Vaadivaasal : திரைக்கதை ஒருபக்கம்.. இடையில் லண்டன் பயணம்.. முழுவீச்சில் வாடிவாசலுக்கு ரெடியாகும் வெற்றிமாறன்
ஒருபக்கம் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பும், மறுபக்கம் வாடிவாசல் படத்திற்கான பணிகளும் என பரபரப்பாக இருந்து வருகிறார் வெற்றிமாறன்.
ஒருபக்கம் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பும், மறுபக்கம் வாடிவாசல் படத்திற்கான பணிகளும் என பரபரப்பாக இருந்து வருகிறார் வெற்றிமாறன்.
வெற்றிமாறன் பிறந்தநாள்
இயக்குநர் வெற்றிமாறன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பொல்லாதவன் படத்தில் தொடங்கிய வெற்றிமாறன் இதுவரை ஆறு படங்களை இயக்கியிருக்கிறார். ஆறு ப்டங்களும் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஒவ்வொரு படத்தின் வழியாகவும் சினிமாவின் புதிய சாத்தியங்களை கண்டடைவதுடன் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தி வருகிறார் வெற்றிமாறன். இயக்குநராக ரசிகர்களைக் கொண்ட வெகு சிலரில் முக்கியமானவராக வெற்றிமாறன் கொண்டாடப்படுவதற்கு முழு காரணம், இவர் பார்வையாளர்களின் அறிவை குறைத்து மதிப்பிட்டு கதைகள் எழுதுவதில்லை. இவர் படங்கள் பல புதிய களங்களை, காலங்களை, காணாதவற்றை, ஆச்சர்யமானவற்றை யதார்த்தமாக பதிவு செய்கின்றன.
நாவல்களை, சிறுகதைகளை படமாக்குதல் என்பதை ஒரு ட்ரெண்டாகவே உருவாக்கினார். ஆனால் அவர் அளவுக்கு தற்கால இயக்குனர்கள் யாராலும் அந்த வித்தையை நேர்த்தியாக செய்ய முடியவில்லை. அதற்கு அவரது கலை நேர்த்தியும், கலை மீதுள்ள காதலும் முக்கியமானது.
விடுதலை 2
விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து இருக்கிறார் வெற்றிமாறன். இந்தப் படத்தின் சில காட்சிகள் தனக்கு திருப்தியாக இல்லாத காரணத்தினால் ஒரு சில காட்சிகளை மீண்டும் இயக்க முடிவு செய்தார் வெற்றிமாறன்.
இதன் விளைவாக வெற்றிமாறன் அடுத்து இயக்க இருந்த வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில காலம் தாமதமாகும் என தெரியவந்தது. ஆனால் விடுதலை படத்தின் வேலைகளை ஒரு பக்கம் பார்த்துக்கொண்டே, மறுபக்கம் வாடிவாசல் படத்திற்கான வேலைகளை தீவிரமாக செய்துவருவதாக தகவல் தெரியவந்துள்ளது.
வாடிவாசல்
சி.சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்கிற நாவலைத் தழுவி எடுக்கப்படும் படம் வாடிவாசல் . சூர்யா இந்த கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முன்னதாக வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு சில காலம் நடைபெற்று முடிந்தது. ஜல்லிக்கட்டை மையக் கதைக்களமாக கொண்ட படம் என்பதால் இந்தப் படத்தில் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
நடிகர் சூர்யா சொந்தமாக ஒரு காளையை வளர்த்து அதனுடன் சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார் என்னும் தகவலும் சுவாரஸ்யமாக வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன.
நிஜத்திற்கு நிகரான ஒரு ரோபோ காளையை உருவாக்கி அனிமேட்ரானிக்ஸ் என்கிற தொழில்நுட்பத்தின் மூலம் இந்தப் படத்திற்கான காட்சிகள் தயாராகி வருகின்றன. ஒரு பக்கம் விடுதலைப் படத்திற்கான வேலைகள் மறுபக்கம் வாடிவாசல் படத்திற்கான எழுத்துப் பணிகள் இதற்கிடையில் லண்டன் பயணம் என முழு ஓட்டத்தில் இருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.