடுத்தப்பட இயக்குநர்!
தன்னம்பிக்கை, பேரார்வம், இரக்கம், பணிவு, பணிவு, விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தான் இந்த மனிதனை 30 ஆண்டுகளாக மக்களின் இதயங்களை ஆள வைத்துள்ளது!
நடிகர் அஜித் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அவருக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1992 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பிரேம புத்தகம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் அஜித் 1993 ஆம் ஆண்டில் ரிலீசான அமராவதி படத்தின் மூலம் தமிழில் கால் பதித்தார். அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்த அவருக்கு 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இதன்பின்னர் காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, வில்லன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், அட்டகாசம், வரலாறு, பில்லா, மங்காத்தா, வீரம், விவேகம், வேதாளம், கடைசியாக வெளியான வலிமை படம் வரை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இன்றளவும் அஜித் திகழ்கிறார்.
தன் ரசிகர் மன்றத்தை கலைத்தது முதல் அவர்கள் ஆர்வம் மிகுதியால் ஏதாவது செய்யும் போது கண்டிப்பது வரை செய்வதால் அஜித் மீது பெரும்பாலும் அனைவருக்கும் நல்ல அபிப்ராயமே உள்ளது. இதனிடையே தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் 3வது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ள அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவும் கமிட் ஆகியுள்ளார். இந்த படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் ஐரோப்பிய நாடுகளில் அவர் மேற்கொண்ட பைக் பயணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
View this post on Instagram
இந்நிலையில் நடிகர் அஜித் திரையுலகில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அஜித்தின் அடுத்தப்பட இயக்குநரான விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் பதிவில், 30 ஆண்டுகால சிறப்பு!...முப்பது வருட தன்னம்பிக்கை...தன்னம்பிக்கை, பேரார்வம், இரக்கம், பணிவு, பணிவு, விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தான் இவரை 30 ஆண்டுகளாக மக்களின் இதயங்களை ஆள வைத்துள்ளது!
இன்னும் பல வருடங்கள் உனைப் பார்ப்பதில் மகிழ்ச்சியுடன் விரும்புகிறோம்... நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.